நாற்று முறை கரும்பு சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்கு 200 டன் கரும்பு!

நாற்று மூலம் கரும்பு சாகுபடி செய்தால் இடுபொருட்களுக்கான செலவையும், பராமரிப்புக்கான செலவையும் குறைக்க முடியும். இதற்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. இதன் விளைச்சல் இரு மடங்காக அதிகரிக்கும் என விவசாய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கரும்பு சாகுபடிக்கு கரணை முறையே பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் ஒரு ஏக்கருக்கு 4 டன் விதைக் கரும்பு தேவைப்படுகிறது. இதற்கான வெட்டு கூலி, சுமை வாடகை, நடவு கூலி இவற்றால் ஏக்கருக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. நாற்று முறை சாகுபடி செய்யும்போது இந்த செலவை பாதியாக குறைக்க முடியும். பயிர்கள் ஆரோக்கியமாக வளர்ந்து அதிக விளைச்சலை தரும். இந்த சாகுபடி முறை பற்றி இனி பார்ப்போம்: ஆறுமாதம் வரையிலான கரும்பை தேர்ந்தெடுத்து தோகை பகுதியை நீக்கவிட வேண்டும். அதன் கணுப்பகுதியில் உள்ள பருவை அதற்கான கட்டிங் மிஷன் மூலம் வெட்டி தனியாக எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 5,000 பருக்கள் தேவைப்படும். இப்பருக்களை 200 கிராம் பாவிஸ்டின் பவுடர், 50 கிராம் யூரியா இவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தென்னை நார் கழிவுகளை பரப்பி அதன் மீது பருக்களை இட்டு, அதன் மீது ஈரப்பதம் உள்ள தென்னை நார் கழிவுகளை தூவ வேண்டும். 3 நாட்களுக்கு பிறகு பருக்கள் முளைக்கட்டிய நிலையில் இருக்கும். ஒவ்வொரு பருவையும் எடுத்து 50 குழித்தட்டுகளில், முளை குருத்து மேல் நோக்கி இருக்குமாறு பருக்களை பதிக்க வேண்டும். இதனை நிழல் பகுதியில் 22 நாட்கள் கவனமாக பராமரிக்க வேண்டும். தயாரான 5,000 கன்றுகளை ஒரு ஏக்கரில் ஐந்தரையடி இடைவெளியில் நடலாம். இந்த நாற்று முறை கரும்பு சாகுபடியை சொட்டு நீர் பாசனம் மூலமும் மேற்கொள்ளலாம். இந்த பாசன முறைக்கு அரசு மானியம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சொட்டு நீரிலேயே தேவையான உரங்களையும் இடுவதால் கரும்பு பயிர் திரட்சியாக வளர்கிறது. பராமரிப்பு மிகவும் எளிதாகிறது. விளைந்த கரும்பை எளிதாக இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியும். பல விவசாயிகள் இந்த முறையை பயன்படுத்தி செலவை பாதியாக குறைத்திருக்கிறார்கள். விளைச்சலை இரு மடங்காக அதிகரித்து இருக்கிறார்கள். ஒரு ஹெக்டேரில் 200 டன் கரும்பு அறுவடை செய்ய முடியும் என்பது இந்த நாற்று முறை கரும்பு சாகுபடியில் உள்ள முக்கியமான அம்சமாகும்.

Issues: