காஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு

காஃபி மழை காப்பீட்டுத் திட்டமானது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. மத்திய காஃபி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனைப்படி இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழையின் போக்கை நிர்ணயம் செய்து இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு இத்திட்டத்தின் மூலம் கூடலூர் காஃபி விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் போடி, ஏற்காடு, வத்தலகுண்டு, பெருமாள்மலை ஆகிய ஊர்களைச் சேர்ந்த 56 விவசாயிகளுக்கு ரூ 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. 2010ம் ஆண்டிற்கு பண்ணைக்காட்டு மண்டலத்தைச் சேர்ந்த 365 விவசாயிகளுக்கு ரூ 6.70 லட்சமும், ஆடலூர் மண்டலத்தைச் சேர்ந்த 48 விவசாயிகளுக்கு ரூ 60,800 ரூபாயும் வழங்கப்பட்டது. 2011ம் ஆண்டிற்கு தமிழக விவசாயிகளுக்கு ரூ5.19 லட்சம் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

மழையினால் ஏற்படும் இழப்பினை விவசாயிகளுக்கு சரிகட்டவே இத்திட்டம் தோற்றுவிக்கப்பட்டது. பின்வரும் காப்பீட்டு முறையினை விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் தேந்தெடுக்கலாம்.

பூ கால பருவ மழை
காஃபி பயிரிடும்போது முதலில் இலை மற்றும் பூ துளிர்க்கும். இக்காலகட்டத்தில் (மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரை) ஒரு வார காலத்தில் 25 மில்லி மீட்டர் மழை அளவிற்கும் குறைவாக இருந்தால் நஷ்ட ஈடு வழங்கப்படும்.
 

பழக்கால பருவமழை
காஃபி பயிர் நன்கு வளர்ச்சியடைந்து வரும் காலத்தில் இரண்டு நாட்களில் 12 மில்லி மீட்டர் மழை அளவிற்கு குறைவாக இருந்தால் நஷ்ட ஈடு வழங்கப்படும்.
 

முதிர்ச்சி கால பருவமழை
வட கிழக்கு பருவமழை கால காப்பீடு என்பது அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலத்தில் காஃபி நன்கு பழுத்து உருவாகும் காலம். குறிப்பிட்ட கண்காணிப்பு காலத்தில் அளிக்கப்பட்ட மழையின் அளவிற்கு மேல் 7 தொடர் நாட்களில் மழை தொடர்ச்சியாக இருப்பின் திட்ட விதிகளின்படி நஷ்ட ஈடு வழங்கப்படும்.
 

பின்பருவகால மழை
குறிப்பிட்ட கண்காணிப்பு காலத்தில் அளிக்கப்பட்ட மழையின் அளவுக்குமேல் 7 தொடர் நாட்கள் மழை தொடர்ச்சியாக இருப்பன் திட்ட விதிகளுக்கு உட்பட்டு நஷ்ட ஈடு வழங்கப்படும்.

விவசாயிகள் திட்டத்தை நன்கு அறிந்து, புரிந்து அதன்பிறகே திட்டத்தில் சேர வேண்டும்.
ஒவ்வொரு பாலிசியிலும் மழைநீர் அளவு தேர்ந்தெடுக்கப்பட்ட மழை மானியின் மழை அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படும்.
காப்பீடு செய்த காஃபியின் தனிப்பட்ட வகைக்கு தகுந்தாற்போல் நஷ்ட ஈடு அளிக்கப்படும்.
காஃபி மழை காப்பீட்டுத் திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் அந்தந்த மண்டலத்தை தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு
044 - 4340 4300

 பாரதி வஜ்ரவேலு

 

Issues: