25 வயதை கடந்த ஒவ்வொருவருக்கும் ரூ 25 ஆயிரம் இலவசம்! இங்கல்ல.... சிங்கப்பூரில்

சிங்கப்பூர் மக்கள் அவர்களது திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் 25 வயதை கடந்த ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் உதவித் தொகையாக அந்நாட்டு அரசு 500 வெள்ளி[25 ஆயிரம் ரூபாய்] ஒதுக்கியுள்ளது. இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தை சிங்கப்பூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு நாட்டினரும் வியந்து போற்றுகிறார்கள்.
சிங்கப்பூர் போல, தனது குடிமக்களின் திறன் வளர்ச்சிக்கு இப்படிப்பட்ட திட்டத்தை வேறு எந்த நாடும் செய்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ என அழைக்கப்படும் இந்தத் திட்டம் எதிர்காலத் திறன்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக அந்நாட்டினர் தெரிவிக்கின்றனர்.
‘கல்வியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் திறன்கள் உருவாவதில்லை, அது இயல்பினாலும், சூழ்நிலைகளாலும் உருவாவது.
இத்தகைய அம்சத்திற்கு உரமிடுவதும், தூண்டுதல் செய்வதும் அவசியமாகும்‘ என்பது அறிஞர்களின் கூற்று. இந்த கூற்றுக்கு சிங்கப்பூர் அரசு செயல்வடிவம் தந்திருப்பது பாராட்டுக்குரியது.
திறன்களைக் கொண்டாடும் தேசமாக சிங்கப்பூரை உருவாக்குவதே அதன் இலக்கு என்று அந்நாட்டு நிதியமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் கூறியது இங்கே நினைவுகூறத்தக்கது.
உலகின் பெரும்பாலான நாடுகள் தமது பட்ஜெட்டில் சிக்கனத்திற்கே முன்னுரிமை கொடுக்கின்றன. செலவுகளுக்குக் கடிவாளம் போடுவதை பல நாடுகள் இயல்பாகவே வைத்துள்ளன. ஆனால் சிங்கப்பூர் இதில் விதிவிலக்கு. திறன் வளர்ச்சிக்கு இலவசமாக செய்யும் செலவை அந்நாடு முதலீடாக பார்க்கிறது. இது சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் என்ற அந்நாட்டின் நம்பிக்கை சரியானதே என்று பொருளாதார அறிஞர்களும் கூறியுள்ளனர்.

குமார்

Issues: