கச்சா எண்ணை குறைவால் விலை சாதகமடையும் இந்தியா
கச்சா எண்ணெயின் விலை உலக அளவில் கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 110 டாலருக்கு விற்றது. தற்போது சுமார் 40 சதவீதம் அளவிற்கு விலை குறைந்து 65 டாலருக்கு விற்பனையாகி வருகிறது.
இந்த அளவிற்கு அதிரடியாக விலை குறைந்த தற்கு காரணம் என்ன? கச்சா எண்ணெயின் விலை குறைவதற்கும் அதிகரிப் பதற்கும் முன்பெல்லாம் காரணமாக இருந்தது ஐக்கிய அரபு நாடுகள்தான். இப்போது விலை குறைவிற்கு காரணமாக இருப்பது அமெரிக்காதான் என்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் அதிக அளவு சப்ளையாகி கொண்டிருக்கிறது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட கச்சா எண்ணெய்க்கு அமெரிக்கா எண்ணெய் வள நாடுகளையே சார்ந்து இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் உற்பத்தியில் அது தன்னிறைவை அடைந்து மற்ற நாடுகளுக்கு சப்ளை செய்யும் நாடாக உருமாறி உள்ளது. நாள் ஒன்றுக்கு அமெரிக்கா உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு சுமார் 9 மில்லியன் பேரல்களை தொட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவிடம் உள்ள தொழில்நுட்ப வசதிகள்தான். அமெரிக்கா தற்போது கச்சா எண்ணெய் உற்பத்திக்கு ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதன் காரணமாக அந்நாடு அதிக உற்பத்தியை அறுவடை செய்கிறது.
அமெரிக்கா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சில பின்னணி காரணங்களும் உண்டு. உலகில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கிய நாடுகளான ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவே அமெரிக்கா தனது உற்பத்தியை அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்து வருவது இந்த இரண்டு நாடுகளுக்கும் மிக பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.
கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை குறைத்துக்கொள்ள இருப்பதாக செய்திகள் வந்தபடி உள்ளன. அப்போது கச்சா எண்ணெய் விலை உயர கூடும் என்று சிலர் கூறுகின்றனர். எனினும் அமெரிக்கா தனது உற்பத்தியை குறைத்துகொள்ளாத வரை விலை உயர்வு சாத்தியமில்லை என்றே சொல்ல வேண்டும்.
தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவையும் பயன்பாடும் குறைந்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் பயன்பாட்டில் முன்னனியில் உள்ள நாடு சீனாதான். ஆனால் அந்நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெயின் பயன்பாடு அந்நாட்டில் வெகுவாக குறைந்துள்ளது.
அதேபோல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் இறக்கத்தில் இருப்பதும் கச்சா எண்ணெயின் விலை குறைய காரணமாகியுள்ளது. கச்சா எண்ணெயின் விலை குறைவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையாத சூழலே தற்போது நிலவி வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்து இருப்தால் இந்திய பொருளாதாரத்தில் முக்கியமான சில மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நம்மால் உணர முடிகிறது.
வெளிநாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்களில் முதலிடத்தில் இருப்பது கச்சா எண்ணெய்தான். பொதுவாக கச்சா எண்ணெயின் விலை குறையும்போது பங்குசந்தையின் மதிப்பு உயரும். அவ்வாறு உயரும்போது ரூபாயின் மதிப்பும் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்திருக்கிறது.
கடந்த ஜனவரி 2012ல் 5,430 ரூபாய்க்கு வர்த்தகமான ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 6,000 ரூபாய்க்கு மேல் சென்றது. தற்போது பேரல் ஒன்று ரூ.4,500க்கு விற்பனையாகிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறை கணிசமாக குறைந்து இருப்பதற்கு இதுவே காரணமாகும்.
கச்சா எண்ணெயின் விலை குறைவால் இந்தியாவுக்கு சாதகமான விளைவுகள் ஏற்பட்டிருப்பதை பார்த்தோம். ஆனால், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு விலை குறைப்பு என்பது கவலை அளிக்கும் விஷயமாகத்தான் இருக்கும்.
எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைத்தால் மட்டுமே சரிந்து வரும் விலையினை கட்டுப்படுத்த முடியும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருக்கும் 12 அமைச்சர்கள் நவம்பர் 27-ம் தேதி வியன்னாவில் கூடி எண்ணெய் நிலவரத்தை பற்றி விவாதித்தனர். இதில் உற்பத்தியை குறைப்பது பற்றியும் அடுத்த வருடத்தின் உற்பத்தி இலக்கு பற்றியும் விவாதித்தனர். உற்பத்தியை குறைக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தனர்.
இதற்கிடையே வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கி உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதினால் மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிராக டாலர் மதிப்பும் பலமடைந்து வருகிறது. ஆறு நாட்டு நாணயங்களுக்கு எதிராக இருக்கும் டாலர் இண்டெக்ஸ் நான்கு வருட உச்சத்தை நெருங்கி வருகிறது. மேலும் ஜேபி மார்கன் சேஸ் நிறுவனம் 2015-ம் ஆண்டுக்கான கச்சா எண்ணெயின் இலக்கு விலையை ஒரு பேரல் 115 டாலரிருந்து 82 டாலருக்கு குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே சர்வதேச அளவிலான கச்சா எண்ணெயின் விலை நீண்ட காலத்திற்கு 80 முதல் 85 டாலர் வரைதான் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இது இந்தியாவிற்கு மிகவும் சாதகமான ஓர் அம்சாகும்.
- நிருபர் குழு