தமிழக பட்ஜெட் எப்படி? ஓர் அலசல்

இந்தியாவில் மற்ற மாநிலங்கள் யாவும் தங்களது பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு, கடைசியாக மார்ச் 25 ல் தமிழக சட்டசபையில் 2015-16 நிதியாண்டுக் கான பட்ஜெட்டை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு பயனளிப்பதாக அமைந்துள்ளதா என்பதை விரிவாகப் பார்ப்போம்.
மாநிலத்தின் மொத்த வருவாயில் பெரும்பகுதி மாநில அரசின் சொந்த வரிவருவாயே ஆகும். வணிக வரி, வாகனங்கள் மீதான வரி, ஆயத் தீர்வை, முத்திரைத்தாள், பத்திரப்பதிவு ஆகியன மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் முக்கியமானவை ஆகும்.
அடுத்து மத்திய அரசின் வரிவசூலில் இருந்து கிடைக்கும் பங்கு, மானிய நிதி போன்றவையும் மாநில அரசின் நிதி ஆதாரத்தை பெருக்கும் அம்சங்களாகும்.
இந்நிலையில் நிதிக்குழுவின் புதிய விதிமுறைகளால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வருவாயில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் பங்கு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள போதிலும் திட்டங்கள் மூலமாக வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளின் விளைவாக வரும் ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு 35,485 கோடி ரூபாய் அளவிற்கு மொத்த நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசுத் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத் தொகையில் கூடுதல் தொகையை மாநில அரசு ஏற்று செலவிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவேதான் ‘மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெற முடியும் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது. மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் 24 திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளன.
14வது நிதி ஆணையம் தமிழகத்திற்கு பெரும் அநீதியை இழைத்து விட்டது’ என்று முதல்வர் பட்ஜெட் உரையில் குற்றம் சாட்டியுள்ளார். நிதிச்சுமை உள்ள போதிலும் புதிய வரிகள் எதுவும் விதிக்காமல் ரூ 650 கோடிக்கு வரிச்சலுகை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்து. ‘வரும் ஆண்டில் 30,446 கோடி ரூபாய் கடன் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால், 2016 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் மாநில அரசின் மொத்த நிலுவைக் கடன் 2,11,483 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும்.
மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை அளவு மூன்று சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கூறிய மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த அளவு 2.89 சதவீதமாக மட்டுமே இருக்கும்.
மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் மொத்தக் கடன்களின் அளவு 25 சதவீதத்திற்குள்ளாக இருக்க வேண்டும் என்ற வரையறையைவிடக் குறைவாக, 19 சதவீதம் என்ற அளவிலேயே நமது மாநிலத்தில் உள்ளது.
கடினமான நிதிச்சூழல் நிலவினாலும் நிதிப்பற்றாக்குறையையும், மொத்த நிலுவைக்கடன் அளவையும், வரையறைகளுக்கு உள்ளாகவே கட்டுப்படுத்த இந்த அரசு கவனமாகச் செயல்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார் முதல்வர்.
விதிமுறை அனுமதிக்கிறது என்பதற்காக கடனை வாங்கிக் குவிக்கவேண்டும் என்ற அவசியமில்லை. 2011ல் 1 லட்சம் கோடியாக இருந்த அரசின் கடன் ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது.
அரசின் நேரடிக் கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.17,856 கோடியை தமிழக அரசு செலுத்த நேரிடுகிறது. அரசு வாங்கிக் குவிக்கும் கடன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் ரூ.57,053 கடன் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
2011 ம் ஆண்டில் 2,072 கோடி ரூபாயாக இருந்த வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்காண்டு கணிசமாக உயர்த்தப்பட்டு, வரும் நிதியாண்டில் இதுவரை இருந்திராத அளவாக 6,613 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றபோதிலும் இது போதுமானதல்ல என்கின்றனர் விவசாயிகள்.
‘தமிழகத்தின் மொத்த செலவினமான ரூ.1.47 லட்சம் கோடியில் வேளாண்மைத் துறைக்கு ரூ.6,613 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயம் மாநிலப் பட்டியலில்தான் வருகிறது. எனவே, இந்த துறைக்கு கூடுதல் ஒதுக்கீட்டை மாநில அரசு செய்ய வேண்டும்.
பட்ஜெட்டில் 20 சதவீதம் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்க வேண்டும். இதில் 10 சதவீதத்தை உணவுப் பொருட்கள் உற்பத்திக்கும், 10 சதவீதத்தை பயிர்க் காப்பீடு உள்ளிட்ட விவசாயிகளின் நலன்களுக்காகவும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்‘ என்பது விவசாயிகளின் கோரிக்கை.
இக்கோரிக்கை அடுத்த பட்ஜெட்டிலாவது பரிசீலிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
‘காவிரியின் குறுக்கே மேகதாதுவில் சட்டத்துக்குப் புறம்பாக அணை கட்ட கர்நாடகம் முயற்சி மேற்கொள்கிறது. இதைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
அணை கட்ட கர்நாடகம் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்க சட்ட ரீதியான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்’ என்று முதல்வர் தெரிவித்திருப்பதை கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் வரவேற்றிருக்கின்றனர்.
மற்ற மாநிலங்கள் பள்ளிக்கல்வித் துறைக்கு குறைவான நிதியை ஒதுக்கிய நிலையில், தமிழகஅரசு இத்துறைக்கு 20,936கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழகம் உச்ச நிலையை அடையும் என தமிழக அரசு நம்புகிறது.
தமிழகத்தில் சுமார் 85 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். தமிழக அரசுத் துறைகளில் சுமார் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இத்தகைய சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனம் நியாயமானதே. எனினும்,இரண்டு லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு ஓரளவுஆறுதலை தந்துள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னரின் வாழ்க்கை நிலையை உயர்த்த ஆதிதிராவிடர் துணை திட்டத்துக்கு ரூ.11 ஆயிரத்து 274 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகை 2015-16-ம் ஆண்டின் திட்ட ஒதுக்கீட்டில் 20.46 சதவீதமாகும். அதேபோல் பழங்குடியினர் துணை திட்டத்துக்கு ரூ.657.75

தமிழக பட்ஜெட் 2015 - 16-ன் முக்கிய அம்சங்கள்

 மதிப்புக்கூட்டு வரியில் உள்ள 3% உள்ளீட்டு வரி
திரும்பப் பெறப்படும்
 உயிரி எரிபொருள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம்
மீதான வரி விலக்கப்படும்
 கொசுவலைகளுக்கான மதிப்புக்கூட்டுவரி விலக்கிக்
கொள்ளப்படுகிறது
 ஏலக்காய் மீதான வரி 2% குறைப்பு
 மீன்பிடி கயிறுகள், மிதவைகளுக்கான மதிப்புக்கூட்டு
வரி ரத்து
செல்போன்கள் மீதான மதிப்புக்கூட்டு வரி 14.5%-ல்
இருந்து 5% ஆக குறைப்பு
 எல்.ஈ.டி. விளக்குகளுக்கான மதிப்புக்கூட்டு வரி 5%
ஆக குறைப்பு
 வரிக்குறைப்பு மூலம் அரசுக்கு ரூ.650 கோடி
இழப்பு
 மோட்டார் உதிரி பாகங்களுக்கான வரி 5% குறைப்பு
 பொருளாதார தேக்க நிலையால் மாநிலத்தின் வரி
வருவாய் கடந்த 2 ஆண்டுகளாக உயரவில்லை
 மத்திய அரசின் நிதி உதவி பெருமளவு
குறைந்துள்ளது
 14-வது நிதி ஆணையத்தின் புதிய விதிமுறைகளால்
தமிழகத்துக்கான நிதிஅளவு குறைந்துள்ளது.
 2015-...16 நிதியாண்டுக்கான திட்ட நிதி ஒதுக்கீடு
ரூ.55,100 கோடி
மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி மூலம் 24 மாவட்டங்களில்
ரூ.181 கோடி செலவில் பல்வேறு திட்டங்கள்
செயல்படுத்தப்படும்.
 ஊராட்சி கூட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.255 கோடி
ஒதுக்கீடு
 காவல்துறை வளர்ச்சிக்கு ரூ.5568.81 நிதி கோடி
ஒதுக்கீடு
 சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.165 கோடி
ஒதுக்கீடு
 தீயணைப்புத் துறைக்கு ரூ.10.78 கோடி நிதி
ஒதுக்கீடு
 169 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல்
 அடுத்த நிதியாண்டில் 3.2 லட்சம் மக்களுக்கு வீட்டு
மனை பட்டா
 வேளாண் துறைக்கு ரூ.6613.68 கோடி நிதி ஒதுக்கீடு
 இந்த ஆண்டு 12,000 கறவைப் பசுக்கள், 6 லட்சம்
செம்மறி ஆடுகள் வழங்கப்படும்
 மீன்வளத் துறைக்கு ரூ.278 கோடி நிதி ஒதுக்கீடு
 மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை
தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்
 மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு
வழங்கப்படும் நிதியுதவிக்காக ரூ.183 கோடி நிதி
ஒதுக்கீடு
 பொது விநியோக திட்டத்தில், உணவு மானியத்துக்கு
ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு
 உணவு தானிய சந்தை விலை கட்டுப்பாட்டுக்கு
ரூ.100 கோடி ஒதுக்கீடு
 நதி நீர் இணைப்புக்கு ரூ.253.5 கோடி நிதி
ஒதுக்கீடு
 மின்சார துறைக்கு ரூ.13,586 கோடி நிதி
ஒதுக்கீடு
 நெடுஞ்சாலை துறைக்கு ரூ.8828 கோடி நிதி
ஒதுக்கீடு
 வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை
உருவாக்க ரூ.1.5 கோடி ஒதுக்கீடு
 டீசல் மானியங்களுக்காக ரூ.500 கோடி நிதி
ஒதுக்கீடு
 மாணவ, மாணவி இலவச பயணத்துக்காக ரூ.480
கோடி ஒதுக்கீடு
 கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5422
கோடி நிதி ஒதுக்கீடு
 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3926
கோடி நிதி ஒதுக்கீடு
 குக்கிராமங்கள் மேம்பாட்டுக்கு ரூ.750 கோடி நிதி
ஒதுக்கீடு
 சூரிய ஒளி பசுமை வீடு திட்டத்தில் மேலும் 60,000
வீடுகள் கட்ட ரூ.1260 கோடி ஒதுக்கீடு
 ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு
ரூ.750 கோடி ஒதுக்கீடு
 சென்னை மாநகர வளர்ச்சிக்கு ரூ.500 கோடி நிதி
ஒதுக்கீடு
 தமிழகத்தில் உஷீமீள 12 மாநகராட்சிகளையும்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்க ரூ.400 கோடி
நிதி ஒதுக்கீடு
 மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.615.78 கோடி
நிதி ஒதுக்கீடு
 ஏழை கர்ப்பிணிப் பெண்கள் நிதியுதவி திட்டத்துக்கு
ரூ.668 கோடி நிதி ஒதுக்கீடு
 2 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
 முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு
திட்டத்துக்கு ரூ.781 கோடி ஒதுக்கீடு
 பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி
நிதி ஒதுக்கீடு
 சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு ரூ.183 கோடி நிதி
ஒதுக்கீடு
 அன்னதான திட்டம் மேலும் 206 கோயில்களுக்கு
விரிவாக்கம்
 12,609 அங்கன்வாடி மையங்களுக்கு சமையல்
எரிவாயு இணைப்பு
 பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.140
கோடி நிதி ஒதுக்கப்படும்.
 விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி
வழங்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.
 இலவச மடிக் கணினி திட்டத்துக்கு ரூ.1100 கோடி
நிதி ஒதுக்கீடு.
 சிறுபான்மையினர் நலன் காக்க ரூ.115 கோடி நிதி
ஒதுக்கீடு.
 இலங்கை தமிழர் நலனுக்கு ரூ.108 நிதி ஒதுக்கீடு.
 நேரு விளையாட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு
12 கோடி ரூபாயில் விளையாட்டு வளாகம்

கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வரும் நிதி ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீட்டில் 1.19 சதவீதமாகும். 20 சதவீத ஒதுக்கீடு என்பது எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்றாகும். எனவேதான் இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5 ஆயிரத்து 422 கோடியே 7 லட்சமும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3 ஆயிரத்து 926 கோடியே 32 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களோடு மிகுந்த நெருக்கத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய விசயம். மின்சார துறைக்கு ரூ.13,586 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதிய மின்திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
இதன் மூலம் மாநிலத்தின் முழு மின்தேவைக்கு பிற மாநிலங்களையே சார்ந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. சுகாதார துறைக்கு 8248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது மிகவும் குறைவு எனவும், மொத்த ஒதுக்கீட்டில் சுகாதாரத் துறைக்கு 10 சதவீதம் அளிக்கப்படும் போதுதான் பெருகி வரும் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய முடியும் எனவும், ஆனால், 4.52 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
இந்த விமர்சனம் நியாயமானதே என்றாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம்தான் இந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சுகாதார துறைக்கு மற்ற மாநிலங்களை விட அதிக நிதியை ஒதுக்கிய தமிழக அரசு, டாஸ்மாக் மூலம் ரூ.29,672 கோடி வருவாய் கிடைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
மதுவிலக்கை அமல்படுத்த போராட்டங்கள் தீவிரமாகியுள்ள நிலையில் டாஸ்மாக் வருவாயை உயர்த்த இலக்கு நிர்ணயித்திருப்பது கவலை அளிக்கிறது.
தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023ல் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட வேண்டும். திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை 5 விழுக்காடு அளவுக்குக் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. நெருக்கடியான நிலையில் அரசின் நிதிநிலைமை இருப்பதே இதற்கு காரணம்.
கடந்த 4 ஆண்டுகளில் 31 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக கூறப் பட்டுள்ளது. இதன் மூலம் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தெளிவான விவரம் இல்லை. மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் ஈர்த்துள்ள முதலீட்டு அளவு குறைவே.
வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பது அவசியம். வரும் மே மாதம் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேலும் முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு வளர்ச்சி 2015–2016–ம் ஆண்டில் 9 சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டுமெனில் கூடுதல் முதலீடுகள் பெறுவது அவசியமாகிறது.
சுந்தர்

Issues: