பழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா?
பல நேரங்களில் நமக்கு மாறுபட்ட சிந்தனை தோன்றுவது உண்டு. அத்தகைய சிந்தனையை தொழிலாக மாற்றி வெற்றி பெறுபவர்கள் சிலரே.
சிலரால் முடிகிறபோது பலரால் முடிவதில்லையே ஏன்? அதற்கு காரணம் கணிப்பில் ஏற்படுகிற தவறும் செயல்பாட்டில் ஏற்படுகிற தொய்வும்தான்.
நமக்கு தோன்றும் ஐடியாக்களை தொழிலாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்குவதற்கு தடையாக இருப்பது தயக்கம்தான். தயங்குவது நல்லதுதான். எல்லா நேரங்களிலும் தயங்குவது தொழிலில் பெறுவதற்கு உதவாது.
நமக்கு ஐடியா கிடைக்கவில்லை என்றாலும், பிறரது ஐடியாக்களை கொண்டுகூட தொழிலை தொடங்கி வெற்றி பெற முடியும்.
1990-ம் ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் தொடங்குவது அதிகமாக இருந்தது. இது தொழில் தொடங்கியவர்களின் முழுமையான ஐடியா கிடையாது.
யாரோ சிந்தித்த ஐடியாக்களை இவர்கள் தொழிலாக மாற்றி வெற்றி பெற்றனர். எனினும், இந்த வெற்றி தொடர்ந்து நீடித்து இருக்க வேண்டும் என்றால் காலத்திற்கு ஏற்ப தகவமைத்து கொள்ள வேண்டும்.
பழைய கருத்துக்களின் அடிப்படையில் தொழில் ஆரம்பித்தால் அது நீடிக்குமா என்று சொல்ல முடியாது. நடைமுறையில் பலருக்கு இது தோல்வியையே தந்துள்ளது.
எனவேதான் காலத்திற்கு ஏற்ப தகவமைத்து கொள்ள வேண்டும் என்று வெற்றியாளர்கள் கூறுகிறார்கள்.
தொழிலுக்கு வளமான வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே அந்த தொழிலில் இறங்க வேண்டும். அப்போதுதான் சந்தையில் நிலைத்திருக்க முடியும்.
தேர்ந்தெடுக்கும் தொழில் வாடிக்கையாளரை எந்த அளவு திருப்திபடுத்தும் என்பது முக்கியமானது.
வாடிக்கையாளர்கள் விரும்பும் சேவையை உங்களது தொழில் மூலம் அளிப்பதாக இருக்க வேண்டும். கல்வி, பொழுதுபோக்கு, உணவு, ரியல் எஸ்டேட் சார்ந்த தொழில்கள் எல்லா காலகட்டத்திலும் ஏற்புடைய தொழில்களாகும். இத்தொழில்களில் ஈடுபட்டிருப்போர்களில் நவீன காலத்திற்கு ஏற்ப செயல்படுபவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள்.
வாடிக்கையாளர்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் தயாரிப்பாக இருந்தால் சந்தையை எளிதாக கைப்பற்ற முடியும். இதற்கு அத்தயாரிப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும்.
எத்தனையோ மசாலா கம்பெனிகள் தமிழகத்தில் உலா வந்தன. ஆனால், ஆச்சி மசா லாவும், சக்தி மசாலாவும்தான் வாடிக் கையாளர்களை அதிக அளவில் கவர்ந்தன.
அதற்கு காரணம் அந்நிறுவனங்கள் செய்த வித்தியாசமான விளம்பரங்கள்தான். பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், கண்காட்சிகளிலும் அந்நிறுவனங்களின் விளம்பரங்கள் தொடர்ந்து வெளி வந்தன.
மேலும், விளம்பரங்களில் சொல்லப்பட்ட செய்திகளுக்கு ஏற்ப அந்நிறுவனங்களின் தயாரிப்பும் சரியானதாக இருந்தது. அதாவது தரமானதாக இருந்தது. தரம் இல்லாவிட்டால் விளம்பரங்கள் கூட பயனளிக்காது என்பதை அந்த நிறுவனங்கள் நன்கு உணர்ந்திருந்தன. அதனால்தான் தரத்தில் துளியும் சமரசம் செய்யாமல் சந்தையை தமது வசப்படுத்தின. இதுதான் அந்நிறுவனங்களின் வெற்றியில் புதைந்திருக்கிற சூட்சமம்.
தொழில்முனைவோர்களுக்கு அவ்வப்போது ஐடியாக்கள் தோன்றும். எனினும் அவற்றை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் தெரியாமல் தத்தளிப்பர்.
சந்தை விலை நிலவரம், அதை தயாரிப்பதற்கான செலவு உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொள்ளாமல் விலை நிர்ணயிப்பர். வாடிக்கையாளரின் வாங்கும் சக்தியை கருத்தில் கொள்ளாமல் அதிக விலை நிர்ணயத்தால் மக்களிடம் அத்தயாரிப்பு எடுபடாமல்போகும்.
எனவே மக்களின் வாங்கும் சக்தியை நன்கு கணித்த பிறகே பொருள்களை சந்தைப்படுத்த வேண்டும்.
நீண்ட கால அடிப்படையில் சந்தைப்படுத்தல் நடவடிக்கையை எடுப்பது சிறந்தது. ஏற்கெனவே உள்ள போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் தயாரிப்புகள் இருந்தால்தான் புதிய தயாரிப்பு வெற்றி பெற முடியும்.
உதாரணமாக கோல்கெட் பற்பசையைவிட புதிய நிறுவனம் அறிமுகப்படுத்தும் பற்பசை மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்றால் கோல்கெட்டை விட தரமானதாகவும், அதே சமயத்தில் சற்று விலை குறைவாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் புதிய பற்பசை சந்தையில் வாடிக்கையாளர்களை அதிகம் பெற முடியும். இல்லையெனில் கோல்கெட்தான் சந்தையில் நீடித்திருக்க முடியும். இது பிசினசின் அடிபடையில் ஒன்று.
தொடங்கப் போகும் தொழிலில் வித்தியாசம், நவீனம் போன்றவை இருக்கலாம். எனினும் அத்தொழில் குறித்த முழுமையான கணிப்பை செய்த பிறகே தொழிலில் இறங்க வேண்டும்.