உற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை

காவிரி டெல்டா மாவட்டங் களான தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட விவசாயிகள் பெரும்பாலும் நெல் (சம்பா & குறுவை) கரும்பு போன்ற அதிக தண்ணீர் தேவைப்பாடு மிகுந்த பயிர்களை சார்ந்தே வாழ்கின்றனர். இத்தகைய பயிர்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குவது காவிரி ஆறுதான்.
 

சமீப காலமாக காவிரி ஆற்றில் நீர் வரத்து மிகவும் குறைந்துபோயுள்ளது.  கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை தராமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். இதன் காரணமாக சம்பா மற்றும் குறுவை சாகுபடி மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் இவர்களால்   குறித்த நேரத்திற்கு பயிர்களை அறுவடை செய்யமுடியவில்லை. மேலும் முதலீடு செய்த தொகையை இழக்க நேரிடுகிறது. வாங்கிய பயிர்கடனை திரும்ப செலுத்த முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த அவல நிலை மாற வேண்டுமானால் காவிரி டெல்டா விவசாயிகள் மாற்று வழி விவசாயத்திற்கு மாற வேண்டுமென விவசாய நிபுணர்கள் கூறுகின்றனர். அது என்ன?

அதாவது, உயர் தொழில் நுட்ப விவசாய முறையை கையாண்டு, நெல்லை மட்டும் பயிரிடாமல் மற்ற விவசாய பயிர்களையும் பயிரிட வேண்டும். நெற்பயிர் கைகொடுக்காத போது மற்ற விவசாய பயிர்கள் அவர்களுக்கு கைகொடுக்கும். இந்த முறையில் நெல், கரும்பு போன்ற நன்செய் பயிர்களை தவிர அதிக இலாபம் தரக்கூடிய காய்கறி வகைகளை குறைந்த இடத்தில் விவசாயம் செய்யலாம்.
இத்தகைய விவசாய முறையில் தண்ணீர் தேவை மிகவும் குறைவு. மின்சார தேவையும் குறைவு. சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்துவதன் மூலம் தினமும் ஒரு மணி நேரம் மின்சாரம் இருந்தாலே சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும்.

உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறைகள்

இதனை “பசுமை குடில் வேளாண்மை” என்றும் கூறலாம். இதன் மூலம் விவசாயம் செய்யும் பொழுது அதிக மகசூலும் அதிக லாபமும் அடையலாம். உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறையில் பசுமைக் குடில்கள், நிழல் குடில்கள் அமைத்து விவசாயம் செய்யலாம்.
பசுமைக் குடில் விவசாயத்தில் குடைமிளகாய், தக்காளி, பேபி கார்ன் போன்ற காய்கறி வகைகளும், ரோஸ், ஜெரிபரா, கார்னேசன் போன்ற மலர் வகைகளையும் பயிர் செய்யலாம்.
பசுமைக் குடில்கள் அனைத்து தட்ப வெப்ப நிலைகளுக்கும் ஏற்றது. மேலும் இவ்வகை விவசாயத்தில் நோய் தாக்கம் மிகவும் குறைவு. அதேபோல உரம், பூச்சிக் கொல்லி மருந்து, தண்ணீர், ஆட்கள் இவற்றின் தேவையும்  பாரம்பரிய விவசாயத்தைக் காட்டிலும் குறைவு.

பாரம்பரிய விவசாயமுறையை ஒப்பிடும்பொழுது 5 முதல் 10 மடங்கு விளைச்சல் அதிகம். மேலும் இது அதிகம் பாதுகாப்பானது. அதிகம் மகசூல் தருவது. அதே சமயத்தில் உற்பத்தியான பொருள் மிகவும் நேர்த்தியாகவும் இருக்கும். இக்குடில் 15 லிருந்து 20 வருடங்கள் வரை நீடித்து உழைக்கும் திறன் பெற்றது. இந்த விவசாய முறைக்கு மத்திய அரசு தேசிய தோட்டக்கலை வாரியத்தின் வாயிலாக 25% மானியம் வழங்குகிறது.
பசுமைக் குடில்களைப் போலவே நிழல் குடில்களும் எல்லா தட்ப வெப்பநிலைகளுக்கும் ஏற்றது. பாரம்பரிய விவசாயமுறையை ஒப்பிடும் பொழுது 4 முதல் 8 மடங்கு விளைச்சல் அதிகம். அமைக்கும் செலவும், வேலையாட்கள் தேவையும் குறைவு. இக்குடில்கள் 4 முதல் 6 வருடங்கள் வரை நீடித்து உழைக்கும்.
இக்குடில் குடைமிளகாய், தக்காளி, பேபி கார்ன், வெள்ளரிக்காய், பீன்ஸ், வெண்டை போன்ற காய்கறி வகைகளுக்கு ஏற்றது. தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மூலம் ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.

இந்த விவசாய முறையை இஸ்ரேல் நாடு பின்பற்றி அதிக விளைச்சலை பெற்று வருகிறது. மேலும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து நல்ல லாபம் அடைந்து வருகிறது. இதே போல் தமிழ்நாட்டு விவசாயிகளும் அவர்களைப் பின்பற்றி விவசாயம் செய்யலாம்.

உணவு பதனிடுதல்

நம் விவசாயிகள் இன்று தாங்கள் உற்பத்தி செய்த வேளாண்பொருட்களை விலை இறக்கத்தின் பொழுது வீணடிக்கின்றனர் (34%). அச்சமயத்தில் விளை பொருட்களை சேமித்து வைக்கலாம். பின்னர் விலை ஏற்றத்தின் போது சேமிப்புக்கிடங்கிலுள்ள வேளாண் பொருட்களை எடுத்து விற்பனை செய்யலாம். இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்திசெய்த பொருட்களை அதிக லாபத்திற்கு விற்க முடியும்.
 

குளிர்பதன கிடங்கு
தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாம் நிலையில் இந்தியா உள்ளது. இந்தியாவில் பழங்கள், காய்கறிகள், மலர்கள், தேங்காய், முந்திரி, காளான், தேன், மசாலா உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி பெருமளவில் உள்ளது. ஆனால் அறுவடைக்கு பிறகு போதுமான சேமிப்பு வசதி இல்லாததால் உற்பத்தியில் பெரும்பகுதி சேதமடைகிறது.
அறுவடைக்கு பிறகு 35 சதவீதம் சேதமடைகின்றன. இதனால் வருடத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் உண்டாகிறது என்று முந்தைய காங்கிரஸ் அரசின் அமைச்சரவை குழு கூட்டத்திலேயே சொல்லப் பட்டிருக்கிறது.  

இதற்காக தேசிய அளவில் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பின்னர் இதற்காக மத்திய அரசு மானியம் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
பதப்படுத்தும் குளிர்பதனக்கிடங்கு அமைத்தால் அதிக விளைச்சல் உள்ள போது சேமித்துவைத்து நல்ல விலை வரும்போது விற்றுக் கொள்ளலாம்.
இக்குளிர்பதன சேமிப்புமையமானது உருளைக் கிழங்கு, இஞ்சி, பூண்டு,  வெங்காயம், பச்சைக் காய்கறிகள், வாழைப் பழம், வரையறுக் கப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட தோட்ட உற்பத்தி பொருள்களின் சேமிப்பிற்காக நிறுவப்படுகிறது.

வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தோட்டக்கலை வாரியத்தால் வழங்கப்படும் நிதியுதவித் தொகை மூலமாக இத்திட்டம்   செயல்படுத்தப்படுகிறது. குளிர்பதன கிடங்கு அமைக்க தேசிய தோட்டக்கலை வாரியம் மானியம் வழங்குகிறது.

உணவு பதனிடுதல்
பழங்கள், காய்கறிகள் அழுகி வீணாவதைத் தடுக்க உணவுப் பொருட்களை பதப்படுத்தும் தொழில் துவங்குவதற்கு தொழில் முனைவோர் அதிகம் பேர் முன் வர வேண்டும். விவசாய உற்பத்தி மூலம் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் முறையான வகையில் சந்தைப்படுத் தப்படாததால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஆகையால் விவசாயிகள் விவசாயத்தொழிலில் ஏமாற்றம் அடைகிறார்கள்.

இந்த அவல நிலை மாறவும் உணவுப்பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கவும், உற்பத்தி செய்த பொருட்களை வீணாகாமல் தடுக்கவும் நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். நமது நாட்டின் உற்பத்தி பொருட்கள் அதிக அளவில் அயல் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து அன்னிய செலவனியை ஈட்டுவதன் மூலம் நமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும் முடியும்.
எனவே உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய பசுமைக்குடில் வேளாண் முறையை கையாள்வதன் மூலம் குறைந்த நிலபரப்பு, நீர் மற்றும் வேலையாட்களை கொண்டு சுமார் 10 ஏக்கரில் உற்பத்தி செய்யும் காய்கறி, பழ வகையை 1 ஏக்கரில் உற்பத்தி செய்ய முடியும்.

விவசாயிகள் உற்பத்தி செய்த உணவுப் பொருட்களுக்கு அறுவடையின் போது ஏற்ற விலை கிடைக்காவிடில் அதனை வியாபாரிகளுக்கு விற்காமல் குளிர்பதன கிடங்கு மற்றும் உணவுக்கிடங்குகளில் பதப்படுத்தி வைத்து ஏற்ற விலை கிடைக்கும் பொழுது அதனை சந்தைப்படுத்த வேண்டும். அப்பொழுது அதிக லாபம் அடைய முடியும்.
விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை அப்படியே சந்தைப்படுத்தாமல் அதனை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதன் மூலமாக அதிக லாபம் காண முடியும்.
உதாரணமாக  தக்காளி போன்ற காய்கறிகள் அறுவடையின் போது விலை மிகவும் குறைந்து விடுகிறது. அத்தருணத்தில் விவசாயிகள் பதற்றமடையாமல் தக்காளிகளை சாஸாகவும், தக்காளி பவுடராகவும் மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதன் மூலம் அதிக லாபம் அடைய முடியும்.

புஷ்பகுமார்

 

Issues: