மாநகரங்களின் பிரச்சனையை தீர்க்க உதவும் ஸ்மார்ட் சிட்டி
ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சிறப்பு நகரங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. புதிதாக உருவாக இருக்கும் இந்த ஹைடெக் நகரங்கள், நெருக்கடிகள் மிகுந்த மாநகரங்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மும்பை, -டில்லி போன்ற பெருநகரங்களுக்கு அருகாமையில் உள்ள சிறு நகரங்களை ஹைடெக் நகரங்களாக உருவாக்கும் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
இத்திட்டத்திற்கு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக் கிறது. இதில் 26 சதவீத நிதியை ஜப்பான் முதலீடு செய்யவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் ஜப்பான் பயணத்திற்கு பிறகு 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கான நிதியும் உள்ளடக்கம்.
ஜப்பானை போல சிங்கப்பூரும் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கான முதலீடுகளை செய்வதாக அறிவித்துள்ளது.
இந்திய கார்ப்பரேட்டுகள் குழு, சி.எம்.ஏ.ஐ குழுமம், இண்டியன் இன்ப்ராஸ்ட்ரெக்சர், பவர்லைன் போன்ற இந்திய நிறுவனங்களுடன் ஐ.பி.எம், மைக்ரோசாப்ட், சிஸ்கோ உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட் சிட்டி கவுன்சில் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன.
இந்த நிறுவனங்கள் இந்தியாவின் நகரப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கூறுவதற்காக கருத்தரங்குகள், மாநாடுகள், ஆய்வுக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி வருகின்றன.
மிகப் பெரும் மூலதன பலம் கொண்ட குழுமங்கள், தகவல் தொடர்பு மற்றும் கட்டுமானத் துறைகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அவற்றிற்கு ஸ்மார்ட் சிட்டிகளை நிர்மாணிக்கும் திட்ட ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட இருக்கின்றன.
இந்த நிறுவனங்களுக்கும், மத்திய - மாநில அரசுகளுக்கும் இடையில் இப்போதே பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துவிட்டன.
இதில் சிங்கப்பூரும், ஜப்பானும் இப்போது இந்தியாவுடன் நெருங்கி வந்துள்ளன. இந்நாடுகள் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா என்கிற கனவு திட்டத்திற்கும் உதவுவதாக கூறியிருக் கின்றன.
இதன் காரணமாக டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் ஹைடெக் நகரங்களை நிர்மாணிக்கும் திட்டங்கள் வேகமாக உருவாகி வருகின்றன. இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபம் கொழிக்கும் மாபெரும் சந்தையாக இந்தியா உருவெடுத்திருக்கிறது.