நேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி

இந்தியர்கள் ‘பஞ்சுவாலிட்டி’யை கடைப் பிடிக்காதவர்கள் என்று வெளிநாட்டினர் பொதுவாக சொல்வார்கள். இந்தி யாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருப்பவர்கள் கூட நேரத்தை முறையாக கடைப்பிடிப்பதில்லை என்றும், எதிலும் தாமதமாகவே செயல்படுகிறார்கள் என்றும் வெளிநாட்டுக்காரர்கள் கூறுகிறார்கள். குறித்த நேரத்தில் செயல்படாமல் தாமதமாக செயல்படுதல் என்பது நமது மக்களுக்கு ரத்தத்தில் ஊறிப் போன விஷயமாக இருக்கிறது.

 ஜப்பானில் புல்லட் ரயில் 10 மணி, 15 நிமிடம், 20 நொடி என்று நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அந்த நொடியில் ரயில் வந்து நிற்கும். 1 நொடி தாமதமானால் கூட ரயிலைப் பயணிகள் பிடிக்க முடியாது.

அந்நாட்டு மக்கள் நேரத்தை முறையாக நிர்வகிப்பதால் எதையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பார்கள். அதனால்தான் ஜப்பான் சிறிய நாடாக இருந்தாலும் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக பொருளாதாரத்தில் வலிமையான நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல தொழில்துறையில் உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

ஒருவர் தொழிலில் வெற்றியடைய வேண்டு மெனில் நேரத்தை முறையாக நிர்வகிக்க வேண்டும். எதையும் காலமறிந்து செயல்பட வேண்டும்.  இதுகுறித்து  திருவள்ளுவர் கூட ஓர் அருமையான குறளை படைத்துள்ளார்.

“பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும்
 வேந்தர்க்கு வேண்டும் பொழுது”

பலம் பொருந்திய ஆந்தையை, பகல் பொழுதில் காக்கை வென்று விடும். அதுபோல காலமறிந்து சரியான நேரத்தில் வேந்தன் செயல்பட வேண்டும் என்ற அர்த்தத்தை மேற்சொன்ன குறள் தாங்கியிருக்கிறது.

நேரம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது. மூட்டை தூக்கும் தொழிலாளி முதல் நாட்டை ஆளும் பிரதமர் வரை எல்லோருக்கும் இயற்கை 24 மணிநேரத்தைத்தான் வழங்கி இருக்கிறது. இந்த 24 மணி நேரத்தை யாரெல்லாம் திட்டமிட்டு முறையாக செயல்படுத்துகிறார்களோ அவர்களெல்லாம் வெற்றியைக் குவிப்பார்கள்.  நேரத்தை சரியாக கையாளாதவர்கள் வெற்றிகளைக் குவிக்க முடியாது. தோல்விகளைத் தவிர்ப்பதற்கே அவர்கள் போராட வேண்டியிருக்கும்.

தொழில் செய்பவனுக்கு அதிகாலை நேரம் என்பது மிகவும் முக்கியம். சூரிய உதயத்திற்கு முன்பே விழிக்கும் பறவைக்குத்தான் உணவு கிடைக்கும் என்பது பழமொழி. தொழில் செய்பவர் இரவு 11 மணிக்குள் படுத்து உறங்கி அதிகாலை 5 மணிக்குள் எழுவது மிகவும் முக்கியம்.

எழுந்தவுடன் உடற்பயிற்சி, யோகா, தியானம், நடைப்பயிற்சி என உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
இதற்காக மொத்த நேரத்தில் 5 சதவீத நேரத்தை  ஒதுக்கிக் கொள்ளலாம். 5 சதவீத நேரத்தை குடும்பம் மற்றும் உறவுகளுக்கு ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
40 சதவீத நேரத்தை தொழிலுக்கு ஒதுக்கிக் கொள்ளலாம். சரியான தூக்கத்திற்கும் ஓய்விற்கும் 30 சதவீத நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம். மீதி 15 சதவீத நேரம் இருக்கிறது.
இந்த நேரத்தை இசை, நாடகம், சினிமா, இலக்கியம்  போன்ற கலைகளை ரசித்து அனுபவிப்பதற்கு ஒதுக்கலாம்.

தொழிலுக்காக ஒதுக்கப்படும் நேரம் என்பது முன்னேற்றத்திற்கான நேரம். 20 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் பொழுது போக்கு நேரத்தை தேவைப்பட்டால் 10 சதவீதம் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் முன்னேற்றத்தை இன்னும் துரிதப் படுத்தலாம்.

போன் மற்றும் செல்போனை நேரத்தை வீணடிக்கும் அரட்டை, வெட்டிப்பேச்சு போன்றவற்றிற்குப் பயன்படுத்தாமல் அவசியத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சென்னை போன்ற போக்குவரத்து நெருக்கடி மிக்க நகரங்களில் செல்ல வேண்டிய இடத்துக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாது. எனவே தொழில் செய்பவர்கள் சந்திக்க வேண்டியவர் களை காலை ஒன்பது மணிக்கு முன்பாகவே சென்று சந்தித்து விடுவது மிகவும் நல்லது. இது ஒரு தொழில் ரகசியமும் கூட.  

கார் வைத்திருப்பவர்கள் டிரைவரையும் வைத்திருந்தால் காரில் செல்லும் போது செல்போன் பேசுவது, பைல் பார்ப்பது, செய்தித்தாள் படிப்பது போன்ற காரியங்களை மேற்கொள்ளலாம். இதன் மூலம் நேரம் மிச்சமாகும். கார் வைத்திருப்பவரே டிரைவிங் செய்வதாக இருந்தால் டிரைவிங் செய்து கொண்டே இசையைக் கேட்கலாம்.
அலுவலகத்தில் என்னென்ன பணிகளை மேற்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து முதல்நாளே அட்டவணையை தயார் செய்து கொள்வது நல்லது. இதனால் நேரத்தை நிர்வகிப்பது எளிதாக இருக்கும்.

நிறுவன பணிகள் காரணமாக சில சமயங்களில் சில சங்கடங்களை எதிர் கொள்ளத்தான் வேண்டியிருக்கும். தொழில்வரி, வருமானவரி, சேவை வரி, விற்பனை வரி, அரசாங்க நோட்டீஸ்கள் போன்றவற்றை முறையாகவும் சரியாகவும் எதிர்கொள்ள வேண்டும்.

நல்ல வக்கீலை அமர்த்திக் கொண்டு சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளலாம். இத்தகைய சங்கடங்களுக்கும் நேரம் ஒதுக்கித்தான் தீர வேண்டும். வக்கீலை பார்ப்பது போன்ற  பணிகளை எல்லாம் மாலை நேரத்தில் வைத்துக் கொள்ளலாம்.

வாடிக்கையாளரை மகிழ்விக்கவும் அவரிடம் நன்மதிப்பைப் பெறவும் அவருக்கு நேரம் ஒதுக்குவது அவசியம். முதன் முறையாக ஒரு வாடிக்கையாளர் உங்கள் நிறுவனத்திற்கு வருகிறார் என்றால் அவருக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.
அவரிடம் நீங்கள் குறைவாகவே பேச வேண்டும். அவரை அதிகமாகப் பேசவிட வேண்டும். அங்கே நேரம் செலவாவது உங்களுக்கு வருமானம். உங்கள் தொழிலின் வளர்ச்சிக்கு அது மேலும் உதவும்.

கடிகாரத்தைப் பார்க்காமல் கனிவுடன் கண்களைப் பார்த்து பேச வேண்டும். அவர் தனது தேவைகளையும் குறைகளையும் அந்த நேரத்தில் சொல்லி விடுவதால் அடுத்த முறை அவருக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டிய தேவை இருக்காது.
இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் நேரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் யாவரும் நேரநிர்வாகத்தில் கைதேர்ந்தவர்களே. எனவே தொழில் செய்பவர்கள் நேர நிர்வாகத்தில் கை தேர்ந்தால் வெற்றி உறுதி.

சந்திரசேகர்

 

Issues: