பாரம்பரிய விதைகளை பாதுகாக்குமா அரசு?

மரபணு மாற்று விதைகளை (Genetically Modified Seeds) எதிர்ப்பது அறிவியலுக்கு எதிரானது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் கூறியிருந்ததோடு நெல், கோதுமை, மக்காச்சோளம், சோளம், கத்தரி, கடுகு, உருளைக்கிழங்கு, கரும்பு, கொண்டைக்கடலை போன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் கள ஆய்வுக்கும் அனுமதி அளிக்க மத்திய அரசு முனைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் பல மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக அரசும் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
மரபணு மாற்று விதைகளை முற்றிலும் வணிக மயமாக்கும் போக்கை மத்திய அரசு கடைபிடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.
சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை காட்டிய போதிலும் மரபணு மாற்று விதைகளை அனுமதிப்பதில் தீவிர முனைப்பை மத்திய அரசு காட்டி வருகிறது.
முக்கியமாக அன்னிய நாட்டு விதை நிறுவனங்கள் இந்திய சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு தனது கொள்கைகளை வகுத்து வருகிறது.
அன்னிய முதலீட்டை அனுமதிப்பதில் தவறில்லை. அதன் மூலம் நமது இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது என்றாலும் இந்திய மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷயத்தில் நமது அரசு எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
ஏனெனில், மரபணு மாற்று விதைகள் மூலம் கிடைக்கும் காய்கறி & பழங்களை உண்ணுவோருக்கு உடல் நலக்கேடுகள் உண்டாவதாக சமூக அக்கறையுள்ள மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
விதைகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவற்றில் முதல் வகை, பொறுக்கு விதைகள். இந்த விதைகள் காலம்காலமாக உழவர்களிடமிருந்து வந்துகொண்டிருப்பவை.
இவை அந்தந்த மண்ணுக்கேற்ற வகையில் பொருந்தி இருப்பவை. வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்டவை. இந்த விதைகள் அவ்வளவு எளிதாக நோயின் தாக்கத்துக்கு உள்ளாகாது.
அடுத்தடுத்து முளைக்கும் திறன் கொண்டவை. எதிர்பார்க்கும் விளைச்சலையும் கொடுப்பவை. இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட பொறுக்கு விதைகளுக்கு அரசு ஆதரவு கொடுத்தால்தான் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க முடியும்.
மாறாக பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் செயல்படுவது சரியல்ல. இனி ஒட்டு விதைகளை பற்றி பார்ப்போம்.
இந்த ஒட்டு விதைகள், கலப்பின விதைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த விதைகளை விவசாய நிபுணர்கள் அறிமுகப்படுத்திய போது, வீரிய விதைகள் என்று சொன்னார்கள். விவசாயிகளும் இக்கூற்றை நம்பி இந்த விதைகளை விதைத்தனர்.
ஆனால், இந்த விதைகளால் வறட்சியை தாங்க முடியவில்லை. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால் பூச்சிகள் எளிதில் தாக்கிவிடுகின்றன.
அதிக விளைச்சலை மட்டுமே கணக்கில் கொண்டு இந்த விதைகள் உருவாக்கப்பட்டன. இந்த விதைகள் மீண்டும் முளைக்கும். எனினும் முந்தைய அளவிற்கு விளைச்சல் தராது.
இந்த விதைகளின் விலை மிகவும் அதிகம். அடுத்தடுத்து விளைச்சல் குறையும் என்பதால், குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு மீண்டும் விதைகளை வாங்க வேண்டி இருக்கும்.
1 கிலோ, வீரிய ரக தக்காளி விதையின் விலை ரூ.35,000க்கு விற்கிறது. அடுத்தடுத்து விதைகளை பயன்படுத்தும்போது முதன்முறை கிடைத்த விளைச்சல் கிடைக்காது என்பதால் ஒரு கட்டத்திற்கு பிறகு மீண்டும் செலவு செய்து விதைகளை வாங்க வேண்டும் என்பது இதில் உள்ள பலவீனமான அம்சம்.
அடுத்த வகை, மரபணு மாற்று விதைகள். இவை இரண்டு பயிர்களை கொண்டு கலப்பின முறையில் உருவாக்கப் படுபவை அல்ல.
குறிப்பிட்ட பயிரின் மரபணுவையும் வேறொரு உயிரின் மரபணுவையும் கொண்டு உருவாக்கப்படுவதுதான் மரபணு மாற்று விதையாகும். இந்த விதைகளை பன்னாட்டு விதை நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கின்றன.
இந்த விதைகளை வாங்கி பயிரிட்டால் ஒருமுறை மட்டுமே விளையும். மறுமுறை விதைக்க வேண்டுமெனில் விதை நிறுவனங்களிடம் மீண்டும் பணம் கொடுத்து விதையை வாங்க வேண்டும்.
இதனால்தான் பன்னாட்டு விதை நிறுவனங் கள் மரபணு மாற்று விதைகளை உருவாக்கி சந்தைப்படுத்த தீவிர முனைப்பு காட்டுகின்றன. விவசாயிகளை விதைகளுக்காக தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர துடிக்கின்றன.
அரசும் இந்த பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதுதான் வருத்தத்திற்குறிய விஷயம். அரசின் இந்த அணுகுமுறை மாறி விவசாயிகளின் பாரம்பரிய விதைகளை பாதுகாத்து அவர்களது வாழ்வை மேம்பாடு அடைய செய்ய வேண்டும்.

Issues: