நிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் 3‘சி’ கோட்பாடு

ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான நிறுவனங்கள் தோன்றினாலும் சில நிறுவனங்கள் மட்டுமே தொழிற்துறையில் தொடர்ந்து இயங்குகின்றன.
 நட்டம், இயக்குனர் குழு சண்டை, தொழிலாளர்கள் பிரச்சனை, மாறிவரும் சூழலை புரிந்து கொள்ளாமை, போட்டியை எதிர்கொள்ள முடியாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான நிறுவனங்கள் மெல்ல மெல்ல மறைகின்றன.

சில நிறுவனங்கள் மட்டுமே பல ஆண்டுகளுக்குப் பின்பும் இளைமைத் தோற்றத்துடன் வலம் வருகின்றன. இதற்குப் பல காரணங்கள் உண்டு. இது போன்ற வெற்றி நிறுவனங்கள் கடைபிடிக்கும் 3‘சி’ கோட்பாடுதான் அதற்கு முக்கியக் காரணமாகும். அது என்ன  3‘சி’ கோட்பாடு?
1.  Customer (வாடிக்கையாளர்)
2. Competitor  (போட்டியாளர்)
3.  Change (மாறுதல்)
ஆகிய  மூன்று ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது தான் ‘சி’ என்பதாகும்.
 
Customer(வாடிக்கையாளர்)

வாடிக்கையாளர்களின் மனநிறைவை அதிகரித்தல், தரமான பொருள் மற்றும் சேவையை ஒப்புக்கொண்ட கால அவகாசத்திற்குள் வழங்குதல், நியாயமான விலையில் வழங்குதல் போன்றவை நிறுவன வெற்றிக்கு அடிப்படையாகும்.
தற்போதைய நிகழ்காலத் தேவைகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதோடல்லாமல், எதிர்காலத் தேவைகளையும் கணித்து உற்பத்தி செய்வது அவசியமானதாகும்.
அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார சூழல் மாற்றங்களையும் கணக்கில் கொள்வது அவசியமாகும்.
காலத்திற்கேற்ப நாகரிகமும், ரசனைகளும் மாறுகின்றன.  இதனையெல்லாம் மனத்திற்கொண்டு வாடிக்கையாளர்களைப் பெறவும், தக்க வைக்கவும் வேண்டிய முயற்சிகளை செய்ய வேண்டும்

Competitor  (போட்டியாளர்)
போட்டியில் தொடர்ந்து நிற்பதற்கு சந்தை ஆய்வு அவசியம். சில நேரங்களில் போட்டியாளர்கள் சிறந்த புதிய பொருளை சந்தையில் மக்கள் விரும்பி வாங்கும் விலையில் வெளியிடுவது உண்டு.  அந்த நேரங்களில், அதற்கு ஈடான பொருளை உடனடியாக விற்பனைக்குக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
இந்த போட்டி உணர்வு, நிறுவன வளர்ச்சிக்குத் தூணாக இருக்கும். வாடிக்கையாளர்கள் குறித்து சில நிறுவனங்கள், போட்டி நிறுவனங்களைக் கண்காணிக்கின்றன. அதனடிப்படையில் போட்டி நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்வது குறித்த வியூகத்தை வகுக்கின்றன.

 Change (மாறுதல்)
பழையன கழிதல், புதியன புகுதல் என்பது இயல்பான ஒன்று. வெற்றி நிறுவனங்கள் புதிய மாற்றங்களையும், மாறுதல்களையும் மனமுவந்து ஏற்றுக் கொள்கின்றன. அதன் மூலம் உற்பத்திச் செலவை குறைக்க முடியுமா, பிற செலவினங்களைக் கட்டுப்படுத்த முடியுமா, என்பன போன்ற  விசயங்களை கணித்து அதற்கேற்ப செயல்பட்டு, மாறுதல்களின் பலன்களைப் பெறுகின்றன.
மேற்கண்டவாறு வாடிக்கையாளர், போட்டியாளர், மாறுதல் என்ற ‘சி’ அம்சங்களை உணர்ந்து செயலாற்றும்  நிறுவனங்கள் வெற்றிப்பாதையில் பயணிக்கின்றன. மற்றவர்கள் பார்வையாளர்களாகி விடுகின்றனர்.

சுகுமார்

 

Issues: