கர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு!

கர்நாடக மாநிலம்  சாம்ராஜ்நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1,595 ஏக்கர் தொழிற்பூங்காவில் தமிழகத்தை  சேர்ந்த முதலீட்டாளர்கள் சுமார் 12ஆயிரம்  கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர் என்கிற செய்தி கர்நாடக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உரிய காலத்தில் தண்ணீர் தராமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடகாவில், தமிழர்கள் முதலீடு செய்திருப்பது அம்மாநில மக்களுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும்?
 
இத்தொழிற்பூங்காவை கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கடந்த ஜுன் மாதம் திறந்து வைத்தபோது  ‘கர்நாடகா - தமிழ்நாடு இடையே அரசியல் ரீதியாக துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்து உள்ளன.
 

இந்நிலையில் பல்வேறு தடைகளைத் தாண்டி கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்துள்ள தமிழக முதலீட்டாளர்களுக்கு முழு பாதுகாப்பும் ஒத்துழைப்பும் அளிக்கப்படும்.’ என உறுதி அளித்தார்.
  

இந்த தொழிற் பூங்காவில் கிரானைட், ஜவுளி, தோல், ஆட்டோமொபைல், வேளாண்மை, உணவு பதனிடுதல், ஆயுர்வேத மருந்துகள், சிறு தொழில்கள் இவற்றின் ஆலைகள் அமைக்கப்     படுகின்றன.
இன்னும் 6 மாதங்களில் முழுமையாக செயல்பட  உள்ள இந்த தொழில் பூங்கா மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கர்நாடக அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது.
  

தொழில் முதலீட்டைத் திரட்ட, கர்நாடக முதல்வர் சித்தாராமையா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவையில் முதலீட்டாளர் கூட்டம் நடத்தி, கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்யுமாறு     அழைப்பு விடுத்தார்.
இதன் பின் கடந்த 15 மாதங்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300 தொழில் முதலீட்டாளர்கள், தங்களது தொழில் விரிவாக் கத்திற்காக தமிழகத்தை தவிர்த்து விட்டு,சாமராஜ்நகர் தொழிற்பூங்காவில் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்ட சாமராஜ்நகர் தொழிற்பூங்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு 1 ஏக்கர் நிலத்தை  ரூ.39.5 லட்சத்துக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கியுள்ளது.
       இதுவே தமிழக முதலீட்டாளர்கள் இப் பகுதியில் தொழில் துவங்க ஆர்வம் காட்டியதற்கு காரணம் என்று சொல்லப் படுகிறது.
      மேலும் கர்நாடகத் தில் நில மதிப்பு, மின் கட்டணம் போன் றவை தமிழகத்தை விட குறைவு என்பதும் ஒரு முக்கிய காரணம்.
கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருந்து, இரண்டு மணி நேர பயண தூரத்தில் தான் உள்ளது. இதுவும் ஒரு முக்கிய அம்சமாகும்.

‘தமிழகத்தில் ஈட்டிய லாபத்தை, மேலும் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பன்னாட்டு நிறுவனங் களைப் போல, உள்ளூர் தொழில்முனை வோரும், வெளி மாநிலத்தில், முதலீடு செய்வது சரியா’ என கேள்வி எழுப்புகின்றனர் தமிழகத்தின் சமூக ஆர்வலர்கள்.

கோவை தொழில் வர்த்தக சபை துணைத் தலைவர் நந்தகுமார், ‘கர்நாடகாவில் கிடைக்கும் மூலப்பொருளைக் கொண்டு, தொழில் செய்யத் தான் அங்கு செல்கிறோம். தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், கூடுதலான தொழில், முதலீடு, அதற்கான பாதுகாப்பு என்பதை முன்னிட்டுதான் கர்நாடகாவில் முதலீடு செய்கின்றனர். இதனால், தமிழகத்தில் உள்ள தொழில்கள், இடம் பெயர்ந்துவிடாது’ என்று கூறியுள்ளார். பொருளாதார வல்லுனர் ஜோதி சிவஞானம் ‘தமிழகத்தில் இருந்து, தொழில் முதலீடு வெளிமாநிலத்துக்கு செல்கிறது என்றால், அதற்கு அடிப்படை காரணம்,வெளிமாநிலத்தில் நிலவும் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தத்தான்.  

இந்தியாவில், அன்னிய முதலீடு வரும் அதே வேளையில் நமது நாட்டு முதலாளிகளும் அன்னிய நாட்டில் முதலீடு செய்கின்றனர்.அதுபோலவே தமிழக முதலீடும்  கர்நாடகம் செல்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்‘ என்று கூறியுள்ளார்.

தமிழகம் வந்து கர்நாடக முதல்வர் சித்தாராமையா தமிழக முதலீட்டை ஈர்த்ததைப் போல, தமிழக முதல்வரும் கர்நாடகம் சென்று முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதை தமிழக முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

அருள்

 

Issues: