தடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...

அமெரிக்காவில் சாமானிய மக்களும் பலன் பெறும் வகையில் அதிபர் ஒபாமா,   இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, சுகாதார காப்பீட்டு திட்டத்தை   கொண்டு வந்திருந்தார். அமெரிக்காவில் இது ஒபாமா கேர் என அழைக்கப்படுகிறது. இதற்காக தனிச்சட்டமும் கொண்டு வந்திருந்தார் ஒபாமா.

இந்த சட்டம், அரசாங்கத்தின் சுகாதார காப்பீட்டு திட்டங்களிலோ அல்லது பணி புரியும் நிறுவனங்கள் செயல்படுத்துகிற இன்சூரன்ஸ் திட்டங்களிலோ  பலன் பெறாத தனிநபர்கள், குறைந்த செலவிலான அரசின் புதிய காப்பீட்டுத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறுகிறது.

இத்திட்டத்திற்கு அரசு மானியம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காப்பீடுதாரர்களுக்கு மானியம் வழங்குவதால் அரசுக்கு கூடுதல் செலவு பிடிக்கும் என குடியரசு கட்சி குற்றம் சாட்டியது.
அத்துடன் இத்திட்டத்திற்கு எதிராக,  அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கையும் தொடர்ந்தது. வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பின் மூலம் ஒபாமாவின் சட்டம் அமலில் இருக்கும். நாடு முழுவதும் மானியம் தொடரும். ஒரு வேளை இந்த தீர்ப்பு ஒபாமாவின் சட்டத்துக்கு எதிராக அமைந்திருந்தால், 34 மாகாணங்களில் 64 லட்சம் பேர், மாதம் ஒன்றுக்கு 272 டாலர் மானியத்தை (சுமார் ரூ.17 ஆயிரம்) இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அது இப்போது தடுக்கப்பட்டு விட்டது. இத்திட்டம் அதிபர் ஒபாமாவின் ஒரு மாபெரும் கனவுத் திட்டமாகும்.

தடைகளை கடந்து வெற்றி
ஈராக், ஆப்கானிஸ்தான் போரைத் தொடர்ந்து அமெரிக்க பொருளாதாரம் படுபாதாளத்தை நோக்கி போய்க்  கொண்டிருந்தது. அத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்தான் அமெரிக்க அதிபர் பொறுப்பை ஏற்றார் ஒபாமா.  

கருப்பினத்தை சேர்ந்த முதல் அதிபர் ஒபாமாதான். பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவது அவரது தலையாய பணியாக இருந்தது. தனது தளராத செயல்பாட்டினால் அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினார்.

2008ல் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்த ரியல்எஸ்டேட் துறையை எழுச்சி பெறச்செய்தார்.  முன்பு சில ஆயிரம் டாலர்களுக்கு வீடுகள் கிடைத்த நிலை மாறி தற்போது வீடுகள் விலை, கடும் உயரத்திற்கு  போய்க் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஒபாமாவின் நடவடிக்கைதான்.

லத்தீன் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில்  கூட கட்டுமான தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என்கிற செய்தி, கட்டுமானத்துறை எவ்வளவு எழுச்சி பெற்றிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

உலகையே அச்சுறுத்திய  ஒசாமா பின்லேடனை ஒழித்துக்கட்டிய சாதனையை நிகழ்த்தினார். டெட்ராய்ட் வாகனத் தொழில்துறையை மீட்டெடுத்தார்.
இராக், ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்வதாக அறிவித்தார். ஓரினச் சேர்க்கையாளர்களை ராணுவத்தில் சேர்க்கக்கூடாது என்றிருந்த சட்ட விதியை மாற்றி அவர்களும் பணியாற்றலாம் என்ற நிலையை ஏற்படுத்தினார். பல்வேறு துறைகளில் வரிக்குறைப்பு செய்தார்.

சுகாதாரம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தம் கொண்டு வந்தார்.

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணத்தை அங்கீகரிக்க முயற்சி மேற்கொண்டார்.

இந்த சாதனைகள்  காரணமாகத்தான் அமெரிக்க மக்கள் அவருக்கு இரண்டா வது முறையாக அதிபராவ தற்கு வாய்ப்பு கொடுத் தனர்.
பல்வேறு பிரச்சனைகளை சமாளித்து சாதனைகள் புரிந்த  ஒபாமாவுக்கு, எதிர்க்கட்சியான குடியரசு கட்சியையும் சமாளிக்க வேண்டி இருந்தது.
செனட் சபையில் ஒபாமாவின் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் எந்த ஒரு திட்டத்தை நிறை வேற்று வதற்கும், குடியரசு கட்சியின் தயவு வேண்டி இருந்தது.
அதிபர் ஒபாமாவின் முதல் பதவிக் காலம் முழு வதும் ‘ஒன் டைம் ஒபாமா’ என்ற வெளிப்படையான முழக்கத் துடன் குடியரசுக் கட்சியினர், ஒபாமாவின் அனைத்து முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போட்டு வந்தனர்.

இதையெல்லாம் சமாளித் துத்தான் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட் டெடுத்தார் ஒபாமா. இந்நிலையில் பல்வேறு சவால்களுக்கு இடையே மருத்துவ காப்பீட்டு  சீர்திருத்த திட்டத்தை கொண்டு வந்தார்.

அமெரிக்காவின் அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதுதான் இந்த காப்பீட்டு திட்டம்.
ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு பெரும் ஆதரவு அளித்து வருபவர்களில் முக்கியமானவர்கள் ஏழை எளியவர்கள் மற்றும் லத்தீன் இன மக்கள் ஆவர்.  

 

இப்படி ஏழைகளின் வசதிக்காக திட்டம் தீட்டி வெற்றி பெற்று விட்டால், தாங்கள் ஆட்சிக்கு வரவே முடியாது என்பது குடியரசுக் கட்சியினரின் அச்சம். எனவேதான் இத்திட்டத்தை முடக்குவதில் அக்கட்சியினர் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென சென்ற ஆண்டு அரசையே முடங்கச்செய்தனர் குடியரசு கட்சியினர்.  ஒபாமா கேர் திட்டத்தை நிறுத்தினால்தான் பட்ஜெட்டை அனுமதிப்போம் என்று போர்க்கொடி தூக்கினார்கள்.
பத்து நாட்களுக்கு மேலாக அரசு இயந்திரமே முடங்கிப்போனது. ஆனாலும் ஒபாமா அசரவில்லை. இந்த திட்டத்தை நடைமுறைபடுத்தியே தீர்வேன் என்று உறுதியோடு சொன்னார்.

அவர் சொன்னபடி திட்டத்தை நடைமுறை ப்படுத்தியும் விட்டார். இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் இனி சிக்கல் எதுவும் நிகழாது. ஒபாமாவின் சாதனைப்பயணம் தொடர வாழ்த்துவோம்.

Issues: