வணிகர்களை அச்சுறுத்தும் உணவுப் பாதுகாப்புச் சட்டம்

அறிவியல் அடிப்படையில் உணவுப்பொருள்களை பாதுகாப்பதற்கும், உணவுப் பொருள்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை  இறக்குமதியை ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றிற்காகவும்   ஏற்படுத்தப்பட்டதுதான் ‘உணவுப் பாதுகாப்புச் சட்டம்‘ .

இந்தச் சட்டத்தின் நோக்கம் உயர்ந்தது என்று கூறப்பட்டாலும் இச்சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் நுகர்வோரையும், சிறு வணிகர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளதாக வணிகர்கள் கூறுகின்றனர்.
உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள், தற்காலிக கடைக்காரர்கள், தெருவில் கூவி விற்பனை செய்பவர்கள் கூட பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விற்பனை செய்யும் கடைகளில் தூசி, ஈ, கொசு, கரப்பான் பூச்சி, எலி போன்றவை இருப்பது பெரும் குற்றமாக இச்சட்டம் கருதுகிறது. இக்குற்றத்திற்கு இலட்சக்கணக்கில் அபராதமும், மாதக்கணக்கில் சிறைத் தண்டனையும் விதிப்பதற்கு இந்தத் சட்டம் வழி வகுக்கிறது. இது ஒரு ஆபத்தான போக்காகும்.
தண்டனையும், அபராதமும்

உணவுப் பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது அந்த வாகனத்துக்குக் கூட உரிமம் பெற வேண்டும் என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது.
வாகனங்களை எந்த இடத்திலும் சோதனை செய்யலாம் என்றிருப்பதால் வணிகர்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். இந்தியக் குற்றவியல் சட்டங்களில் இல்லாத அபராதங்களும், தண்டனைகளும் இந்தச் சட்டத்தில் இடம் பெற்றிருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர்.
உணவுப் பொருள்களைப் பொட்டலம் கட்டும்போது மேல் உறையில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பொருள் விபரம் அச்சிட வேண்டும் எனவும் இச்சட்டம் கூறுகிறது.

அனைத்துவகையான உணவுப் பொருள்களும் பேக்கிங் செய்யப்பட்டுதான் விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இச்சட்டத்தில் இருக்கிறது. ஆனால் இப்போது நடைமுறையில் சாமானிய மக்கள் சில்லரைக் கடைகளில் வாங்கும்போது பேக்கிங் இல்லாமல்தான் வாங்கிச் செல்கின்றனர். பேக்கிங் கட்டாயப்படுத்தப்படுமானால், சிறு வணிகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதோடு, உணவுப் பொருள்களை வாங்கும் ஏழை எளிய மக்கள் அதிக விலை தரவேண்டிய நிலை ஏற்படும்.

நாடு தழுவிய எதிர்ப்பு
உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2011 ன் படி, பாதுகாப்பான உணவு உறுதி செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதற்காக உணவு உற்பத்தியாளரகளும், சட்டவிதிகளுக்கு உட்பட்டு தொழில் செய்ய, மாநில உணவு பாதுகாப்பு ஆணையரிடம் உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உரிமம் பெறாவிட்டால் உணவை உற்பத்தி செய்வதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்படும் என மத்திய அரசு கெடுவிதித்துள்ளது. நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் உரிமம்  இல்லாமல் வணிகம் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பாதுகாப்பான குடிநீர், சுற்றுச்சூழலை உறுதி செய்யாத நிலை இருப்பதாலும் கல்வியறிவு இல்லாத சிறு வணிகர்கள் மற்றும் விழிப்புணர்வு இல்லாத மக்கள் தொகை அதிகம் இருப்பதாலும், மத்திய அரசின் உணவு பாதுகாப்புச் சட்டத்தை பல்வேறு தரப்பினரும் எதிர்க்கின்றனர்.
உணவு பாதுகாப்புச் சட்ட விதிகள், உள்நாட்டு வணிகர்களுக்கு எதிராகவும், பன்னாட்டு வணிகர்களுக்குச் சாதகமாகவும் உள்ளது. எனவே சட்ட விதிகளைத் தளர்த்த வேண்டும் எனவும் வணிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

நாடு விடுதலை பெற்று 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விட்டோமா? ஏழ்மையை ஒழிப்பதாகத் தந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? மக்களின் வாழ்க்கை  நிலையை மாற்றியமைக்காமல் வறுமைக்கோட்டை மட்டும் மாற்றியமைத்தால் போதுமா?

ஒரு நாட்டை அதன் மக்களைக் கொண்டு உயர்த்துவதுதான் உண்மையான முன்னேற்றமாகும்; அந்நியரையும், அந்நிய முதலீட்டையும் அழைப்பது பெற்ற சுதந்திரத்தைப் பேரம் பேசுவதாகும். இந்தச் சட்டம் உணவுப் பாதுகாப்பிற்கா? மக்கள் பாதுகாப்பிற்கா? என்பதை வருங்காலம் வரையறுக்கும்.

வீரையன்

 

Issues: