மாற்றம் காண மனோபாவத்தை மாற்று...

மனிதன் தனது மாபெரும் அறிவாற்றலைக் கொண்டு எவ்வளவோ நவீனங்களை உருவாக்கி விட்டான். இன்னும் சில வருடங்களில் செவ்வாய் கிரகத்துக்கு சுற்றுலாப் பயணம் செய்யும் அளவுக்கு மனிதன் முன்னேறி விட்டான். வளர்ச்சி .... வளர்ச்சி.... என்று மனிதன் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறான். ஆனால் மகிழ்ச்சியைத்தான் தொலைத்து விட்டான். திருப்தி கொள்ளும் மனப்பான்மையை பெரும்பாலும் இழந்து விட்டான் என்றே சொல்லலாம்.

 

உலகில் எவ்வளவோ வன்முறைகள் நடக்கின்றன. நாடுகள் தேவையில்லாமல் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. தீவிரவாதம் வளர்ந்து கொண்டே செல்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடக்கிறது. எவ்வளவோ மனிதன் முன்னேறியும் இன்னமும் ஏன் இந்த நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன? இவை எல்லாம் குரூர எண்ணத்தின் வெளிப்பாடுகள். மகிழ்ச்சியின்மையின் வெளிப்பாடுகள்.

மேற்சொன்ன விஷயங்களை  நாம் மாற்ற முடியாது. ஆனால் நம்மை நாம் சரிசெய்து கொண்டால் உலகத்துக்கு நல்ல விஷயங்களைக் கொடுக்கலாம். எல்லோரும் சரியாக இருந்து விட்டால் எல்லாமே சரியாக நடக்கும். அதற்கு மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். வில்லியம் ஜேம்ஸ் என்கிற அறிஞர் சொல்கிறார்:
“மனோபாவத்தை மாற்றிக் கொள்வதால் தங்களுடைய வாழ்க்கையை மனித இனம் மாற்றிக் கொள்ள முடியும் என்பது தான் எனது தலைமுறையின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாகும்.”
நமக்கு என்ன தேவையோ அது குறித்த எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவை குறித்த தெளிவான விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.  எதை குறித்து அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகிவிடுகிறீர்கள். அதனால்தான் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிவிடுகிறாய், என்று சுவாமி விவேகானந்தர் கூறினார்.

இன்றைய உங்களது வாழ்க்கை என்பது கடந்த கால எண்ணங்களின் பிரதிபலிப்பே. அதில் நல்லவையும் அடங்கும். கெட்டவையும் அடங்கும்.
உங்களது மனக் கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும் என்கிறார் பாப் பிராக்டர்.
பலரும் கடந்த கால ஏமாற்றம், எதிர்கால பயம் இவை குறித்து அதிகம் எண்ணுகின்றனர். நிகழ்காலத்துடன் ஒன்றி இருப்பவர்கள் சிலர்தான்.

இந்தச் சிலர்தான் சமூகத்தில் வெற்றியடைந்த மனிதர்களாக உலா வருகிறார்கள். இவர்கள் எழுத்தாளர்களாக இருக்கலாம். வர்த்தகர்களாக இருக்கலாம். அரசியல்வாதிகளாக இருக்கலாம்.  இவர்கள் தான் ஜிஸிணிழிஞி ஷிணிஜிஜிணிஸிஷி  களாக திகழ்கிறார்கள். இவர்களால்தான் சமுதாயத்தின் போக்கே நிர்ணயிக்கப்படுகிறது. சூரியனைச் சுற்றி கிரகங்கள் சுழல்வது போல் இவர்களைச் சுற்றியபடிதான் சமூகச் சக்கரம் சுழலும்.

மனோசக்தியை முறையாகப் பயன்படுத்துவ தால்தான் இவர்களால் வெற்றிப் பாதையிலேயே பயணிக்க முடிகிறது. மனம் என்பது அபாரமான சக்திகள் படைத்தது.
நீ எதை அளிக்கிறாயோ அதை மனம் பதிவு செய்து கொள்ளும். அந்த மனம் எதை விரும்புகிறதோ அதைத்தான் நீ செய்ய முடியும். இந்த இரண்டும் ஒன்றாக இணையும் போதுதான் பிரமிக்கத்தக்க மாறுதல்கள் நிகழும்.

மகாபாரதத்தில் துரோணர், மரத்தின் மீது பறவை பொம்மை ஒன்றை வைத்தார். சீடர்களை அழைத்து பறவையின் கண் மீது அம்பெறியும்படி கூறுகிறார். முதலில் துரியோதனை அழைக்கிறார். குறி வைக்கும் படி கட்டளையிடுகிறார். என்னதெரிகிறது? என்று கேட்டார்.
“ஆகாயம் தெரிகிறது, மரம் தெரிகிறது, கிளைகள், இலைகள் இவை தெரிகிறது”  என்கிறான்.
அடுத்து தருமன், பீமன், துச்சாதனன், கர்ணன் என வரிசையாக வந்தனர். ஒவ்வொருவரும் இதே போல் கேள்வி கேட்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
கடைசியாக அர்ஜீனன் அழைக்கப்பட்டான். ‘அர்ஜீனா! ஆகாயம் தெரிகிறதா”? என்று கேட்கிறார் துரோணர்.
“இல்லை” என்றான் அர்ஜீனன்
 மரம் தெரிகிறதா?
 இல்லை
“கிளைகள் தெரிகிறதா”?
“இல்லை”
“வேறு என்ன தெரிகிறது?”
“அம்பின் நுனி, பறவையின் கண்” என்கிறான் அர்ஜீனன். அவன் தொடுத்த கணை சரியாக பறவையின் கண்ணைத் துளைத்தது.
இதன் மூலம் ஒரு முகப்பட்ட சிந்தனையே வெற்றியைத் தரும் என்ற உண்மையை உணர்கிறோம். நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பது இங்கே முக்கியம் அல்ல.
நீங்கள் விரும்பியது எதுவாயினும் அதை அடையத் தேவையான ஒரு முகப்பட்ட சிந்தனை உங்களுக்கு இருக்க வேண்டியது தான் மிகவும் முக்கியம்.
மிகப்பெரிய தோல்வி களிலிருந்து மீண்டு வந்தவர்கள் பலர் உண்டு. ஒரே ஒரு தோல்வியிலேயே துவண்டு போய் காணாமல் போனவர்களும் உண்டு. இரண்டிற்கும் அடிப்படைக்காரணம் அவர்களது மனம் தான்.

எந்த மனம் தோல்வியால் துவளாதோ அது மீண்டும் வெற்றி பெற்று எழும். எந்த மனம் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையோ அந்த மனம் தளர்ந்து போய் மீண்டும் மீண்டும் தோல்வியைச் சந்திக்கும். எனவே தோல்விகளால் துவண்டு போய் விடதீர்கள்.
 
சக்திவேல்

Issues: