ஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்

நம் நாட்டிற்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதில் ஏற்றுமதியின் பங்கு முக்கியமானது. எனவே தான்  ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் அளித்து அரசு அவர்களை ஊக்குவித்து வருகிறது.
 
ஏற்றுமதி வளர்ச்சி வாரியங்கள் மூலம் பல்வேறு தகவல்கள் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் ஏற்றுமதியாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு, இந்தியா பிற நாடுகளுடன் கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றியும், அவற்றால் கிடைக்கும் சலுகைகள் பற்றியும் சரிவர தெரிவதில்லை.
அதே போல ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள நாடுகள் பற்றியும் அவர்களுக்கு தெரிவதில்லை. அது பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு சிரமப்படுகின்றனர். இதனால் ஏற்றுமதியாளர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், தொழில் வளர்ச்சிக்கான வழிகள் இவற்றை இழக்க நேரிடுகிறது.
ஏற்றுமதி வர்த்தகத் தகவல்களை அறியும் பிற நாட்டு ஏற்றுமதியாளர்கள் அவர்களுடைய ஏற்றுமதி வர்த்தகத்தை சிறந்த முறையில் செய்து வருகின்றனர். அது போல் இந்திய ஏற்றுமதியாளர்களும் அறிந்து செயல்பட இணையதளம் ஒன்று சென்ற ஆண்டு மத்தியஅரசால் துவக்கப்பட்டது.

http://www.trade.lift.ac.in
என்ற இணையதள முகவரிக்கு சென்றால்,இந்தியா மற்ற நாடுகளுடன் கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம், அதன்மூலம் கிடைக்கும் சலுகைகள், ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள நாடுகள் போன்றவற்றை அறிந்து செயல்பட முடியும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருளுக்கு தேவையான குறைந்தபட்ச தரம், அளவு குறித்த அந்நாடுகளின் விதிமுறைகள், தொழில் நுட்பத் தேவைகள், சான்றிதழ்கள், ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், லாபவிகிதங்கள் இவை பற்றிய தகவல்கள் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் முக்கிய வர்த்தக மையங்களாக விளங்கும்  இடங்கள் பற்றிய புள்ளி விவரங்களும்  இதில் இடம் பெற்றுள்ளன.
வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இந்திய நிறுவனம் இந்த இணையதளத்தை  பாராமரித்து வருகிறது.  மேலும் பல்வேறு கூடுதல் தகவல்கள் அவ்வப்போது சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் இந்திய ஏற்றுமதியாளர்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி வர்த்தகத் தகவல்களை அறிந்து சிறப்பாக செயல்படலாம்.
        
சுகுமார்

 

Issues: