தொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’

இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இருக்கின்றனர். இந்திய இளைஞர்களுக்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தால், அவர்கள் உலகில் எப்பகுதியிலும்  பணியாற்றும் திறனைப்  பெறுவர். எனவே, திறன் மேம்பாட்டுத் துறையில் இந்தியாவுக்கு ஜப்பான் உதவ வேண்டும்’’ என பிரதமர் மோடி ஜப்பான் நாட்டுக்கு சென்றபோது வேண்டுகோள் விடுத்ததை நாம் அறிவோம்.
 
ஜப்பான் நமக்கு நட்புநாடு. அந்நாடு இந்த விசயத்தில் நமக்கு உதவக்கூடும். அல்லது உதவாமலும் இருக்கலாம்.
ஆனால் இந்தியா நமது இளைஞர்களுக்கு உதவ முடியும். அதனால்தான் இந்த ஆண்டில் நாடு முழுவதும் ரூ.200 கோடியில் 500 திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் அமைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 35 வயதுக்குக் கீழ் உள்ள 65 சதவீதம் இளைஞர்களில், 2 சதவீதம் பேர் மட்டுமே தொழில்திறன் உடையவர்களாக உள்ளனர் என்பதால் இந்த திட்டம் விரைவாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல சிறுபான்மையின மக்களுக்காக நாடு முழுவதும்  திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
தொழில் துறையினர் இத்திட்டத்துக்கு மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பெரிய நிறுவனங்களில் 11 லட்சம் கோடி முதலீடுகள் செய்யப்பட்டு 1 கோடியே 25 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் சிறு, குறு, தொழில்களில் ரூ. 5.71 லட்சம் கோடி முதலீட்டில், 14 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 40 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் பங்கு உள்ளது. எனவே அரசுகள் சிறு, குறு, தொழில்களுக்கு மேலும் ஊக்கமளிக்கவேண்டும் என்று தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமரின் முத்ரா வங்கித் திட்டம் மூலம் ரூ. 20 ஆயிரம் கோடி, சிறு குறு தொழில்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும் இத்தொகை போதுமானதல்ல என்பது தொழில்துறையினரின் எண்ணமாக உள்ளது. எனவே இன்னும் கூடுதல் தொகையை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.

கண்ணன்

 

Issues: