நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம்

பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தில் நாங்குநேரி சிறப்பு தொழில் நுட்ப பொருளாதார மண்டலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.அதனால்தான் கடந்தமாதம் ஜப்பான் நாட்டின் முதலீட்டாளர்கள் குழு இந்த பொருளாதார மண்டலத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக, குழுவின் தலைவர் ஹிரோயகி தக்கயமா கூறினார்.
மேலும் இந்த பகுதியில் செழுமையான மனித வளம் உள்ளது என்றும், அருகில் உள்ள தூத்துக்குடி துறைமுகம் மூலம் உற்பத்தி பொருட்களை வேறு நாடுகளுக்கு உடனடியாக கொண்டு செல்ல வசதி உள்ளது என்றும்,இந்த அம்சம் எங்களை எங்களை மிகவும் கவர்ந்தது என்றும் அவர் கூறினார்.
அதே போல பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு முன்னணி கார் நிறுவனம் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில், தனது கார் நிறுவனத்தை நிறுவ மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது.
ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் இங்கே தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. குடிநீர், சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதால் இங்கு தொழில் துவங்க பல நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன.
இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் துவங்கினால் முதல் 5 ஆண்டுகளுக்கு வருமான வரிச்சலுகை கிடைக்கிறது. சுங்கம், வணிகவரி, சேவைவரி உள்ளிட்ட வரிகளை செலுத்தத் தேவையில்லை. அதற்கடுத்த 5 ஆண்டுகளுக்கு 50 சதவீத வருமான வரி மட்டும் செலுத்தினால் போதும் என்பன போன்ற அம்சங்கள் முதலீட்டாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
60 கி.மீ. தொலைவில் தூத்துக்குடி துறைமுகம், 175 கி.மீ. தொலைவில் திருவனந்தபுரம் மற்றும் மதுரை விமான நிலையங்கள், 4 கி.மீ தொலைவில் ரயில்நிலையம், தேசிய நெடுஞ்சாலை-7 என, தடையற்ற சரக்கு போக்குவரத்துக்கு ஏற்ற வசதிகள் நிறைந்துள்ளதால், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்றுமதி தொழிலுக்கு சிறந்த இடமாக அமையும்.
இந்த நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் ரூ.15,000 கோடி வரை முதலீடுகளை ஈர்க்கும். இத்திட்டம் முழுமையாக செயல்படத்தொடங்கும் போது ஏறத்தாழ 70 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும்.
இது தமிழகத்தில் அமையும் பல்முறை பொருள்கள் சார்ந்த முதல் சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய பொருளாதார வளர்ச்சியில், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் முக்கிய பங்கு வகிக்கும்.
சிறப்பு பொருளாதார மண்டலம் அமைந்துள்ள நாங்குநேரி திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்டதாகும்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் என சுற்று வட்டார மாவட்டங்களுக்கும் முக்கியமான வர்த்தக நகரம் திருநெல்வேலி என்பதால், பல முன்னணி வணிக நிறுவனங்கள் யாவும் போட்டி போட்டுக்கொண்டு திருநெல்வேலி பகுதியில் தொழில் தொடங்கி வருகின்றன.
உள்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து, சாலைவசதி போன்ற விஷயங்களும் நன்றாகவே இருப்பதால் புறநகர விரிவாக்கம் மிக வேகமாக இருக்கிறது.
கடந்த நான்கு வருடங்களில் புறநகர வளர்ச்சி பல மாற்றங்களை கண்டுவருகிறது. இதனால் ரியல் எஸ்டேட் தொழில் மிக செழிப்போடு இந்த பகுதியில் நடந்து வருகிறது. நிலத்தின் விலை பன்மடங்கு உயரும் என்பதால் நாங்குநேரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலங்களை வாங்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பால்ராஜ்

Issues: