சரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி

டந்த மார்ச் 23ம் தேதி அன்று சிங்கப்பூரே மீளாத்துயரில் ஆழ்ந்தது. காரணம் சிங்கப்பூரின் சிற்பி எனப் புகழப்படும் லீ குவான் யூ
அவரது 91வது வயதில் இம்மண்ணுலகை விட்டு சென்றுவிட்டார். இந்த சிற்பிக்கு நமது பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

லீ குவான் யூ 30 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு ஒரு சிறிய தீவாகத்தான் சிங்கப்பூர் இருந்தது.
தனது தனிச்சிறப்பு மிக்க ஆட்சியின் மூலம் சிங்கப்பூரை ஒரு மாபெரும் பொருளாதார சக்தி மிக்க நாடாக மாற்றினார்.

சிறிய நாட்டை சிங்கார பூமியாக்கிய லீ குவான் யூ இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அவரது பெயர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
காலனி ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மலேசியா வெளியேறிய போது சிங்கப்பூரும் அந்நாட்டுடன் இணைந்திருந்தது.

ஆனால் மக்களிடையே மலேசியா மதரீதியாக வேறுபடுத்திப் பார்த்ததால் 1965ல் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு கடினமான காலகட்டத்தில்
துணிந்து முடிவெடுத்து சிங்கப்பூர் என்னும் ஒரு தனி நாட்டை உருவாக்கினார் லீ.

1965ல் தனி நாடான சிங்கப்பூரின் முதல் சட்டம் ‘அரசுப்பணியாளர் நேர்மைச் சட்டம்’. லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் மிகக் கடுமையான குற்றங்கள்
என்று அறிவிக்கப்பட்டன. ஊழலற்ற ஒரு நிர்வாகத்தை தருவதற்கு இச்சட்டம் பேருதவி புரிந்தது.

‘நாட்டை ஒரு சிறந்த நிறுவனம் போல் நடத்த வேண்டும். அதே நேரத்தில் அது மனித நேயம் கொண்டதாகவும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டதாகவும் இருக்க வேண்டும்‘ என்று வலியுறுத்தினார் லீ.

உலகின் பொருளாதார சக்தி மிக்க நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூரை உயர்த்திய சாதனை மட்டுமல்ல, பல மொழிகள் பேசும் மக்கள் நிறைந்த
அந்த நாட்டில் சிறுபான்மையினரான மலாய் மற்றும் தமிழ் மக்களின் உரிமைகள் எந்தவகையிலும் பாதிக்கப்படாமல் ஆட்சி நடத்திய சாதனையையும்
அவர் நிகழ்த்தி இருக்கிறார்.

சிங்கப்பூர் தேசத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவித்த லீ குவான் யூ, தமிழர்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான காரியங்களை செய்துகாட்டினார்.
தமிழை ஆட்சிமொழியாக அறிவித்தபோது மலையாளிகள், மலையாள மொழிக்கும் அத்தகைய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என வற்புறுத்தினார்கள்.
அதற்கு, ‘சிங்கப்பூர் என்கிற தேசம் அமைய போராடியவர்கள் தமிழர்கள். அதற்கான நன்றிக்கடனாகவே நான் தமிழை ஆட்சி மொழியாக்கி இருக்கிறேன்’ என்றார்
லீ குவான் யூ.

தொழில் தொடங்க வரும் முதலாளிகளின் தேவைகள் அனைத்தையும் ஒற்றைச் சாளர முறையில் கிடைக்க 50 வருடங்களுக்கு முன்னரே வழிவகை செய்தது ஒரு முக்கியமான திருப்பம் என்றே சொல்ல வேண்டும். அதன்படி, பொருளியல் வளர்ச்சி வாரியம் அமைத்து, தொழிற்சாலை அமைக்க வருவோருக்குத் தேவையான நிலம், மின்சாரம், நீர் பகிர்வு, சுற்றுச்சூழல் அனுமதி, பாதுகாப்பு தொடர்பான விவரங்கள், கட்டுப்பாட்டுச்சான்றிதழ் என அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்க வழி வகுத்தார்.

வளரும் நாடுகள் பல இன்று தொழில்துறை விஷயங்களில் சிங்கப்பூரின் செயல்பாடுகளைக் கவனித்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வெற்றிபெற்று வருகின்றன. மிக குறைந்த நிலபரப்பை கொண்ட சிங்கப்பூரில் இதுவரை 6000 வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது தொழிலை மிகவும் திறம்படநடத்தி வருகிறார்கள்.

இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத சிங்கப்பூரில் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தொழில் தொடங்கின என்றால் அதற்கு காரணம் லீயின் நிர்வாகத் திறமைதான். இஸ்ரேல் நாடு உதித்த காலகட்டத்தில் அந்த நாட்டை எந்த நாடும் அங்கீகரிக்காத நேரத்தில், துணிந்து அதனை அங்கீகரித்து அந்நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்தினார் லீ.

அதனால் நீர் வள மேலாண்மை, இராணுவ உடன்பாடுகள் முதலியன இவ்விரு நாடுகளுக்குள்ளும் ஏற்பட்டன. இது நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் ,
பாதுகாப்பு மேம்பாட்டிற்கும் பேருதவி புரிந்தது.

‘எனது சிங்கப்பூர் எந்த சித்தாந்தத்தின் படியும் உருவாக்கப்படவில்லை. பல முயற்சிகள் செய்தோம். சில வெற்றி கண்டன. சில தோல்வியுற்றன. நாட்டு மக்களுக்குப் பயன் அளிக்கக் கூடிய எந்த முயற்சியையும் செய்வதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை’ என்று கூறியவர் லீ.

விடுதலை அடைந்த சில ஆண்டுகளில் சீனர்களுக்கும் மலாய் இனத்தவர்களுக்கும் இடையே ஒரு கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில் மக்களிடம் ஒற்றுமை ஏற்படுத்த, 18 வயது நிரம்பிய அனைத்து ஆண்களும், இரண்டாண்டு ராணுவ சேவை ஆற் ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கினார் லீ. இது நாட்டில் அமைதி
நிலவ வழி வகுத்ததோடு பொருளாதார வளர்ச்சிக்கும் உதவி செய்தது.

கட்டாய சேம நிதி என்னும் திட்டம் மூலம் மக்களைச் சேமிக்கத் தூண்டி, நாட்டின் வீட்டு வசதியைப் பெருக்கினார் லீ. சேம நல நிதியின் மூலம் அரசின் பொருளாதாரம் உயர்ந்தது. மக்களின் செல்வமும் உயர்ந்தது. அடித்தட்டு சிங்கப்பூரர்கள் இன்று வானளாவிய கட்டடங்களில் வாழ்கின்றனர். அவர்களில் 97 சதவீதம் பேர் வீட்டுரிமையாளர்களாக இருப்பதற்கு லீயின் அணுகுமுறையே காரணம்.

ஷாங்காய் என்கிற நகரம் உருவாக அந்நாளைய சீனத் தலைவர் டெங்சீபிங்கிற்கு உதவினார் லீ. அந்த நன்றியைச் சீனா இன்றும் நினைவில் கொண்டுள்ளது.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை பல உலகத் தலைவர்கள் அவரிடம் ஆலோசனை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மக்கள் நலனில் அக்கறையும், கட்டுப்பாட்டுடன் கூடிய ஜன நாயகமுமே மக்களை மேம்படுத்தும் என்கிற சித்தாந்தத்தை முன் வைத்து அதில் வெற்றியும் கண்டார் லீ.

‘நான் செய்தவை எல்லாம் நல்லவையே என்று கூறவில்லை.ஆனால் அவை அனைத்துமே மிக உயர்ந்த நோக்கத்திற்காகச் செய்யப்பட்டவை
என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை’ என்று பலமுறை கூறியுள்ளார் லீ. எந்த வளமும் இல்லாத ஒரு சிறிய தீவு, உலக அளவில் மிக உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் லீ குவான் யூ என்ற வரலாற்று நாயகர்தான். சிங்கப்பூருக்கு முன்னர் விடுதலை அடைந்த, பல இயற்கை வளங்கள் கொண்ட நாடுகள் இன்னமும் மூன்றாந்தர வரிசையில்தான் உள்ளன என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Issues: