குஜராத்தில் புதிய சர்வதேச பங்குச் சந்தை..முதலீடு குவியும் என எதிர்பார்ப்பு!

குஜராத் மாநிலத்தில் தற்போது செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும், புதிய நிறுவனங்களுக்கு பயன்படுவதற்காகவும் குஜராத்தில் புதிய சர்வதேச பங்குச் சந்தையை அமைக்க மும்பை பங்குச் சந்தை ஆணையம் முடிவு செய்துள்ளது.
மும்பை, கொல்கத்தா, டில்லி, சென்னை போன்ற முக்கிய பெரு நகரங்கள் இருக்கையில் சர்வதேச பங்கு சந்தையை அமைக்க குஜராத் மாநிலம் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. பிரதமரின் மோடியின் செல்வாக்கு இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் நரேந்திர மோடி தலைமையில் குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் 7வது வைபரன்ட் குஜராத் வர்த்தக மாநாடு நடந்தது. இதில் இந்தியாவின் பல்வேறு தொழில்அதிபர்கள் 1 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்வதாக அறிவித்தனர். மேலும் அன்னிய நாட்டு நிறுவனங்கள் சுமார் 20 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இதன் எதிரொலியாகத்தான் குஜராத்தில் புதிய சர்வதேச பங்குச் சந்தையை அமைக்க மும்பை பங்குச்சந்தை ஆணையம் ஒப்புதல் தந்துள்ளது.
இப்புதிய சர்வதேச பங்குச் சந்தையில் மின்னணு முறையில் நிறுவன பங்கு வர்த்தகம், பத்திரங்களை விற்றல் மற்றும் வாங்குதல், வட்டி வகிதம் அளித்தல், பண பரிமாற்றம், நாணய சந்தை, சொத்து பரிமாற்றம் போன்ற சேவைகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இப்புதிய சந்தை குஜராத்தின் ஸ்மார்ட் சிட்டியான நிமிதிஜி-ஷிணிஞீ பகுதியில் அமைய உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர குஜராத் மாநிலம் சுமார்
1 லட்சம் கோடி ரூபாய் செலவில் இந்த ஸ்மார்ட் சிட்டியை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய சர்வதேச பங்கு சந்தையை மும்பை பங்குச் சந்தையும் அதன் துணை அமைப்புகளும் இணைந்து ரூ. 150 கோடி முதலீட்டில் அமைக்கும் என கூறப்பட்டுள்ளது. இச்சந்தையின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பிற வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து பெருமளவு மூலதனத்தை திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Issues: