மாட்டிறைச்சிக்கு தடை! பொருளாதார பாதிப்புகள் ஏற்படுமா?

மகாராஷ்டிரம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம்
அபராதமும் விதிக்கப்படும் என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இப்புதிய சட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழப்பார்க என்றும், பிற இறைச்சி விலைகஷீமீ உயரும் என்றும்,
மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதேபோல பல அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் இச்சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

‘உணவுப் பழக்கம் என்பது அவரவர் அடிப்படை உரிமை. பல மதங்களும், கலாச்சாரங்களும்உள்ள நமது நாட்டில் ஒரு மதத்தினர் ஆடும்,கோழியும் சாப்பிடுகிறார்கள். கடவுளுக்கும் படைக்கிறார்கள்.

இன்னொரு மதத்தினர் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவற்றை சாப்பிடுகிறார்கள். ஆனால் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை.
சிலர் காய்கறி உணவு மட்டுமே உண்கிறார்கள்
.
நிலைமை இவ்வாறு இருக்க குறிப்பிட்ட உணவு உண்பதை தடுக்க ஜனநாயக முறையில் செயல்படும் அரசு சட்டம் போடுவது சரியல்ல’ என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் என்னவென்பது குறித்து பார்ப்போம்.

பிரேசிலுக்கு அடுத்தபடியாக அதிக அளவு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடு நமது இந்தியாதான். சுமார் 20 லட்சம் டன் அளவுக்கு மாட்டிறைச்சியை பல்வேறு நாடுகளுக்கு நமது நாட்டினர் ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்து கொண்டிருக்கின்றனர்.

அதேபோல மாட்டிலிருந்து கிடைக்கும் தோல் மூலமாகவும் உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்தும்
ஏராளமான வருமானம் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

இந்திய அளவில் தோல் ஏற்றுமதியில் 48 சதவீத பங்கைக் கொண்டு தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தோலுக்காக தமிழக நிறுவனங்கள் அதிகம் சார்ந்திருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தைத்தான். தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில்
மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பதால் தமிழகத்தின் தோல் தொழிற்கூடங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

புரதசத்து அதிகம் கிடைப்பது ஆட்டிறைச்சியிலும், மாட்டிறைச்சியிலும்தான். ஆட்டிறைச்சியோ விலை மிகவும் அதிகம்.
வருமானம் அதிகம் இல்லாத அடித்தட்டு ஏழைமக்கள் ஆட்டிறைச்சிக்கு செலவிடுவது மிகவும் கடினம்.

இவர்களுக்கெல்லாம் வாய்ப்பாக அமைவது மலிவான விலையில் கிடைக்கும் மாட்டிறைச்சி மட்டுமே . இத்தகைய சூழ்நிலையில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையால் மலிவான விலையில் கிடைத்து வந்த புரதசத்து இவர்களுக்கு எட்டாக்
கனியாக மாறும்.

மேலும் ஆடு , கோழி , மீன் போன்ற மற்ற இறைச்சிகளின் விலையும் உயரும்.

இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் இருக்கிறார்கள். இவர்கள் மடிவற்றிய, வயதான, உழைக்க பயன்படாத மாடுகளை விற்று தங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை ஓரளவு சரிகட்டிவருகின்றனர்.

இனி இந்த மாடுகளை விற்கக் கூடாது என்ற நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளின்
தற்கொலை அம்மாநிலத்தில் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது மகாராஷ்டிரா மாநிலததிற்கு தேவைப்படும் கால்நடை தீவனத்தில் 61 சதவீத பற்றாக்குறை நிலவி
வருகிறது. மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் வயதான மாடுகள் கொல்லப்படுவது தடுக்கப்படும்.

இதனால் ஆரோக்கியமாக இருக்கும் மாடுகளுக்கு கிடைக்கும் தீவனம் குறையும். இது விவசாயிகளுக்கும், ஆரோக்கியமான
மாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுகிறது என்ற காரணத்தால்தான் விவசாயிகள்
மாட்டிறைச்சி உண்பதில்லை. அதே போன்று விவசாயத்திற்கு பயன்படாது போகும் மாடுகளை வைத்து பராமரிப்பதும் அவர்களால் சாத்தியமில்லை.இதனால் கைவிடப்பட்ட மாடுகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும்.

வீடின்றி சாலையோரத்தில் வாழும் மக்களில் பலர், மாமிச கடைகளில் கறியை வெட்டி மீதம் வரும் கழிவுகளான தோல், கொழுப்பு, எழும்பு இவற்றை இலவசமாக வாங்கி சமைத்து தங்களுடைய பசியை போக்கிக் கொள்கின்றனர். முழுமையான மாமிசம் சாப்பிட வேண்டுமென்ற விருப்பம் வந்தால் இவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றது மாட்டிறைச்சி தான்.
இவர்களும் இனி பாதிக்கப்படுவர்.

‘உணவே நம் மனதை தீர்மானிக்கிறது. சாதுவான காய், கனிகளை உண்ணும் போது சாதுவாகவும், அசைவ உணவை உண்ணும் போதுமிருக குணமும் ஏற்படு கிறது.

பிறக்கும் போது பசுவின் பாலை உண்ணும் நாம், வளரும் போது மட்டும் இறைச்சியை தேடுவது ஏன்? இறைச்சி உண்பவர்கள் மது,புகைக்கு அடிமையாகி விடுகின்றனர். அசைவ உணவால் மனித உடலுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன. எனவே மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது சரியே’ என சைவ உணவுப்பிரியர்கள் வாதிடுகின்றனர்.

மாமிச நுகர்வு என்பது காலங்காலமாக மனிதனிடத்தில் இருந்து வரும் பழக்கம். சைவ உணவுப்பழக்கம் என்பது விழிப்புணர்வால் ஏற்படுவது. எல்லோராலும் திடீரென சைவ உணவுப்பழக்கத்திற்கு மாறிவிட முடியாது. இந்நிலையில் சட்டம் போட்டு மாமிச
நுகர்வைக் கட்டுப்படுத்த முடியுமா என்பதை அரசு யோசிக்க வேண்டும். இச்சட்டத்தால் பெரும் பொருளாதார இழப்புகளும் ஏற்படும் என்பதை அரசு உணராமல் போனது வியப்பளிக்கிறது.

கண்ணன்

Issues: