தொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’

ஒரு தொழிலில் வெற்றி பெற பல்வேறு அம்சங்கள் தேவை. அறிவு, ஆற்றல் முதலீடு, தொழில் நிபுணர்கள் உள்ளிட்ட அம்சங்கள் தேவை. ஆனால் இவற்றை எல்லாம் ஒருங்கிணைக்க மனதிட்பம் வேண்டும். அதாவது மன உறுதி வேண்டும்.
 
எல்லாம் இருந்து மனதில் உறுதி இல்லை என்றால் வெற்றி சாத்தியமில்லை. தொழிலில் ஈடுபடும் ஒருவரின் மன உறுதியைப் பொறுத்தே அவரது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான் வள்ளுவர் ஒருவனின் மன திட்பமே வினை திட்பம் என்கிறார்.

வினைதிட்பம் என்பது ஒருவன் மனதிட்பம் மற்ற எல்லாம் பிற வள்ளுவர் காலத்தில் தொழிற்சாலைகள் கிடையாது. விஞ்ஞான இயந்திரங்கள் கிடையாது.
தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நவீன வசதிகள் எதுவும் வள்ளுவர் காலத்தில் கிடையாது. விவசாயம் மட்டுமே முக்கியப் பொருளாதாரம்.

விவசாயத்தை மையமாகக் கொண்டே அன்றைய  அரசுப் பொருளாதாரம் இயங்கியது. விவசாயிகள் கொடுக்கும் வரியே அன்றைய அரசுகளின் வருமான ஆதாரமாக இருந்தது.
விவசாய தொழில்  என்பது அவ்வளவு எளிமையான தொழில் கிடையாது. பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும். சரியான காலத்தில் மழை பெய்ய வேண்டும்.

விதைப்பு பணிகளுக்கும் அறுவடைப் பணிகளுக்கும் ஆட்கள் கிடைக்க வேண்டும். விளைந்த பொருட்களை முறையாகச் சந்தைப் படுத்த வேண்டும்.
அப்படியே சந்தைப் படுத்தினாலும் உரிய லாபம் கிடைக்க வேண்டும். மிகையான உற்பத்தி செய்து விட்டால் விலை குறைந்து பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டும். இவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டுதான் அன்றைய விவசாயம் நடந்தது.
அன்றைய காலத்தில் நிலக்கிழார்களே முதலாளிகளாகத் திகழ்ந்தனர். விவசாயம் முறையாக நடைபெறாமல் போனால் நிலக்கிழார் கூட ஆண்டி ஆகவேண்டிய சூழல் அன்றைய காலகட்டத்தில் இருந்தது.

நிலக்கிழார்கள் தான் தொழில் முனைவோர்களாகவும் திகழ்ந்தனர். அதனாலேயே விவசாயம் செய்யும் பரப்பு அதிகரித்தது. அன்றைய தொழில் முனைவோர்களான நிலக்கிழார்களின் மன உறுதிதான் அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
மன உறுதி இல்லாமல் செயல்பட்ட நிலக்கிழார்கள் ஆண்டி ஆன கதையும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதே கருத்தை இன்றைய நிலவரத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நவீனயுகம். அனைத்து வசதிகளும் நமக்கு இருக்கின்றன.

ஒவ்வொரு விஞ்ஞான கண்டு பிடிப்பும் உலகத்தை மாற்றியமைத்ததில் முக்கிய பங்கு வகிக்கிறது. அக்கண்டுபிடிப்புகள் கூட மன உறுதியின் வெளிப்பாடே.
உறுதியான மனம் கண்டுபிடிப்பாளர்களுக்கு அறிவு, தெளிவு, ஆற்றல் போன்றவற்றை வழங்குகிறது. இதனால் புதிய கண்டு பிடிப்பு அவர்களுக்கு எளிதில் சாத்தியமாகிறது. கண்டுபிடிப்பாளர்களைப் போலவே தொழில் முனைவோர்களும், தொழிலதிபர்களும் உலகை மாற்றியமைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.

புதுமையான தொழில் சிந்தனைகளை அவர்கள் நடைமுறைப் படுத்தியதால் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி கண்டது. இந்த மாபெரும் வளர்ச்சியும் மன உறுதியின் வெளிப்பாடே.
“மன உறுதி வாய்ந்த மனிதர்கள், படைக்கும் திறனுள்ள மனிதர்கள். பிரச்சனைகளைச் சந்திக்கும் போது வாழ்க்கையே  போய் விட்டது என்று வெறுத்து விட மாட்டார்கள்.
அடுத்து அதை எப்படிச் சமாளித்து வெற்றி பெறலாம் என்றுதான் சிந்திப்பார்கள். அவர்கள் சிந்தனையெல்லாம் எப்படி வெற்றி பெறுவது என்பதுதான்” என்று  என்வீ.பீல் என்பவர் மிகச் சரியாகச் சொன்னார்.

அதனால்தான் வள்ளுவரும் சொன்னார்.
வெள்ளத்து அணைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அணையது உயர்வு
நீரின் அளவு உயர உயர அதில் உள்ள மலரின் அளவும் உயருவது போல ஒருவரது உள்ளம் உறுதி ஆக ஆக அவனது வாழ்வின் நிலையும் உயர்ந்து கொண்டே போகும்.

புதிய தொழில் முனைவோர்கள் திருவள்ளுவரின் இந்தக் கருத்தை உள்வாங்கிக் கொள்வது மிகவும் நல்லது.
எந்தச் செயலைத் தொடங்கும் போதும் மன உறுதியோடு தொடங்குங்கள். சில சமயம் தோல்வி ஏற்படக்கூடும். அத்தோல்வியைக் கண்டு கலக்கமடையாமல் அதை ஒரு அனுபவமாக எண்ணிக்கொள்ளுங்கள். அப்போது மீண்டும் தவறு நிகழாது.
வள்ளுவர் கூறுகிறார்:
மடுத்தவாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

இதன் பொருள் என்ன வெனில், மேடு பள்ளங்களில் தடை ஏற்பட்டாலும் வண்டிமாடு கொஞ்சமும் தளராமல் வண்டியை இழுத்துச் செல்கிறது. இதே போன்ற மனநிலையை மனிதன் கொண்டால் துன்பம் விலகிப் போய்விடும்.
எனவே புதிய தொழில் முனைவோர்கள் ஆனாலும் சரி, தொழிலதிபர்கள் ஆனாலும் சரி. எப்போதும் மன உறுதியைக் கைவிடக் கூடாது. அவ்வாறு இருந்தால் எப்போதும் வெற்றி மேல் வெற்றிதான்.  

சந்திரசேகர்

 

Issues: