தென்னை விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் தென்னை மர காப்பீட்டு திட்டம்
தென்னை மர காப்பீட்டு திட்டம், தென்னை விவசாயிகளின் பாது காவலனாக திகழ்ந்து கொண்டி ருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நில அதிர்வு, ஆழிப்பேரலை, இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ தென்னை மரக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இழப்பீடு பெறமுடியும்.
தகுதிகள் என்ன?
தென்னை மர காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கு சில வரைமுறைகள் உள்ளன. அவை:
தென்னை சாகுபடி விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ குறைந்தபட்சம் பலன் தரக்கூடிய 10 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும். ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்களை இத்திட்டத்தில் சேர்க்கலாம்.
குட்டை மற்றும் ஒட்டுரகங்கள் 4-ம் ஆண்டிலிருந்து திட்டத்தில் சேருவதற்கு தகுதி படைத்தவை. நெட்டை ரகங்கள் 7-ம் ஆண்டிலிருந்து திட்டத்தில் சேருவதற்கு தகுதி படைத்தவை. ஒரு ஹெக்டருக்கு சுமார் 175 மரங்களை மட்டுமே காப்பீடு செய்ய முடியும்.
காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பிரிமியத் தொகையைச் செலுத்தலாம். பிரிமியத் தொகையுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய விண்ணப்ப படிவத்தை விவசாயிகள் வேளாண் துறை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாண்டில் எந்த தேதியில் பிரிமியம் செலுத்தப்படுகிறதோ அதற்கு அடுத்த அதே தேதிவரை ஒரு வருடத்திற்கு பாலிசி வழங்கப்படும். பாலிசி தொடங்கி ஒரு மாத காலத்திற்குள் ஏற்படும் இழப்பிற்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படமாட்டாது.
பிரிமியத் தொகையில் 50% மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியமும் 25% மாநில அரசும் மானியமாக வழங்குகின்றன. மீதி 25% விவசாயிகள் செலுத்தினால் போதும்.
பாலிசி காலத்தில் மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ இத்திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படும்.
பாரதி வஜ்ரவேலு