மாறட்டும்... உழவனின் வாழ்நிலை...

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்பவர்’

என்று  விவசாயிகள் குறித்து வள்ளுவர் மிகவும் பெருமையோடு சொன்னார். ஆனால் இன்றைக்கு விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்திய அளவில் தினமும் 50 விவசாயிகள்  தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்த தற்கொலைக்கு காரணம் கடன் தொல்லைதான். கடன் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
ஆனால் விவசாயியிடம் உணவு பொருட்களை வாங்கி விற்கும் இடைத்தரகர்கள் செல்வ செழிப்போடு வாழ்கிறார்கள். உரிய விலை கிடைக்காததின் காரணமாக கடன் சுமை ஏற்பட்டு விவசாயிகள் கடன் தொல்லைக்கு ஆளாகின்றனர்.

கடனை கட்ட முடியாமல் தத்தளிப்பவர்கள் தற்கொலை முடிவை மேற்கொள்கின்றனர். இந்நிலை மாற வேண்டும்.
பல விவசாயிகள் விவசாய தொழிலை கைவிட்டு நகர்புறத்தை நோக்கி நகர்கின்றனர்.  இதன் காரணமாக விவசாயம் செய்யும் நிலப்பரப்பு படிப்படியாக குறைந்து, உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையால் உணவு பொருட்களை அதிக அளவு இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு நம் நாடு தள்ளப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு நிரந்த சம்பளம் இருக்கிறது. மேலும் சம்பள உயர்வு இருக்கிறது. பல்வேறு வசதிகளை ஊழியர்களுக்கு அரசு செய்து தருகிறது.
அதேபோல லாபத்தில் நடந்து கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு கைநிறைய சம்பளம் தருகின்றன. இவர்களுக்கெல்லாம் சம்பள உயர்வு உண்டு. பஞ்சபடி உண்டு. ஊக்கத் தொகை, போனஸ் போன்றவை உண்டு.

ஆனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளுக்கோ மேற்சொன்ன சலுகைகள் கிடையாது.
விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைத்தால் தான் விவசாயிகளால் வாழ்க்கையையே நடத்த முடியும். வருமானத்திற்கான உத்திரவாதம் விவசாயிகளுக்கு இல்லை.
மழை கைவிரித்து விட்டால் இவர்களின் நிலை இன்னும் மோசமாகி விடும்.  அதேபோல  வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் நிலைமை  படுமோசமாகிவிடும். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்தான் நம்நாட்டு விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

விவசாய துறைக்கு முன்னுரிமை கொடுப்பதாக அரசு சொல்லிக் கொண் டாலும் நடை முறையில் தொழில் துறையும், சேவைத் துறையும் வளர்வது போல் விவசாயத்துறை வளர்வதில்லை.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் விவசாய துறையின் பங்களிப்பு 2 சதவீதம் என்கிற அளவில் தான் உள்ளது. ஆனால் விவசாயத்துறையில் ஈடுபட்டு வருமானம் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கையோ மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இந்த புள்ளி விவரம் வறுமை கோட்டுக்கு கீழ் கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவில் உள்ளார்கள் என்பதை உணர்த்துகிறது.

ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 1935ல் ரூ.15 ஆக இருந்தது. 1960ல் ரூ.60 ஆக இருந்தது. 1992ல் ரூ.3000ஆக இருந்தது. இன்றைக்கு ரூ.20,000 ஆக இருக்கிறது.
இதே 1935ல் ஒரு குவிண்டால் நெல்லின் விலை ரூ.5 ஆக இருந்தது. ஆனால் 80 ஆண்டுகள் கடந்து இன்றைக்கு ஒரு குவிண்டால் நெல்லின் விலை ரூ.1300 மட்டுமே.
மக்கள் தொகை பெருக்கத்தினால் தங்கத்திற்கு தேவை எவ்வளவு பெருகியிருக்கிறதோ அதே தேவை தான் நெல்லுக்கும் பெருகியிருக்கிறது. ஆனால் நெல்லின் விலை தங்கத்தின் விலை அளவிற்கு உயரவில்லை.
இப்படி சொல்வதால் அரிசி விலையை உயர்த்த வேண்டும் என்று நான் சொல்லவதாக கருத கூடாது. ஒரு ஒப்பீட்டிற்காக  சொன்னேன்.  விவசாயிகளின் வாழ்வு நிலை ஏன் வறுமையிலேயே உழல்கிறது என்பதை உணர்த்துவதற்காகவே மேற்சொன்ன விசயத்தை குறிப்பிட்டேன்.

‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூம் ட்டேம் என் பார்க்கும் நிலை’
என வள்ளுவர் கூறுகிறார். அதாவது உழவன் கை ஏர்பிடியாது ஓய்திருக்குமாயின் இல்வாழ்வை விட்டொழித்தோம் என பெருமை பேசும் துறவியருக்கும் வாழும் நிலை இல்லாமல் போகும் என்கிறார்.
அனைத்து தரப்பு மக்கள்  முதல் துறவியர் வரை அனைவருக்கும் உணவளிக்கும் உழவனுக்கு அரசு முன்னுரிமை கொடுப்பது மிகவும் அவசியம். ஆனால் இன்றைய நிலையில் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மிகவும் வருத்தத்திற்குரிய விசயம் ஆகும்.

தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் காதல் தோல்வியாலோ, கிரிக்கெட் தோல்வியாலோ, அபிமான சினிமா நடிகை திருமணம் செய்து கொண்டதாலோ, வயிற்று வலியாலோ சாகவில்லை. பயிர்களின் நஷ்டங்கள் உண்டாக்கிய கடன் தொல்லையால் வட்டி கொடுக்க முடியாமல் ஏச்சுக்கு ஆளாகி அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
1997 முதல் 2007 வரையிலான 10 ஆண்டுகளில் மட்டும்  ஒரு லட்சத்து 82ஆயிரத்து 936 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதன் பிறகு கடந்த 8 ஆண்டுகளிலும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.  இது கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்திலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் ஒரே கிராமம் ஆகி விட்டது என்கிறோம். விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தை தொட்டு விட்டது என்கிறோம். சந்திரனில் கால்பதித்து விட்டோம் என்று பெருமை கொள்கிறோம்.
ஆனால் வயிற்றுக்கு உணவு தருபவனான உழவனின் வாழ்நிலையோ மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. இந்நிலை மாறுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சந்திரசேகர்

 

Issues: