அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் கிராஜுவிட்டி தொகை கிடைக்க வழிவகை செய்யுமா அரசு?

பணி ஓய்வுத் தொகை என அழைக்கப்படும் கிராஜுவிட்டி என்பது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று. இது வழங்கப்படுவதன் முக்கியநோக்கம், பணியாற்றும் ஊழியர்களின் சேவைகளை கௌரவிப்பதே.
கிராஜுவிட்டி தொகை வழங்குவதற்கான விதிமுறைகள் என்ன?
நிறுவனத்தின் ஊழியர் பட்டியலில் குறைந்த பட்சம் 10 நபர்களாவது இருக்க வேண்டும்.
இப்பட்டியலில் இடம்பெறுவோர் தற்காலிக பணியாளர்களாக இருக்கக்கூடாது.
அனைவரும் நிரந்தர ஊழியர்களாக இருக்க வேண்டும்
குறிப்பிட்ட நிறுவனத்தில் ஒரு நபர் குறைந்தது 5 வருடங்களாவது பணியாற்றியிருக்க வேண்டும்.
பணியில் இருக்கும் போதே ஒரு ஊழியர் மரணமடைய நேர்ந்தால், ஐந்து வருட காலம் என்ற விதிமுறை தளர்த்தப்படும்.
வருமான வரி
ஊழியருக்கு வழங்கப்படும் கிராஜுவிட்டித் தொகை, வரி விதிப்புக்கு உட்படுத்தப்படுகிறது. சம்பளத்திலிருந்து கிடைக்கும் வருவாய் என்ற அடிப்படையில் இந்த தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு, வருமான வரிச் சட்ட பிரிவு 10 ன் கீழ், கிராஜுவிட்டி தொகைக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. தனியார் நிறுவன ஊழியர்களும் தங்களது கிராஜுவிட்டி தொகைக்கு முழுமையான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்ததிலிருந்து அவர் நிறைவு செய்த ஒவ்வொரு பணி ஆண்டுக்கும் தலா 15 நாள் ஊதியம் என்ற அளவில் கணக்கிடப்பட்டு கிராஜுவிட்டி தொகை வழங்கப்படுகிறது. கடைசி 10 மாத பணிக்காலத்தின் போது பெறப்பட்ட சராசரி ஊதியம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
கிராஜுவிட்டி தொகை என்பது அமைப்புசார்ந்த பணியாளர்களான அரசுஊழியர்களுக்கும்,தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும் நிலையில், இதை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.அரசு இதை கவனத்தில் கொள்ளுமா?

Issues: