கடன்

நமக்கு பணதேவை எப்போது வரும் என்று சொல்ல முடியாது. எதிர்பாராத நிகழ்வுகள் நிகழும்போது திடீரென பணம் தேவைப்படும். அத்தகைய சூழ்நிலைகளில் உதவுபவை நாம் சேமித்து வைத்திருக்கும் பணம்தான். சேமிப்பு இல்லாதபோது வட்டிக்கு கடன் வாங்க நேரிடும். வங்கி அல்லாத பிற நபர்களிடம் கந்து வட்டிக்கு வாங்கி பணம் செலவு செய்தால் கடனாளியாவது நிச்சயம். சம்பாதிக்கும் பணத்தில் வட்டிக்கே பெரும்தொகை சென்று விடும். எனவே அவசர தேவைக்கு பணம் பெற கந்து வட்டியை நாடாமல் வேறு வழியை நாடுவதே சிறந்தது. வேறு வழிமுறைகள் என்னென்ன? பொதுவாக நமது இந்தியர்களிடம் கொஞ்சமாவது தங்க நகைகளோ அல்லது நாணயங்களோ இருக்கும். அவசர காலங்களில் தங்கத்தை அடகு வைத்து வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டிக்கு விரைவில் பணம் பெறலாம். உங்களிடம் கிரடிட் கார்டு இருந்து பணதேவை ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால் அந்த கார்டை கொண்டு பணம் செலவு செய்யலாம். கடனாக பெற்ற பணத்தை உரிய தேதியில் செலுத்திவிட்டால் வட்டியின் பிடியிலிருந்து தப்பித்துவிடலாம். இல்லையெனில் 24 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வட்டி கட்ட நேரிடும். நீங்கள் கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு திட்டம் போன்றவற்றில் முதலீடு செய்து இருந்தால் அந்த பத்திரத்தை கொண்டு வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்து பணத்தை பெறலாம். இதன் வட்டி தனி நபர் கடன் மற்றும் கிரடிட் கார்டு இவற்றிற்கான வட்டியை விட மிகவும் குறைவே. வங்கிகளில் நீங்கள் கணக்கை பராமரித்து கொண்டிருந்தால் எளிதாக தனிநபர் கடன் கிடைக்கும். இதற்கான வட்டி, வங்கிகளை பொறுத்து 12 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை இருக்கும். அவசர பண தேவைக்கு மேற்சொன்ன பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இவற்றில் தனி நபர் கடன், கிரடிட் கார்டு இவற்றிற்கான வட்டி விகிதம் அதிகம். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு அவசர கால தேவைக்கு கடன் வாங்குவதை முடிவு செய்யுங்கள். எக்காரணத்தை கொண்டும் கந்து வட்டிக்கு பணம் வாங்கி விடாதீர்கள்.

Issues: