‘தமிழன் வங்கி’ உருவாகுமா?
தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் எவ்வளவோ சிறம்பம்சங்கள் உண்டு. சங்க காலத்திலேயே தமிழர்கள் கடல்கடந்து வணிகம் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த தமிழர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ‘தமிழன் வங்கி’ உருவாக வேண்டும் என்பது தமிழ் வர்த்தக சங்கத்தின் நோக்கமாகும். இதற்காக இச்சங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
இச்சங்கம் நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1944ம் ஆண்டு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் சண்முகம் செட்டியார் இச்சங்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்த சங்கம் கடந்த 2004ல் வைர விழா கண்டது. அரசு பதிவுபெற்ற தொழில்முனைவோர் சுமார் ஆயிரம் பேர் இச்சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர்.
அரசு பதிவுபெற்ற தொழில் நிறுவனங்கள் தான் இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர முடியும். இச்சங்கத்தின் 17வது தலைவராக சோழ நாச்சியார் ராஜசேகர் உள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக இவர் தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இச்சங்கம் சார்பில் 2 மாதத்திற்கு ஒரு முறை வெளியாகும் பத்திரிகை வெளிவந்து கொண்டிருக்கிறது. இச்சங்கத்தின் செயல்பாடுகள், நோக்கங்கள், கொள்கைகள், நடைமுறை திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த பத்திரிகையில் வெளிவருகின்றன.
தமிழ்நாட்டில் ஏராளமான தொழில் முனைவோர்கள் உருவாக வேண்டும் என்பது இச்சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இதற்காக ‘வானமே எல்லை’ என்கிற கருத்தரங்க நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தொழிலில் வெற்றி பெற்றவர்களை அழைத்து விழாவில் பேச வைக்கிறார்கள். இதன் முதல் நிகழ்ச்சியில் சாய்ராம் கல்வி குழுமங்களின் தலைவர் லியோ முத்து கலந்து கொண்டு உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
“லியோ முத்து அவர்கள் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. ஒரு சாதாரண ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அவரது சிறுவயதிலேயே தந்தையை இழந்து விட்டார். குடும்பத்தில் வறுமை மிகுந்தது. இதன் காரணமாக 10ம் வகுப்போடு தனது படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டார்.
ஒரு ரியல்எஸ்டேட் நிறுவனத்தில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார். இந்த வேலையில் கிடைத்த அனுபவங்களை கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார்.
தொடர் முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை இவற்றை கொண்டு வாழ்க்கையில் மேன்மேலும் முன்னேற தொடங்கினார். மாபெரும் தொழிலதிபராக உருவாகி ஏராளமான பேருக்கு வேலைவாய்ப்பை அளித்தார்.
இவர் உருவாக்கிய மெட்ரிக்குலேசன் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களில் இன்றைக்கு சுமார் 22 ஆயிரம் மாணவ மாணவியர் படிக்கின்றனர்.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, சாதனையாளராக மாறிய லியோ முத்துவை போன்றவர்களை புதிய தொழில் முனைவோர்கள் முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.
அவர் எங்களது கருத்தரங்க நிகழ்ச்சியில் பேசியது அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது. இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்‘ என்றார் இச்சங்கத்தின் தலைவர்.
தமிழ்நாட்டில் பொதுவாக சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் எதிர்மறை எண்ணங்கள்தான். இதை போக்குவதற் காகத்தான் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக இச்சங்கம் கூறுகிறது
சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு ஒன்றிக்கு சென்று அங்குள்ள தொழில்வளர்ச்சி பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். இது வரை சீனா, ஹாங்காங், சார்ஜா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு இச்சங்க உறுப்பினர்கள் சென்றிருக்கிறார்கள்.
வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் அங்கு நடக்கும் கூட்டங்களில் தமிழர்களின் தொன்மை வாய்ந்த பெருமைகளை பற்றி இச்சங்கத்தினர் எடுத்துரைக்கின்றனர்.
தனிச்சிறப்பு வாய்ந்த தமிழர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ‘தமிழன் வங்கி’ உருவாக வேண்டும் என்பதற்காக இச்சங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
‘சென்னை துறைமுகம்-மதுரவாயல் மேம்படுத்தப்பட்ட சாலை திட்டம் விரைவாக முடிக்கப்பட்டால் சென்னை துறைமுகம் சிறந்த வளர்ச்சியடையும்.
இந்தச் சாலையில் சரக்கு வாகனங்கள் செல்ல தொடங்கினால் சென்னை துறைமுக வடக்கு பகுதியில் தற்போது நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும். இதுபோன்ற பெரிய திட்டங்களை, திட்டமிட்ட காலத்தில் முடிப்பது அவசியம். இல்லையெனில் மதிப்பீட்டு செலவு உயரும்.
ஒப்பந்தக்காரர்கள் பின்வாங்கும் நிலை உருவாகும். இது தொடர்பாக அரசுடன் இணைந்து நடத்தும் ஆலோசனை கூட்டங்களில் எங்கள் கருத்துக்களை கூறி வருகிறோம்‘ என்கிறார் இச்சங்கத்தின் தலைவர்.
தீனா