பொருளாதார வீழ்ச்சியால் தத்தளிக்கும் ஐரோப்பிய நாடுகள்
உலகம் முழுவதும் 2007-ல் பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட போது பல நாடுகள் தவித்தன. பொருளாதாரம் எப்போது மீட்சியடையும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்தன.
2010-ல் பொருளாதாரம் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டது என ஐரோப்பாவும், அமெரிக்காவும் எண்ணி மகிழ்ச்சி கொண்டன. ஆனாலும் மீண்டும் பொருளாதார சுணக்கம் ஏற்பட்டது.
17 நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதும் அவற்றிற்கு பொது நாணயமாக யூரோ இருப்பதும் நமக்கு தெரிந்த சங்கதிதான். அமெரிக்காவில் ஏற்பட்டது போல ஐரோப்பாவிலும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது.
புதிய பொருளாதாரச் சிக்கல்கள் உருவாகின. ஆனாலும் பல நாடுகள் இதை வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை. பொருளாதாரம் ஸ்திரத்தன்மையோடு இருக்கிறது என அந்நாடுகள் காட்டிக் கொண்டன.
ஆனாலும் உண்மையை அடைத்து வைத்துக் கொண்டிருக்க முடியாதல்லவா? அயர்லாந்து, கிரீஸ், போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகள் மாபெரும் நெருக்கடிக்கு உள்ளானதை அந்நாடுகளே ஒத்துக் கொண்டன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனியைத் தவிர அனைத்து நாடுகளுமே பொருளாதார பின்னடைவால் தத்தளித்துக் கொண்டி ருக்கின்றன. இந்த நாடுகளைச் சேர்ந்த வங்கிகள் திவாலாகும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன.
அரசின் உறுதிப் பத்திரங்கள் கூட மதிப்பிழந்து விட்டன. நிலைமையைச் சமாளிக்க அந் நாடுகள் பல சலுகைகளை அறிவித்தன. வட்டி விகிதங்கள் குறைக்கப் பட்டன. ஆனாலும் பொருளாதார வளர்ச்சி இல்லை.
ஜெர்மனியும் பிரான்சும் ஐரோப்பிய நாடுகளில் வளமான நாடுகளாக இருந்தாலும் மற்ற நாடுகளுக்கு உதவுவதில் முனைப்பு காட்டுவதில்லை.
கடந்த 400 ஆண்டுகளாக உலகம் முழுவதும் ராணுவ ஆதிக்கமும் பொருளாதார ஆதிக்கமும் செலுத்தியவை ஐரோப்பிய நாடுகளே. 60 ஆண்டுகளுக்கு முன் அந்த செல்வாக்கை அமெரிக்கா அடைந்தது. தற்போது சீனா அடைந்து கொண்டு வருகிறது.
ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் மூக்கின் மேல் விரலை வைத்துக் கொண்டு ஆச்சரியத்தோடு பார்ப்பது இந்தியாவையும் சீனாவையும் தான்.
ஏனெனில் இந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இன்னமும் 7 சதவீதத்திற்கு மேல் இருந்து கொண்டிருக்கிறது.
தங்கவேல்