நினைத்ததை அடைய வேண்டுமா?

எவ்வளவு மெதுவாக செல்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறீர்கள் என்பதே முக்கியம்’ என்றார் சீன தத்துவஞானி கன்பூசியஸ். இந்தக் கருத்துக்கு உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.
 தோஹா வங்கியின் தலைவராக இருப்பவர் டாக்டர் ஆர்.சீதாராமன். உலக அளவில் தோஹா வங்கியை வளர்த்தெடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர். தமிழரான இவரது சொந்த ஊர் கும்பகோணம் ஆகும்.
 
 இவரது இளமைப்பருவம் மிகுந்த சவால்கள் நிறைந்ததாக இருந்தது. குடும்பத்தில் வறுமை நிலவியதால் பெரும் இன்னலுக்கு உள்ளானார். 10 கி.மீ நடந்தே பள்ளிக்கு சென்றார். கடுமையான      வறுமைநிலை இவரது கல்வி ஆர்வத்திற்கு தடை போட வில்லை. ஊக்கத்தோடு படித்தார்

இவரது தந்தை ஒரு சமஸ்கிருத பண்டிட். ஆனால் 60 களில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுத்ததன் காரணமாக இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் ஆசிரியர் பணி இல்லாமல் போனது. இதன் காரணமாக பம்பாய் சென்றுவிட்டார். குடும்பப்பொறுப்பு அம்மாவின் தலையில் விழுந்தது. வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றினார்.

வருமானம் போதவில்லை என்பதற்காக பள்ளிக்கூடத்திற்கு போகாதே என்று சீதாராமனை வற்புறுத்தவில்லை. மாறாக நன்றாகப் படி என்று ஊக்கப்படுத்தினார்.
சீதாராமனும் தன் பங்கிற்கு மாலைநேரத்தில் டியூசன் எடுத்து அதில் கிடைத்த காசைக்கொண்டு தனது படிப்பு செலவுக்கு பயன்படுத்திக் கொண்டார்.
அத்துடன் வீடுவீடாய் பேப்பர் போடுவது, சினிமா போஸ்டர் ஒட்டுவது, ஓட்டல்களில் சப்ளையர் வேலை செய்வது என கிடைத்த வேலைகளையும் செய்து வந்தார்.
எப்படியோ கஷ்டப்பட்டு பிகாம் படித்து முடித்தார். அதில் கோல்டு மெடலிஸ்டாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர்  சி.ஏ முடித்து தேர்வானார். ஓமன் நாட்டில் வேலை கிடைத்தது. அங்கு மிகவும் திறமையுடன் பணியாற்றினார்.

இவரது திறமையை நன்கு அறிந்திருந்த கத்தார் நாட்டைச் சேர்ந்த தோஹா வங்கி நிர்வாகம் இவரை தலைமைப் பொறுப்பு ஏற்கும்படி அழைப்பு விடுத்தது. அப்போது அவ்வங்கி மிகவும் நலிவடைந்திருந்தது.
தலைமைப் பொறுப்பை ஏற்ற சீதாராமன் தனது திறமையான நிர்வாகத்தால் தோஹா வங்கியை நலிவிலிருந்து மீட்டு உலகளவில் விரிவடையச்செய்தார். இது இவருக்கு அழியாப்புகழை ஏற்படுத்தி தந்தது.

இவரது வெற்றி நமக்கு உணர்த்துவது என்ன? வறுமை நிறைந்திருந்தும் அதைக்கண்டு மனம் தளராமல் கடுமையாக உழைத்து வாழ்வில் உயர்ந்த நிலையை எட்டினார்.  
வறுமை நிறைந்திருந்த காலகட்டத்தில் இவரது வாழ்வு மெதுவாகத்தான் நகர்ந்தது. பணம் இல்லாததால் இவரால் நினைத்ததை வாங்க முடியவில்லை. எதையும் காத்திருந்துதான் இவரால் நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது.

ஆனாலும் மனம் தளராமல் அடுத்தகட்டத்தைப் பற்றி சிந்தித்து நடை போட்டார். அதாவது நிற்காமல் நடைபோட்டார் என்பதுதான் குறிப்பிடத்தக்க அம்சம். இந்த அம்சம்தான் அவருக்கு அழியாப்புகழை தேடித்தந்தது.
வெற்றி பெற்ற சிலர் தாம், அதிர்ஷ்டத்தால்தான் வெற்றி அடைந்தோம் என நம்பிக்கொண்டிருக் கின்றனர். ஆனால் அவர்களது வெற்றியை ஆராய்ந்து பார்த்தால் உழைப்பு, விடாமுயற்சி, ஆர்வம், தன்னம்பிக்கை இவையே வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கும். இதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.
ஏழை ஒருவர் ஒரு பழங்கால நாணயத்தை தெருவில் கண்டெடுத்தார். அது ஒரு துளையிடப்பட்ட நாணயம். அது தனக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்று உறுதியோடு நம்பினார்.
எனவே தன்னுடைய சட்டைப் பையில் அந்த நாணயத்தை  பத்திரமாக வைத்துக் கொண்டார். வீட்டிற்குச் சென்றவர் அந்த நாணயத்தை கவரில் போட்டு மடித்து  பெட்டியில் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டார்.

மனைவியிடமும் இந்த விசயத்தை சொன்னார். தினமும் காலையில் பணிக்கு செல்லும்போது தனது சட்டைப் பையில், கவரில் மடித்து வைத்திருந்த நாணயத்தை வைத்துக்கொள்வார்.  ஆனால் கவரில் உள்ள நாணயத்தை வெளியே எடுத்து பார்க்க மாட்டார்.
அல்லும் பகலும் அயராது பாடுபட்டார். மிகத் திறமையாக வியாபாரம் செய்தார். அவரது திறமையைக் கண்ட அனுபவம் வாய்ந்த வியாபாரிகள் கூட அவரைப் பாராட்டினர். அவர் செய்த அனைத்து வியாபாரமும் பல மடங்கு லாபத்தை கொடுத்தது. பெரும் செல்வந்தராக உயர்ந்தார். பல பதவிகள் அவரைத் தேடி வந்தன. தனது வெற்றிக்கு அந்த அதிர்ஷ்ட நாணயமே காரணம் என நம்பினார்.  

ஒரு நாள், கவரைப்பிரித்து  அந்த நாணயத்தை முழுமையாக  பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு எழுந்தது. கவரைப் பிரித்து நாணயத்தை வெளியே எடுத்தார். எடுத்துப் பார்த்தவர் குழப்பத்தில் ஆழ்ந்து போனார்.
அந்த நாணயத்தில் ஓட்டை இல்லாததே அவரது குழப்பத்திற்கு காரணம். மனைவியிடம் கேட்டார். மனைவி சொன்ன விசயத்தைக் கேட்டு அவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒரு சேர உண்டானது. அப்படி அவரது மனைவி என்ன சொன்னார்?
அந்த ஓட்டைக்காசு கிடைத்த மறுநாள், அவரது சட்டை தூசியாக இருக்கிறது என்று அவரது மனைவி அந்த சட்டையை வெளியே உதறி இருக்கிறாள். அப்போது அந்த நாணயம் வெளியே விழுந்திருக்கிறது.

எவ்வளவு தேடிப்பார்த்தும் அந்த ஓட்டைக்காசு அவளது கையில் சிக்க வில்லை. இந்த விசயத்தை சொன்னால் கணவர் வருத்தப்படுவார் என்பதற்காக, வேறு ஒரு ஓட்டை இல்லாத  நாணயத்தை அதே போன்று கவரில் போட்டு சட்டைப் பையில் போட்டு வைத்திருக்கிறாள்.
அந்த ஓட்டை இல்லாத  நாணயத்தைதான் இத்தனைநாளும் அவர் அதிர்ஷ்ட ஓட்டை நாணயம் என்று எண்ணி அயராது பாடுபட்டிருக்கிறார்.
இந்த சம்பவவம் உணர்த்தும் செய்தி என்ன? அந்த மனிதரின் வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டமா? நிச்சயம் அதிர்ஷ்டம் இல்லை. அதிர்ஷ்டமே தனது வெற்றிக்கு காரணம் என அவர் நினைத்திருக்கலாம். அது அவரது நம்பிக்கை.

இந்த எண்ணம் தவறென்று சொல்ல முடியாது. உண்மையில் அவரது வெற்றிக்கு உழைப்பு, விடாமுயற்சி, ஆர்வம், தன்னம்பிக்கை இவையே முக்கிய காரணம்.
 அந்த ஏழை மனிதருக்கு அமைந்ததைப் போலவே எல்லோருக்கும் சூழ்நிலைகள் அமைந்து விடாது.
அதிர்ஷ்டத்திற்காக காத்துக்கொண்டிருந்தால் காலம்தான் விரயமாகும். எனவே இலக்கை நிர்ணயித்துக்கொண்டு தீவிரமாக செயல்பட வேண்டும்.
எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். அதைப்போல மனதில் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.
உங்களுடைய தற்போதைய வாழ்க்கை, நீங்கள் மனதில் விதைத்த எண்ணங்களால்  ஏற்பட்ட விளைவு தான்.
பாசிட்டிவ் எண்ணங்களை விதைத்திருந்தால் விளைவு.. வெற்றிகர வாழ்க்கையாக இருந்திருக்கும். நெகட்டிவ் எண்ணங்களை விதைத்திருந்தால் விளைவு தோல்விகர வாழ்க்கையாக இருந்திருக்கும்.

எனவே நீங்கள் நினைத்ததை அடைய வேண்டுமெனில் உங்கள் உள்ளத்திலிருந்து எழக்கூடிய எண்ணம் பாசிட்டிவானதாக இருக்க வேண்டும். தோல்வியைக் கூட பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு அதை வெற்றியாக்கியவர்களும் உண்டு.
பண்டிட் மதன் மோகன் மாளவியா காசி இந்து பல்கலைக்கழகம் துவங்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்த நேரமது.
நன்கொடை வேண்டி பல அரசர்கள், செல்வந்தர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரை  சலிக்காமல் சென்று சந்தித்து அவர் நன்கொடை கேட்டார். கேட்டவுடன் எல்லோரும் அள்ளிக்கொடுத்து விடவில்லை. தர்ம உள்ளம் படைத்த சிலர் மட்டுமே நன்கொடை வழங்கினர்.
ஒருமுறை  அவர் ஹைதராபாத் நிஜாமிடம் சென்றார். அவர் நன்கொடை தர மனமில்லாமல் கோபத்துடன் மாளவியாவை திட்டி, தன் காலில் இருந்த செருப்பைக் கழற்றி அவர்  மீது வீசினார். வேறு ஒருவராக இருந்தால் கோபம் கொண்டிருப்பார்.

ஆனால் மாளவியா கோபம் கொள்ளவில்லை. புன்னகையுடன் மன்னரிடமிருந்து விடைபெற்று, அந்த ஒற்றைச் செருப்பை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.  
மதன் மோகன் மாளவியா தெருவில் சென்று மகாராஜாவின் செருப்பு இது என்று சொல்லி ஏலம் விட்டுக்கொண்டிருந்தார். நிஜாமுக்கு இந்த தகவல் கொண்டு செல்லப்பட்டது. செருப்பு குறைவான தொகைக்கு ஏலம் போனால் அது தனக்கு இழுக்கு என்று கூறி அந்த செருப்பை அதிகமான தொகைக்கு ஏலம் எடுக்குமாறு சிப்பாய்களிடம் சொன்னார். மாளவியாவுக்கு மிக அதிகமான தொகை கையில் கிடைத்தது.

அந்த ஏலத்தொகையை ஹைதராபாத் நிஜாமின் நன்கொடையாக காசி இந்து பல்கலைக்கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.
தனக்கு கிடைத்த தோல்வியைகூட பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு எப்படி புத்திசாலித்தனமாக வெற்றியாக மாளவியா மாற்றினார் பார்த்தீர்களா! வாழ்வில் வெற்றிபெற நினைப்பவர்கள் இத்தகைய மன பக்குவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
                    தொடரும்..........

 

Issues: