வேலைவாய்ப்புகளைப் அள்ளித்தரும் ‘மேக் இன் இந்தியா’

இந்தியாவின் பொருள் உற்பத்தித்துறை, 2013-ம் ஆண்டில் மொத்தப் பொருளாதாரத்தில் வெறும் 13 சதவீத அளவுக்கே பங்களித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமான நிலைமை என்று உலக வங்கியே மதிப்பிட்டுள்ளது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பொருள் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 34 சதவீதமாக உள்ளது.
இத்தகைய நிலையில், பொருள் உற்பத்தித் துறையின் பங்களிப்பை அதிகப்படுத்த கடந்த ஆண்டு நரேந்திரமோடி, மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவில் நிறைய வேலைகளை உருவாக்கவேண்டிய தேவை இருப்பதாலும் மேக் இன் இந்தியா திட்டம் மிகவும் அவசியமானது.
உலகின் பொருள் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதை இலக்காக கொண்டுள்ள மோடி அரசு, இந்தியாவில் முதலீடு செய்யப்படும் மூலதனங்களுக்கு எந்தப் பாதகமும் வராது என உறுதியளித்துள்ளது.
‘தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) முடித்தவர்களை நாம் மதிப்பதில்லை. அவர்களது மரியாதையும் கண்ணியமும் காக்கப்பட்டால்தான் சமுதாயம் முன்னேற்றமடையும். தொழிலாளர்கள் கடின உழைப்பைக் கொண்ட தேசத்தைக் கட்டியமைக்கும் யோகிகள்’ என்று மேக் இன் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த போது மோடி கூறினார்.
மேலும் அவர், ‘நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். ஏழைகளுக்கு வேலை கிடைத்தால் அவர்களது குடும்பங்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். நாட்டின் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். அதேநேரம் அதன் பயன்கள் நமது நாட்டு இளைஞர்களை முறையாகச் சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என கூறியுள்ளார்.
அவரது இந்த கூற்று தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மேக் இன் இந்தியா திட்டத்தால் நிறைய பணிவாய்ப்பு கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
மேக் இன் இந்தியா திட்டத்தில் முதலீடு, தொழில்நுட்பம் இவை வெளிநாட்டிலிருந்து கிடைக்கும். உற்பத்தி இந்தியாவில் இருக்கும். அதேபோல தொழிலாளர்களளும் இந்தியர்களாக இருப்பார்.
பொருள் உற்பத்தித் துறை வளர்ந்து பல இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். உற்பத்தியும் இந்தியாவில் அதிகரிக்கும். உற்பத்தியினால் கிடைக்கும் வரி வருமானம், பொருளாதார ரீதியாக இந்தியாவை உயர்த்தும். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தியா வளர்ச்சியடையும்.
பொருள் உற்பத்தித்துறையின் பங்களிப்பு 2022-ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதமாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்நிய நேரடி முதலீடு என்பது ‘முதலில் இந்தியாவை முன்னேற்ற வேண்டும்’ (திஞிமி- திவீக்ஷீst ஞிமீஸ்மீறீஷீஜீ மிஸீபீவீணீ) என்ற கோஷமும் மோடி அரசால் முன் வைக்கப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின்படி, அந்நிய நிறுவனங்கள் உற்பத்தித் துறையில் முதலீடுசெய்ய தடையில்லாத மின்சாரம் வேண்டும். ஆனால், மின்தட்டுப்பாடு பிரச்சனை பல மாநிலங்களில் உள்ளது. இது விரைவாக சரி செய்யப்பட வேண்டும்.
இது மட்டுமின்றி, சாலைகள், துறைமுகங்கள், தொலைத் தொடர்பு முதலிய அடிப்படை கட்டமைப்பு துறையில் இந்தியா இன்னமும் முன்னேற வேண்டியுள்ளது.
மேலும் தொழிலாளர்களுக்கு பி.எஃப், இ.எஸ்.ஐ, கிராஜுவிட்டி, மருத்துவக் காப்பீடு ஆகியவையும் தேவை. இவற்றைக் கட்டாயமாக்க, அரசு முயற்சி எடுக்கவேண்டும்.
மேக் இன் இந்தியா திட்டத்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.
உள்ளூர் பெரும் நிறுவனங்கள் கண்டிப்பாக பாதிப்படையாது. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள்.
உள்ளூர் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில்நுட்பரீதியில் அப்டேட் செய்து கொண்டால், நிறைய வாய்ப்புகள் கிடைக்குமே ஒழிய பாதிப்புக்கு உள்ளாகாது.
மாற்றத்துக்கு தயாராவதே உள்ளூர் நிறுவனங்களுக்கு உள்ள நிபந்தனை. உள்நாட்டு பெரு நிறுவனங்கள் பல, வெளிநாட்டில் ஆலைகள் அமைத்து பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. இந்நிறுவனங்கள் நம் நாட்டிலேயே ஆலைகள் அமைத்து பொருட்களை உற்பத்தி செய்ய முன் வருவது சிறந்ததாக இருக்கும்.
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் ஏறத்தாழ 45 சதவீதத்தை சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள்தான் நிறைவு செய்கின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஏறத்தாழ 40 சதவீத அளவுக்குப் பங்களிக்கின்றன. ஏறத்தாழ 10 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள்தாம்.
இந்நிறுவனங்கள், இந்திய உற்பத்தித் துறையில் முதலீடுசெய்யும் அந்நிய நிறுவனங்களிடம் கூடுதல் ஆர்டர்களைப் பெற்று தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும்.
மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்து வதற்கான நடவடிக்கையை தற்போது மத்தியஅரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கு முன்னோட்டமாக, இந்திய சந்தையில் உள்நாட்டு உற்பத்திப் பொருள்களுக்கு போட்டியாக விளங்கும் அயல்நாட்டு பொருள்கள், உதிரிபாகங்கள், தொழில்நுட்பங்கள் இவை குறித்து நாடு முழுவதும் களஆய்வுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
இதனடிப்படையில், திருப்பூர் பின்னலாடை உற்பத்தித் தொழிலில் அன்னிய ஆதிக்கம் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையில் அன்னியப் பொருள்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அதன் மூலம் இந்தியச் சந்தையை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு ரூ.10,000 கோடியையும், ஏற்றுமதி வர்த்தகம் மூலம் ரூ.18,000 கோடி அன்னியச் செலாவணியையும் ஈட்டித் தரும் திருப்பூரில், பின்னலாடை உற்பத்தித் தொழிலில் சுமார் 10,000 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிறுவனங்களில் பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளன.
மேலும் பின்னலாடைகளுக்கான உள்நாட்டுச் சந்தைகளிலும் சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இவற்றையெல்லாம் சரி செய்து இந்தியச் சந்தையை பாதுகாப்பதற்காகவே களஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து இந்தியாவின் உற் பத்தித் திறனை அதிகரிப்பது, மேக் இன் இந்தியா திட்டத்தின் அடிப்படை நோக்கமாக உள்ளதால் இத்தகைய களஆய்வுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை.

அருள்

Issues: