வரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா?
இந்தியாவில் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தாலும், பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இன்னும் வங்கிச் சேவை கிடைக்காத நிலைதான் இருந்து வருகிறது.
இதனை உணர்ந்த மத்திய அரசு 2013ம் ஆண்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் வங்கிச் சேவையை அளிப்பதற்கான ஆலோசனையை வழங்குவதற்கு நசிகேத் மோர் என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
இந்த குழுவின் ஆலோசனைபடி, பேமென்ட் பேங்க் மற்றும் சிறிய வங்கி என்ற இரண்டு வகை வங்கிகளை உருவாக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.
பேமென்ட் பேங்க் என்பது வழக்கமான வங்கியை போன்றது கிடையாது. இது மிகவும் சிறிய வங்கி ஆகும். இதில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை நீண்டகால வைப்பு தொகை வைக்கலாம். சேமிப்பு கணக்கு துவங்கலாம்,
காசோலை, டிராப்ட், பேஆர்டர் மூலமாக பணபரிமாற்றம் செய்யலாம். டெபிட் கார்டு பெறலாம், ஆனால் கிரெடிட் கார்டு பெறமுடியாது.
சாதாரண காப்பீடு, பரஸ்பர நிதி போன்ற நிதி வகைகளை இந்த சிறிய வங்கிகள் விற்கலாம்.
இடம் பெயரும் தொழிலாளர்கள், சிறு கிராமங்களில் வசிப்பவர்கள், சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்கள் போன்றோருக்கு இந்த பேமென்ட் பாங்க் சிறந்த வரப்பிரசாதமாக அமையும்.
சிறிய வங்கிகளுக்கும் சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கு துவங்கலாம். மற்ற அனைத்து வழக்கமான வங்கி சேவைகளையும் பெறலாம். பாதுகாப்பு பெட்டக வசதி பெறலாம்.
இந்த வங்கிகள் கொடுக்கும் கடன் தொகை ரூ.25 லட்சத்தை தாண்டக்கூடாது என்ற எல்லை வகுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகளால் குறு தொழில் நிறுவனங்கள், சிறு விவசாயிகள் போன்றோருக்கு நல்ல பயன் கிடைக்கும்.
பேமென்ட் பேங்க் மற்ற பெரிய வங்கிகளுக்கு வியாபார முகவர்களாகவும் (தீusவீஸீமீss நீஷீக்ஷீக்ஷீமீsஜீஷீஸீபீமீஸீt) இருக்கலாம். இதன் மூலமாக பேமென்ட் பேங்க் மற்ற வங்கிகளின் கடன், நீண்டகால வைப்பு தொகை போன்ற நிதி சேவைகளை கொடுக்கலாம். மேலும் மற்ற பெரிய வங்கிகளுடன் கூட்டாக இணைந்தும் பேமென்ட் பேங்க், வங்கி சேவையை அளிக்கலாம்.
சிறிய வங்கிகள் கொடுக்கும் கடனில் 75 சதவிகிதம் முதன்மை துறைகளாக உள்ள விவசாயம், சிறு தொழில் போன்றவற்றிற்கு கொடுக்கவேண்டும்.
இந்த சிறிய வங்கிகளை தொடங்குவதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பல கார்ப்ரேட் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அதேபோல பைனான்ஸ் நிறுவனங்களும், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளது. தகுதியான நிறுவனங்களுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகை வங்கிகளுக்கு குறைந்த பட்சம் ரூ 100 கோடி முதலீடு வேண்டும். அந்நிய முதலீடு 74% வரை இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறிய அளவிலான வங்கி சேவையை அளிப்பதற்கு அரசு பொதுத்துறை வங்கிகள் விண்ணப்பிக்காதது ஆச்சரியம் அளிக்கிறது. இந்திய தபால் துறை மட்டும்தான் விண்ணப்பித்துள்ளது.
இந்த சிறிய வங்கிகளின் சேவை நடைமுறைக்கு வந்த பிறகு மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கினால்தான் மக்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். இந்த உண்மையை உணர்ந்து புதிய சிறு வங்கிகள் செயல்பட வேண்டும் என்பதை மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.