பசுமைப் பொருளாதாரம்

பொருளாதார திட்டங்கள் நமது சுற்றுச்சூழலை பேணிக் காப்பதாகவும், பூமியின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதகவும் இருக்கவேண்டும். இவற்றின் அடிப்படையில் அமையும் பொருளாதாரம் தான் ‘பசுமைப் பொருளாதாரம்’.

இது ஏதோ நான்கு சுவர்களுக்குள் சிலர் உருவாக்கும் திட்டங்கள் அல்ல.. இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உளப்பூர்வமாக இணைந்து செயலாற்ற வேண்டிய திட்டங்கள்.எந்தெந்தத் துறைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று யுனைடெட் நேஷன்ஸ் 10 துறைகளைக் குறிப்பிடுகிறது:

                                                              கட்டுமான துறை

கட்டுமானப் பணிகளால் உலகின் வளங்களும் பருவ நிலைகளும் மிகவும் பாதிக்கப் படுகின்றன. காட்டு மரங்களை வெட்டுவதற்கு பதிலாக அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தண்ணீர் மற்றும் மின்சாரத்தை திறமையான முறையில் பயன்படுத்தி உறுதியான கட்டிடங்களை கட்டுவது நம் கையில் இருக்கிறது.
                                                              மீன்வளத்துறை
 

கடல் உணவு ருசிகரமானது, ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அளவுக்கு மீறி மீன் பிடிப்பது எதிர்காலத்தில் மீன்களே இல்லாத நிலைமையை உண்டாக்கும். நமது நாக்கின் சுவைக்காக அரிதான மீன் வகைகளை வேட்டையாடாமல் இருப்பது, மீன்கள் குறைவாகக் கிடைக்கும் இடங்களில் மீன் பிடிக்காமல் தவிர்ப்பது போன்ற முறைகளை கடைப்பிடிக்கலாம்.
                                                             வனத்துறை

காட்டை அழிப்பது பெரும் குற்றம். விலங்கினங்கள் மட்டுமன்றி பல்லாயிரக்கணக்கான தாவர இனங்கள், அவற்றை நம்பி வாழும் மனிதர்களும் பாதிக்கப் படுகிறார்கள் இந்தக் காட்டு அழிப்பால். காட்டு விலங்குகளை அவற்றின் தோலுக்காகவும், இறைச்சிக்காகவும் வேட்டை ஆடுவதும் தவறு. இந்த பூமி நமக்கு மட்டுமல்ல, விலங்கினங்கள், தாவர இனங்களுக்கும் சொந்தமானது.
காகிதத்திற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப் படுகின்றன என்பது வேதனைக்குரிய விஷயம். காகிதத்திற்கு பதில் மின்னணு கோப்புகளைப் பயன்படுத்தலாம்.
 

                                                                          போக்குவரத்துத் துறை

 நீங்கள் மட்டும் உங்கள் கப்பல் போன்ற காரில் செல்லுவது சுற்றுச்சூழலுக்கும், உங்களது பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல, நீங்கள் தனித்தும் விடப்படுகிறீர்கள். மற்றவர்களுடன் காரில் செல்லும்போது எரிபொருள் மிச்சம் ஆகிறது.  உங்கள் நண்பர் குழாம் விரிவடைகிறது. சுற்றுச்சூழல் வாழ உங்கள் பங்கை ஆற்றிய மனத் திருப்தியும் கிடைக்கும். அருகில் இருக்கும் இடங்களுக்கு காலாற நடந்து போகலாம். அல்லது சைக்கிளில் செல்லலாம்.  இது உடலுக்கும், உள்ளத்துக்கும் பயிற்சியாகவும் அமையும்.
                                                                 நீர் வளத்துறை

உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுத்தம் செய்யப்பட்ட குடி நீர், மேம்படுத்தப் பட்ட சுகாதார வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். மக்கள் தொகை அதிகமாக அதிகமாக, இந்தப் பிரச்சினை வளர்ந்து கொண்டுதான் போகும். குழாயை வெகு வேகமாகத் திறக்காமல் நிதானமான அளவில் திறந்து நீரை பயன்படுத்திய உடன்  மூடவும். போதுமான அளவு துணிகள், பாத்திரங்கள் சேர்ந்த பின் அவற்றிற்கான இயந்திரங்களைப் பயன்படுத்தவும். இருக்கும் வளங்களை திறமையாகக் கையாளுவது நம் கையில் இருக்கிறது.
விவசாயத் துறை
உங்களுக்கு தேவையான காய்கறிகளை நீங்களே வளர்ப்பது புத்திசாலிதனம். இல்லாத போது, அந்தந்தப் பகுதியில் விளையும், அந்தந்த பருவத்தில் கிடைக்கும் காய்கறிகளை சாப்பிடுவது ஒருபடி மேலான புத்திசாலித்தனம்.
                                                                 எரிசக்தித் துறை

நாம் தற்சமயம் பயன்படுத்தும் எண்ணெய், நிலக்கரி, எரிவாயு ஆகியவை நிலைத்து நிற்கக்கூடியவை அல்ல. புதுப்பிக்கக் கூடிய எரிசக்திகளை உருவாக்க உங்கள் ஆதரவைக் கொடுங்கள். அதில் முதலீடு செய்யவும் முன் வாருங்கள். தேவை இல்லாத போது மின்விளக்குகளை அணைக்கவும். வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்தாத சமயம் மின் துண்டிப்பு செய்து வையுங்கள்.
                                                                  சுற்றுலாத்துறை

ஒரு குழுவாக பிரயாணம் செய்வது நல்லது. நீரையும், எரிபொருளையும் சிக்கனமாக உபயோகியுங்கள். நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் நீங்கள் சாப்பிட்ட மிச்ச மீதிகளையும், பிளாஸ்டிக் பைகளையும் போட்டுவிட்டு வர வேண்டாம்.
                                                                      கழிவுப் பொருட்கள்  

எந்தப் பொருளையும் தூக்கி எறிவதற்கு முன், அதை திரும்பவும் பயன்படுத்த முடியுமா என்று யோசிக்கலாம். வீட்டுக் கழிவுகளை,  மக்கும் பொருட்களை உரமாக மாற்ற தனியாகவும், மறுசுழற்சிக்கு ஏற்றவற்றை ஒருபுறமும  இனம் பிரித்து வைப்பது சாலச்சிறந்தது.

                                                    உற்பத்தி துறை மற்றும் தொழிற்சாலை

சுற்றுச்சூழலை மாசு படுத்தும் இவை தான் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. தொழிற்சாலைக் கழிவுகளை சுத்தம் செய்து வெளியேற்றுவது சுற்றுச் சூழலை மேம்படுத்த உதவும். தொழிற்சாலைகள் புதுப்பிக்கக் கூடிய எரிபொருள்களை பயன்படுத்தியும், அவைகளை தயாரிப்பதில் முதலீடு செய்வதும் சுற்றுச்சூழலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஸ்காட்லாந்து நாட்டின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு கருத்தின்படி, டைனோசர்களின் அழிவுக்கு காரணம், அவைகளின் பழக்க வழக்கங்கள் தான். அவைகள் அளவுக்கு மீறி பச்சை தாவரங்களை தின்று தீர்த்ததால், மீத்தேன் அளவு அதிகரித்து அதன் விளைவாக பூமியின் வெப்பம் அதிகரித்து அவை அழிந்தே போயின. எனவே பூமியின் வளங்களுக்கு நாம் மிகச்சிறந்த பாதுகாவலர்களாக இருப்போம்.

சகா

Issues: