தடைகளே சக்தியை உற்பத்தி செய்யும் இயந்திரம் MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்

ஒவ்வொரு மனிதனும் பல்வேறு சமயங்களில் பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறான். இதிலிருந்து மீண்டு வருவது என்பது அவரவர் மனநிலையை பொருத்த விஷயம். தன்னம்பிக்கை உடைய மனிதன் பிரச்சனையிலிருந்து எளிதாக மீண்டு விடுகிறான்.
ஒருவன் தன்மீது வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கையாகும். வாகனத்துக்கு எரிபொருள் எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு தெரியும். அதுபோல மனிதன் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு நம்பிக்கை அவசியம். நம்பிக்கை என்கிற எரிபொருள் உள்ளத்தில் இருக்கும்வரை நம்மை இயக்கி கொண்டே இருக்கும். நம்பிக்கையோடு இயங்கினால்தான் எந்த துறையிலும் சாதனை படைக்க முடியும்.
உங்களை மிகவும் ஈர்க்கும் துறை எது என்பதை முதலில் தீர்மானித்து விடுங்கள். பிறகு அந்த துறையில் உங்களுக்கான இலக்கை முடிவு செய்து அதை அடைவதற்காக கடுமையாக பாடுபடுங்கள். இது உங்களது கவனச் சிதறலை தடுத்து நிறுத்தி வெற்றிகளை குவிப்பதற்கு உந்து சக்தியாக அமையும்.
அதே போல தன்னிலை அறியும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்...
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்...’’
என்ற கண்ணதாசனின் வரிகள் இங்கே நினைவு கூற தக்கவை.
தன்னை அறிந்து கொள்ளும் ஒருவர் தனது பலம், பலவீனம் இரண்டையும் துல்லியமாக அறிந்து வைத்திருப்பார். இத்தகைய நபர்கள் பிரச்சனைக்குரிய நேரத்தில் மனம் கலங்காமல் தன்னம்பிக்கையோடு செயல்படுவர்.
புதிய மாற்றங்களை உருவாக்குபவர்கள் இவர்களே. மதம், அரசியல், தொழில் என எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் தன்னிலை உணர்ந்தவர்களே உயர்ந்த இடத்தை தொட்டு இருக்கிறார்கள்.
இவர்கள் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறன் பெற்றவர்களாக இருப்பர். ஆழ்ந்த ஈடுபாட்டுடன் உழைப்பர். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வர்.
எதையும் தொலை நோக்கோடு சிந்திப்பர். லட்சியத்தை எட்டும் வரை முயற்சி செய்து கொண்டே இருக்கும் இயல்புடையவராக இருப்பர். சாதனை படைக்க வேண்டும் என்ற அடங்காத வேட்கை இவர்களை வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது.
ஒரு அசாதாரண சூழலை கண்டவுடன் அஞ்சி நடுங்கினால் சாதனை படைக்க முடியாது. ஒரு உதாரணம் பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், முதன் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மோதுவதற்காக, அந்த நாட்டிற்கு சென்றிருந்தார். அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், “வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள், அசுரத்தனமாகப் பந்து வீசுவர்... நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்’ என்று சொன்னதற்கு, சுனில் கவாஸ்கர், “என்னால் பந்தைப் பார்க்க முடியும்தானே...’ என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தாராம்.
அசாதாரண சூழலைக் கூட அசால்ட்டாக எதிர்கொள்ளும் மனோபாவம் என்பதற்கு உதாரணம் இதுதான். அதனால்தான் அவரால் தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டே இருக்க முடிந்தது.
தடைகளே சக்தியை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் என்று காப்மேயர் கூறினார்.
தடைகளும், குறைபாடுகளும் அதிகமான நஷ்டஈட்டை வழங்கும் சவால்கள் என்று சொல்லலாம். உறுதியுடனும், மனோதிடத்துடனும் இயங்க வைப்பது தடைகளும், குறைபாடுகளும் தான். வெற்றி என்பது தவிர்க்க முடியாதது என்றநிலையை அவை ஏற்படுத்துகின்றன.
தோல்வியால் துவண்டுபோய் முயற்சியை கைவிடுபவர்களை இந்த உலகம் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. தோல்வி மனதளவில் பாதிப்பை உண்டாக்கத்தான் செய்யும். அதை பொருட்படுத்த கூடாது. விழுவது எழுவதற்காகவே என்று எண்ணி செயல்பட வேண்டும்.
தோல்வி தரும் விரக்தியை பொருட்படுத்தாமல் அதிலிருந்து உற்சாகத்தையும் வைராக்கியத்தையும் பெற வேண்டும். முதல் முயற்சியிலேயே யாராலும் வெற்றியை அடைந்து விட முடிவதில்லை.
இலக்கை அடையும் வரை, பொறுமை காப்பது அவசியம். ஒரே தாவலில் மலை உச்சியை அடைந்து விட முடியாது.
தோல்வி நிரந்தரமானது அல்ல. அதற்கும் ஓய்வு உண்டு. நாம் முறையாக செயல்பட்டால் தோல்வி எட்டி பார்க்காது. நமது முயற்சிகளில் சில தோல்வியை தழுவலாம். அதற்கு சில காரணங்கள் இருக்கும். அதற்காக முயற்சியை கைவிட்டால், வாழ்க்கையே தோல்வியில் முடிந்து விடும்.
உடனுக்குடன் பலனை எதிர்பார்த்து செயல்பட்டு, பலன் கிடைக்காவிட்டால் சிலர் முடங்கிபோய்விடுகிறார்கள். ஆனால் சாதனையாளர்கள் அப்படி முடங்கி போய்விடுவதில்லை.
உலகின் பணக்காரர்கள் வரிசையில் முதலிடம் வகிக்கும் பில்கேட்ஸ் தனது முதல் முயற்சியிலேயே வெற்றியை அடைந்துவிடவில்லை. சிறுசிறு தோல்விகள் அவரது வழியில் வந்தன.
அவற்றை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை தொடங்கினார். மிக சிறப்பாக செயல்பட்டு குறுகிய காலத்திலேயே உலக அளவில் பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்தார்.
இந்தியாவில் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் கம்ப்யூட்டர் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கிய நாராயணமூர்த்தி, தான் செய்து வந்த வேலையை உதறிவிட்டு கம்ப்யூட்டர் துறையில் கால் பதித்தார். இத்துறையில் முதன்மை நிலைக்கு செல்ல வேண்டுமென்பதே அவரது நோக்கமாக இருந்தது.
இவரது ஆரம்ப கால முயற்சி தோல்வியை தழுவியது. தொழில் துவங்க பணம் இல்லாமல் திண்டாடினார். உடனே இவரது மனைவி தனது நகையை விற்று 10 ஆயிரம் ரூபாயை தந்தார். அந்த பணத்தை கொண்டு மற்ற நண்பர்களுடன் சேர்ந்து துவங்கப்பட்ட நிறுவனம்தான் இன்போசிஸ்.
முதல் முயற்சியில் தோல்வி... இனி தொழிலே வேண்டாம் என்று இன்போசிஸ் நாராயண மூர்த்தி முடிவெடுத்து இருந்தால், லட்சக்கணக்கானோர் இன்றைக்கு வேலை வாய்ப்பை பெற்றிருப்பார்களா?
தோல்விதான் ஒரு மனிதனை செதுக்குகிறது. படிப்பு, விளையாட்டு, வியாபாரம், தொழில், காதல், குடும்பம் என எல்லாவற்றிலும் பலர் தோல்வியை சந்திக்க நேரிடுகிறது.
இந்த தோல்வியை அனுபவமாக எடுத்துக் கொண்டால் மனரீதியாக பாதிப்பு ஏற்படாது. மாறாக வருந்திக் கொண்டிருந்தால் அச்சமும் கவலையும் மனதில் நிரந்தரமாக குடி கொண்டுவிடும்.
தோல்வியடைந்து விடுவோமோ, அவமானப்பட்டு விடுவோமோ என்று பயந்தே, பலர் முயற்சி செய்வதேயில்லை. பலரும் முன்னேறாததற்கு இதுவே காரணம்.
முதலில் நம் மீதே நமக்கு நம்பிக்கை வேண்டும். நமது திறமையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதே போல நமது சுய ஆற்றல் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு நம்பிக்கை கொள்ள வில்லை எனில் வெற்றிபெறவோ, மகிழ்ச்சியை அனுபவிக்கவோ முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தடைகளும், தோல்விகளும் புதிய சக்தி பிறப்பதற்கான ஊன்றுகோள் என்பதை உணர்ந்து செயல்பட்டால் லட்சியத்தை அடைவது நிச்சயம்.
தொடரும்...

Issues: