நாடு மேலும் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க உதவுமா ஜி.எஸ்.டி முறை?

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வழிவகுக்கும் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறை 2016 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கான அரசியல் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 352 வாக்குகள் அளிக்கப்பட்டது. எதிராக 37 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டது.
விரைவில் மாநிலங்களவையிலும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இந்த மசோதா சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று  காங்கிரஸ் கோரியிருந்தது.
ஆனால் இக்கோரிக்கையை நிராகரித்த அருண் ஜேட்லி, ‘மசோதா என்பது நடனமாடும் ஒரு உபகரணம் கிடையாது. எனவே நிலைக்குழுவிலிருந்து நிலைக்குழு என்று அதனை தாவச்செய்து கொண்டே இருக்க முடியாது.

நிபுணர்கள் குழு பரிந்துரை செய்த 27% வரி மிகவும் அதிகம் என்பதால்  நிச்சயம் இது குறைக்கப்படும்.
நாடு முழுதும் ஒரே வரி விதிப்பு முறை இருக்கும் போது பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும். இதன் மூலம் நாடு மேலும் வளர்ச்சியை  நோக்கி அடியெடுத்து வைக்க முடியும்’ என்றார்.
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தினால் மாநில அரசுகள் வசூலிக்கும் சுங்க வரி, சேவை வரி, மாநில வாட் வரி, நுழைவு வரி, ஆக்ட்ராய் வரி, பிற வரிகள் போன்றவை  சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த ஜிஎஸ்டி விரிவிதிப்பால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து இந்தப் பொது வரியால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால், அதை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ஈடுகட்டும் என்று  சட்டபூர்வமாக உறுதி அளித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் கூடுதலாகும் என்பது மத்தியஅரசின் எதிர்பார்ப்பாக உள்ளது. தொழில் துறையினரும் இந்த வரிவிதிப்பு முறையை வரவேற்பதாகவே தெரிகிறது. இதன் மூலம் உற்பத்தி அதிகரிப்ப தோடு ஏற்றுமதியும் பெருகும் என்பது தொழில் துறையினரின் கருத்தாக உள்ளது.
ஜிஎஸ்டி விரிவிதிப்புக்கு காரணம் என்ன?

சுதந்திரம் அடைந்த பிறகு மத்தியஅரசுதான் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தியது. பின்னர் 70 களில் மாநிலங்களும் தனியார் முதலீடுகளை ஈர்க்கத் தொடங்கின.  
எந்த மாநிலங்களில் சாலை வசதி, இட வசதி, தடையில்லா மின்சாரம், போதுமான உழைப்பாளர்கள் உள்ளிட்ட அம்சங்கள் இருந்தனவோ அந்த மாநிலங்களில் தனியார் கம்பெனிகள் தங்களது தொழிற்சாலைகளை தொடங்கின.

மேலும் மாநிலங்கள் விற்பனைவரி சலுகைகளை கொடுத்தும் முதலீட்டை ஈர்த்தன. முதல் 3 அல்லது 5 வருடங்களுக்கு விற்பனை வரி விலக்கு என்ற சலுகையை கொடுத்ததும் நடந்தது. இதனால் வரி விகிதங்கள் மாநிலங்களிடையே ஏற்றத்தாழ்வுடன் இருந்தன.
இது நாடு முழுவதும் ஒரே சீரான வளர்ச்சி என்ற மத்தியஅரசின் நோக்கத்துக்கு எதிராக இருந்ததால் மாநிலங்களின் ஒப்புதலோடு வாட் வரிவிதிப்பு முறை  கொண்டு வரப்பட்டது.
இது வரி வசூலிப்பதை எளிதாக்கியது. பெட்ரோல், மதுவகைகள் இவற்றிற்கு  வாட் அல்லாத விற்பனை வரி விதிக்கலாம் என்ற அம்சத்தை மாநிலங்கள் ஒப்புக்கொண்டு 2005முதல் வாட்  வரியை அமல்படுத்தின. இது பல நன்மைகளை விளைவித்தது.

►ஒன்று அல்லது இரண்டு வரி விகிதங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நடைமுறை வந்தது. அதாவது எல்லா பொருட்களையும் இரண்டு தொகுப்புகளாக கொண்டு இரண்டு வரி விகிதங்கள் வைக்கவேண்டும். இதனால்தான் வரி வசூலிப்பது எளிதாக ஆகியது.

►வேளாண் பொருட்கள் போன்ற சில பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்பட்டு முடிந்தவரை எல்லா பொருட்களும் வரி விதிப்புக்கு உட்படுத்தப் பட்டது. இதனால் மாநிலங்களின் வருவாய் உயர்ந்தது.

►    மாநிலங்களுக்கு இடையே உள்ள விற்பனையின் மீது விதிக்கப்படும் CST  நீக்கப்பட்டது.
ஒரு மாநிலத்துக்குள் நிகழும் விற்பனையின் மீது, மாநில அரசே விற்பனை வரி விதிக்கலாம் என்ற அதிகாரத்தை  மாநிலங்கள் முறையாக பயன்படுத்தவில்லை என்பதால்தான் வாட் வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப் பட்டது.

இந்நிலையில் ஜிஎஸ்டி விரிவிதிப்பின் மூலம் இன்னும் அரசின் வருமானத்தை அதிகரிக்கச் செய்து  பொருளாதார வளர்ச்சியையும் அதிகப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்படுவதுதான் ஜிஎஸ்டி விரிவிதிப்பு முறை.
நாடு முழுவதற்கும் பொது வரி விதிக்கப்படுவதால், தொழில்களும் சேவைகளும் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு இடம்பெயரும் சூழ்நிலை உருவாகாது.
பெட்ரோலியப் பண்டங்கள், புகையிலை உட்பட பெரும்பாலான சரக்குகளும் சேவைகளும் இந்த சரக்கு, சேவை வரிச் சட்டத்தின் வரம்புக்குள் வருகின்றன. இதனை முன்னிட்டே மாநில அரசுகள், வருவாய் குறையும் என்ற அச்சத்தை மத்தியஅரசிடம் முறையிட்டன.

இதை ஏற்றுக்கொண்ட மத்தியஅரசும் இந்தப் பொது வரியால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால், அதை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ஈடுகட்டும் என்று  சட்டபூர்வமாக உறுதி அளித்துள்ளது.பெட்ரோலியப் பண்டங்களை முழுக்க முழுக்க மத்திய அரசின் வரம்பில் கொண்டுவருவதற்கான நாள், மாநில அரசுகளுடன் ஆலோசனை கலந்த பிறகு இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

சேவை வரி விதிப்பு முழுக்க முழுக்க இப்போது மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் இருக்கிறது. இனி, அது மாநிலங் களுடனும் பகிர்ந்து கொள்ளப்படும்.
மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தின்போது, சரக்குகள் மீது கூடுதலாக ஒரு சதவீத வரி விதிக்கப்படும். இதை மத்திய அரசு வசூலிக்கும். ஆனால், இந்த வரி வருவாய் எந்தெந்த மாநிலங்களிலிருந்து வருகிறதோ அவற்றுக்கே பிரித்து வழங்கப்படும்.

பொது சரக்கு, சேவை வரி முறைக்கு மாறினால், உடனடியாக நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஒரு சதவீதம் உயர்ந்துவிடும் என்றும்,  வரி விகிதம் குறையும் என்றும்,    வரி செலுத்துவோர் எண்ணிக்கை 5 மடங்கு முதல் 6 மடங்கு வரை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்
‘1947-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை செய்யப்பட்ட வரி சீர்திருத்தங்களில் மிகப் பெரிய புரட்சி இதுவே’ என்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

பாண்டியன்

 

Issues: