ஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை!

ஆட்டோமொபைல் உற்பத்தியில் சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவின் பங்களிப்பு உள்ளது.
ஆட்டோமொபைல் சந்தையில் உலக அளவில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது என்றால் அதற்கு காரணம் தமிழகம் தான். ஆட்டோமொபைல் தயாரிப்பில் தமிழகத்தின் பங்கு மட்டும் 35 சதவீதமாக உள்ளது. குறிப்பாக சென்னை ஆசிய அளவில் ஆட்டோமொபைல் தொழிலின் தலைமையகமாக திகழ்கிறது.
தமிழகத்தில் ஆட்டோமொபைல் தொழில் பாரம்பரியமாக இருந்து வருகிறது. 1840-ம் ஆண்டில் சிம்சன் நிறுவனம் முதன் முதலில் ஆட்டோமொபைல் தொழிலில் இறங்கியது. 1948-ல் அசோக் லேலண்டு நிறுவனமும், 1955-ல் ரயில் பெட்டித் தொழிற்சாலையும் ஆரம்பிக்கப்பட்டன. 1960-ம் ஆண்டு டி.வி.எஸ். நிறுவனம் ஆட்டோமொபைல் தொழிலில் முதல் அலையை ஏற்படுத்தியது.
1991-ம் ஆண்டு இந்தியஅரசு தாராளமய பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்திய பிறகு தமிழக அரசு, புதிய தொழில் கொள்கையைக் கொண்டு வந்தது. அப்போது போர்ட், ஹூண்டாய் உள்ளிட்ட கார் தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வந்தன.
தற்போதைய நிலையில் அனைத்து முன்னணி கார்நிறுவனங்களும் சென்னையில் தொழிற்சாலைகளை நிறுவி உள்ளன. இதனால் சென்னையில் ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் கார்களும், 3.60 லட்சம் வர்த்தக ரீதியான வாகனங்களும் தயாராகின்றன. வேறுவகையில் சொல்வதென்றால், ஒரு நிமிடத்துக்கு 3 கார்களும், 75 வினாடிக்கு 1 வர்த்தக ரீதியான வாகனமும் தயாரிக்கப்படுகின்றன.
2012-ல் தமிழக அரசு வெளியிட்ட புதிய தொழில் கொள்கையில், ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்கள் தொழிற்சாலைக்கென பிரத்யேக தொழில் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழக ஆட்டோமொபைல்துறை மேலும் புத்தாக்கம் பெற்றது.
ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்தியா மிகவும் சிறந்து விளங்கினாலும் விற்பனையை பொறுத்தவரை, சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு.
வாகனங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமெனில் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படவேண்டும்.மக்களின் வருமானம் பெருக வேண்டும்.

Issues: