பொருளாதாரம் வளர்வதற்கான ஆய்வுகள் தேவை..
இன்றைய கால சூழலில் முனைவர் பட்டம் (பி.எச்டி) பெறுவதற்காக பலரும் தேர்ந்தெடுக்கும் தலைப்பு இலக்கியம் சார்ந்ததாகவே இருக்கிறது. இலக்கிய வகைகளான கதை, கவிதை, சிறுகதை, நாவல் போன்றவை மக்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்கும், அறிவை விருத்தி செய்து கொள்வதற்கும் தேவைதான் என்றாலும், முனைவர் பட்டம் பெற நினைப்பவர்கள் அதை
ஆய்வு செய்வதால் சமுதாயத்திற்கு பெரும் பலன் ஒன்றும் கிட்டப்போவதில்லை.
ஓர் ஆராய்ச்சி தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும். ஜப்பான் போன்ற நாடுகளுக்கு நீங்கள் பயணம் செய்தால், அவர்கள் ஆய்வுக் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.
தொழில் நுட்பம், அறிவியல், மருத்துவம், விவசாயம், பொருளாதாரம் போன்ற மனித சமுதாயத்திற்கு மிகுந்த பலன் தரக்கூடிய துறைகளையே அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கெல்லாம் புதுப்புது கண்டுபிடிப்பு நிகழ்வதற்குக் காரணமே இத்தகைய ஆய்வுதான். இத்தகைய புதுக்கண்டுபிடிப்புகளால் அந்நாடுகளின் பொருளாதாரம் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
நமது நாட்டு பல்கலைக்கழகங்கள் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். சுதந்திரத்திற்கு முன்னரும் சுதந்திரம் கிடைத்த பிறகு 20 ஆண்டுகள் வரையும் நமது நாட்டுப்பல்கலைக் கழகங்கள் மேற்சொன்ன தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. உதாரணத்திற்கு ஒரு நிகழ்வை குறிப்பிடலாம்.
சுதந்திரத்திற்கு முன்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர் கில்பர்ட். அச்சமயத்தில் கும்பகோணம் நகர பகுதிகளில் குழந்தைப்பிறப்பு விகிதம் குறைந்திருந்தது. ஆணின் இறப்பு விகிதம் அதிகரித்திருந்தது. இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து தனது முனைவர் பட்டத்துக்காக ஆய்வை மேற்கொண்டார்.
அந்த ஆய்வின் முடிவில் உண்மை தெரிந்தது. அப்பகுதியில் பெண்களுக்கு புதிய வகையான பால்வினை நோய் பரவி இருந்தது. இதன் விளைவாக ஆண் இறப்பு விகிதம் அதிகரித்தது. மேலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது. இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில் அரசு சுகாதாரதுறை துரித நடவடிக்கை மேற் கொண்டது. இதனால் அப்பால்வினை நோய் ஒழிக்கப்பட்டது. இப்படிப்பட்ட ஆய்வுகள்தான் நமது நாட்டுக்கு தேவை.
முனைவர் பட்டத்துக்கு ஒரு கவிதை நூலை ஆய்வதால் சமூகத்துக்கு எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை என்பது தெரிந்திருந்தும் பலரும் அந்தப்பாதையிலேயே செல்வதைப் பார்க்கிறோம். சமூகத்திற்குப் பயன் அளிக்கக்கூடிய எத்தனையோ விசயங்கள் ஆய்வுக்காக இருக்கும்போது எதற்காக பயன்தராத தலைப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
கீழ்க்கண்ட தலைப்புகள் ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டால் நமது தேசத்திற்கு மிகுந்த பயன் கிடைக்கும்.
*மனித சமூகத்திற்கும், பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் மிகுந்த பயனளிக்கக்கூடிய திருக்குறளில் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆய்வுக்கு உப்படுத்தலாம்.
*பண்ட மாற்று முறை இருந்தபோது மிக உயர்ந்த நிலையில் இருந்த விவசாயிகள், பணமாற்று முறை வந்த பிறகு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தாழ்ந்து போனது ஏன்? தீர்வு என்ன?
*பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பி.டி. விதையின் மூலம் நன்மை அடைந்தார்களா? தீமை அடைந்தார்களா? தீமை அடைந்திருந்தால் தீர்வு என்ன?
*விளை நிலங்களை கிராம மக்களிடமிருந்து அரசும், பல தனியார் நிறுவனங்களும் கையகப்படுத்தவது உற்பத்தியைப் பெருக்குமா? வீழ்த்துமா?
*கூவம் போன்ற சுற்றுச்சூழல் கேடு நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம், கல்வித்தரம் உயர்வதற்கான வழிமுறைகள் என்ன?
*இந்தியாவில் 60 சதவீத மக்கள் விவசாய தொழிலை சார்ந்திருப்பவர்கள். இவர்கள் விளைவிக்கும் விவசாய பொருட்களைப் பற்றியும், விவசாய முறைபற்றியும் பள்ளிப் புத்தகங்களில் எந்தப் பாடமும் இல்லை. இது குறித்த கட்டுரைகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்கலமா? அல்லது நேரடியாக ஒரு வாரமாவது களப்பயிற்சி கொடுக்கலாமா? இதன் பயன்கள் என்ன?
*நமது நாட்டில் படித்த ஏழு கோடி பேர் மட்டுமே நிரந்தர வேலையில் இருக்கின்றனர். மற்றவர்களின் வாழ்க்கை நிலை என்ன? நடைபாதை வியாபாரிகள், சிறுகடை வியாபாரிகள் இவர்களின் நிலைமை என்ன? இவர்களது பொருளாதார நிலை எப்படி இருக்கிறது?
*தொழில் நிறுவனங்களை நிறுவி வெற்றி பெற்ற மாமனிதர்கள் எப்படி ஜெயித்தார்கள்? எத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றி முன்னேறினார்கள்? உதாரணமாக கிராமத்தில் துணிக்கடை வைத்திருந்த போத்தீஸ் இன்றைக்கு தமிழகத்தின் முன்னணி துணிக்கடையாக மாறியது எப்படி? சாதாரண உணவகமாக இருந்த சரவணபவன் இன்றைக்கு உலகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி இருக்கிறது. இது எப்படி சாத்தியமானது?
இவை போன்ற ஆய்வுகள் தான் இன்றைய சூழலுக்குத் தேவை. சீனா இன்றைக்கு உபரி பட்ஜெட் போடக்கூடிய அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்றால் அதற்குக்காரணம் மேற்சொன்னவை போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தியது தான். இந்நிலை நமது நாட்டிலும் உருவாக வேண்டும்.
சந்திரசேகர்