முதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...

                                 “முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை’’
                                  “ஆக்கம் கருதி முதல் இழக்கும்’’ என்பது குறள்

நமது சமுதாயத்தில் முதலாளித்துவம் என்பதே இல்லை. அதே சமயத்தில் முதல் இல்லாமல் எந்தச் சமுதாயமும் இல்லை. தொழில்கள் பெருகி வேலைவாய்ப்பு பெருக வேண்டுமெனில் முதல் அவசியம். எனவே இந்த முதலை போடுபவர் தேவை. முதலை போடுவதால் தான் அவருக்கு முதலாளி என்று பெயர்.

மேற் சொன்ன குறளில் முதல் அடி நமக்கு உணர்த்துவது: முதல் என்கிற முதலீடு செய்யப்பட்டால் ஒன்று லாபம் வரலாம். அல்லது இழப்பு வரலாம். ஏனெனில் தொழிலில் லாபம் அல்லது இழப்பு சகஜமான ஒன்று. எனினும் லாபத்தை கருதியே மனிதன் உழைப்பான் என்பது அடிப்படை உளவியல். நஷ்டம் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் மனிதன் கூடுதலாக உழைக்கிறான். இது வாழ்வியல் எதார்த்தம்.

மனிதனுக்கு போட்டி மனப்பான்மை என்பது இயல்பிலேயே உள்ளது. முற்றும் துறந்த முனிவர்களுக்கும் துறவிகளுக்கும் கூட போட்டி மனப்பான்மை உள்ளதை நாம் காண்கிறோம். எந்த ஒரு துறவிக்கும் தனது மார்க்கமும் தத்துவமும் மட்டுமே நிலைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.

அதற்காகவே மற்ற மார்க்கங்களை விமர்சனம் செய்வதை கண்கூடாக காண்கிறோம். எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், துறவிகளுக்கே  போட்டி மனப்பான்மை இருக்கும் போது சராசரி மனிதர்களுக்கு இருப்பதில் வியப்பில்லை என்ற விஷயத்தைச் சொல்வதற்குத்தான்.

எந்த ஒரு மனிதனும் தனக்கு ஒரு தனித்தன்மை இருப்பதாக உணர்கிறான். மற்றவர்களை விட தான் தனித்து தெரிய வேண்டும் என்பதில் மனிதன் பேரார்வம் கொள்கிறான். பக்கத்து வீட்டுக்காரன் ஒரு சைக்கிள் வாங்கிவிட்டால் அவனை விஞ்சி ஸ்கூட்டர் வாங்கிவிட வேண்டும் என்று குறிக்கோள் கொண்டு விடுகிறான். போட்டி மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இது.

தனக்கு என்ன கிடைக்கும் என்ற ஆதாய உணர்வே ஒவ்வொரு மனிதனையும் இயக்குகிறது. இந்த ஆதார உண்மையை பொருளாதார நிபுணர்கள் அறிந்து வைத்திருந்தால்தான் சிறந்த பொருளாதார தத்துவங்களை உருவாக்கி அதன் மூலம் சமுதாயத்திற்கு நன்மையை விளைவிக்க முடியும்.

வள்ளுவர் ஒரு மாபெரும் தத்துவ ஞானி மட்டுமல்ல; அவர் பொருளாதார நிபுணரும் கூட. அதனால் தான் மனிதனின் உளவியலை நன்கு அறிந்து அதற்கேற்ப பொருளாதார தத்துவங்களை குறளாக வடித்து உலகுக்கு அளித்தார்.
முதல் போட்டு  டீக்கடையை நடத்துகிற ஒருவரை விடியற்காலை நான்கு மணிக்கு கடையைத் திறக்க ஓடவைப்பது எது? மக்களுக்கு டீ கொடுக்க வேண்டும் என்ற பொதுநலமா? தனக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்ற தன்னலமா?
மேலேயே சொன்ன மாதிரி தன்னலமே எந்த ஒரு மனிதனையும் இயக்குகிறது. அந்த தன்னலத்தில் பொதுநலம் கலந்திருக்கக்கூடும். பொதுநலத்தை முதன்மையானதாக கொண்ட மனிதனை இந்த உலகத்தில் காண்பது அரிது. எந்த ஒரு மனிதனும் ‘தான்’ ‘எனது’ என்கிற தன் சுயநலத்தில் இருந்துதான் செயலைத் தொடங்குகிறான் என்று கூறுகிறார் வள்ளுவர்.

எனவே தான் போட்ட முதலுக்கு நஷ்டம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் முதலாளி இரவு பகல் பாராமல் வேலையைச் செய்கிறார். தொழிலாளி 8 மணி நேரம் பணிபுரிந்தால் முதலாளி 16 மணி நேரம் வரை கண்விழித்து பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார். போட்ட முதலீடு ஒரு முதலாளியை கண்விழித்து வேலை பார்க்கச் சொல்கிறது.
தொழிலாளிக்கு சம்பளம் என்ற ஒன்று உண்டு. சம்பளம் கூடுவதற்கான ஒரு வாய்ப்பு உண்டு. இழப்பு என்பது இருக்காது. போட்ட முதலை முற்றிலுமாக இழந்து விடக்கூடிய துர்ப்பாக்கியமான நிலை தொழில் செய்யக்கூடிய முதலாளிகளுக்கே ஏற்படும். முதல் வைத்திருப்பதனால் முதலாளி என்றழைக்கப்படுபவர், முதலை இழந்து விட்டால் கடனாளி ஆகிவிடுகிறார்.

ஒரு சமுதாயத்தில் முதலாளி என்பவர் ரெயில் என்ஜின் போன்றவர். தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி போன்றவர். முதலாளி என்கிற என்ஜின், தொழிலாளி என்கிற பெட்டியை சமுதாயம் என்ற தண்டவாளத்தில் மக்கள் என்கிற பயணிகளை இழுத்துச் செல்கிறது.

முதலாளிகள் சம்பாதிப்பதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. அவர்கள் தங்கள் தேவைகள் போக சமுதாய நன்மைகளுக்கும் செலவிட வேண்டும் என்கிறார் வள்ளுவர். எனவே தான்
“ஈதல் இசைபட வாழ்தல் அது வல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு”
என்று பாடுகிறார்.
அதாவது நலிந்தவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும், தான தர்மம் செய்து அதன் மூலம் வரக்கூடிய புகழே உயிருக்கு ஊதியமாகும் என்கிறார்.
 

சந்திரசேகர்

 

Issues: