செலவுக்கேற்ற உற்பத்தி இல்லாத விவசாயம்.
இந்தியாவில் நகரமயமாகும் போக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பு 14.5% ஆக உள்ளது. கடந்த ஆண்டு விவசாயத் துறையின் ஏற்றுமதி பங்களிப்பு 10.5% ஆகும்.
60 வருடங்களுக்கு மேலாக 50% பேரின் வாழ்வாதாரமாக விவசாயத்துறை இருந்து வருகிறது. தொழில் வளர்ச்சியிலும் விவசாயத் துறைக்கு முக்கிய பங்குண்டு. ஏனெனில் தொழில்களுக்கு தேவையான பல மூலப்பொருட்கள் விவசாயத் துறையிடம் இருந்துதான் கிடைக்கின்றன.
விவசாயம் குறிப்பிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டால் அது நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்படையச் செய்கிறது. உதாரணமாக உணவு உற்பத்தி குறைந்தால் விலைவாசி உயர்ந்து பணவீக்கம் ஏற்பட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுவதைக் கூறலாம். விலைவாசி உயரும்போது உற்பத்தி செலவு அதிகமாவதால் ஏற்றுமதி வர்த்தகத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது.
1951&-52ல் நமது நாட்டின் தானிய உற்பத்தி 52 மில்லியன் டன்களாக இருந்தது. 2010-&11ம் ஆண்டில் 245 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. இதை மக்கள் விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டால் தற்போது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 438 கிராம் என்ற அளவில்தான் உணவு தானியம் உற்பத்தி ஆகிறது. ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன்பு இது 500 கிராம் என்ற அளவில் இருந்தது.
தற்போது தானியம் சாராத புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களான முட்டை, பால், பருப்பு இவற்றின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. எனவேதான் உணவு சார்ந்த பணவீக்கத்தை சரி செய்வது கடினமாக உள்ளது.
உணவு தானிய விளைச்சலுக்காக நாம் செலவிடும் தொகை ஆசிய பிராந்தியத்திலேயே அதிகமானதாகும். ஆனால் செலவுக்கேற்ற உற்பத்தி மிகவும் குறைவு.
70 சதவீத விவசாயிகள் பூச்சி மருந்து, உரம், மின்சாரம், நீர் உட்பட இவற்றிற்கு செய்யும் செலவுகளுக்கு மானியம் கிடைப்பது நான்கில் ஒரு பங்கு அளவே உள்ளது. இதனால்தான் பயிர் உற்பத்தி செலவிற்கும் விளைச்சலுக்கும் இடையே சமமின்மை நிலவுகிறது. எனவே இதை சீர்செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்பொழுது இருக்கும் மானியம் தரும் முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். நீர்ப்பாசன முறைகளை மேம்படுத்த வேண்டும். சில்லரை வணிகத்துக்கு தானியங்களை அனுப்புமுன் ஏற்படும் சேதாரங்களை குறைக்க வேண்டும். இதன் மூலம் லாபத்தை கூட்டலாம். பயிர் காப்பீட்டுத் திட்டம் அனைத்து விவசாயிகளையும் சென்றடைய வழிவகை காண வேண்டும். இயற்கை உரங்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.
தங்கவேல்