முதலீடுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்

பதவியேற்று ஒரு வருடத்துக்குள் 18 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு சாதனை படைத்திருக்கிறார் மோடி. அவரது வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தாலும்,  அதைப் பொருட்படுத்தாமல் இந்தியாவுக்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவந்து குவித்து, பெரும் பொருளாதார வளர்ச்சியை எட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டு வருகிறார் மோடி.
 

அந்த வகையில்  சீனா, மங்கோலியா, தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளுக்கு செல்வதற்காக தனது சுற்றுப்பயணத்தை கடந்த மே 14-ம் தேதி தொடங்கிய மோடி, அந்நாடுகளிடம் பேசி  பல்வேறு நன்மைகளை இந்தியாவுக்கு பெற்றுத்தந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். சீனாவில் சியான், பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு சென்று சீன தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவுக்கு சாதகமான பல காரியங்களை செய்து முடித்திருக்கிறார்.    

சீனாவில் மூன்று நாட்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, 17-ம் தேதி மங்கோலியா சென்றதன் மூலம் மோடி, வடகிழக்கு ஆசியாவிலிருந்து அந்நாட்டிற்கு செல்லும்  முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.அந்த மங்கோலியா நாட்டிற்கு ரூ.6 ஆயிரத்து 300 கோடி உதவி அறிவித்ததன் மூலம், வெளிநாடுகளுக்கு எப்போது வேண்டுமானாலும் உதவக்கூடிய வல்லமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தினார்.

தனது பயணத்தின் இறுதிகட்டமாக 18 மற்றும் 19-ம் தேதி  தென் கொரியாவுக்கு சென்றார்  மோடி. அங்கும்  அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  அங்குள்ள தேசிய நினைவிடத்துக்கு சென்று  அவர் மலர்அஞ்சலி செலுத்தி தனது இரங்கலை வெளிப்படுத்தினார்.அங்குள்ள இந்தியர்கள் மோடியின் வருகையை மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்ந்தனர். மோடி முன்னிலையில் இந்தியா-தென் கொரியா இடையில் ஏழு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. மேலும், இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டி திட்டம், ரெயில்வே, மின்சார உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளின் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாயை  கடனாக வழங்குவதாக தென் கொரியா அறிவித்தது.

மோடி நேரடியாக சென்றதால்தான் இது சாத்தியமானது என்பதை, அவரின் வெளிநாட்டு பயணங்களை விமர்சிப்போர் புரிந்து கொள்ளவேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டுமே சென்றிருந்தால் இந்த காரியத்தை சாதித்திருக்க முடியாது. தென் கொரியாவின் கடனுதவியை பெற்றதோடு, அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் அழைப்பு விடுத்தார்.

ஏற்கனவே இந்தியாவில் பல கொரிய நிறுவனங்கள் தங்கள் தொழிலை நடத்திக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மேலும் பல கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சூழல் மோடியின் சுற்றுப்பயணத்தால் ஏற்பட்டுள்ளது.

மோடியின் இந்த சுற்றுப்பயணத்தில் முத்தாய்ப்பான விசயமாக கருதப்படுவது சீனப்பயனம்தான்.  இந்தியாவும், சீனாவும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளாக நட்புறவுடன் இருந்து  வந்ததை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. புத்த மதத்தை சீனாவுக்கு அளித்ததே இந்தியாதான். தியானம், யோகம், வர்மம், தத்துவம் போன்றவற்றை சீனாவுக்கு கொடையாக தந்ததும் இந்தியாதான்.

கிபி 7 ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட,  சீனாவைச் சேர்ந்த யுவான்சுவாங் என்ற அறிஞர் இந்தியாவின்  ஞானச்செல்வதை வியந்து போற்றியதை அவரது பயணக்குறிப்பு உணர்த்துகிறது. நமது நாட்டு வணிகர்கள் பண்டைய சீனாவில் வர்த்தகம் செய்ததையும் வரலாற்றில் காண முடிகிறது.

1950-ல் இரு நாடுகளும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு, நேருவும் மாவோவும் நட்புறவோடு செயல்பட்டதைக் கண்ட மேற்குலக நாடுகள், இரு நாடுகளையும் பொறாமையோடு பார்க்கத் தொடங்கியது.
ஆனால் அடுத்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் மீது, எல்லை பிரச்சனையை காரணம் காட்டி சீனா தொடுத்த போர்,  இரு நாட்டின் நட்புறவு சிதைவதற்கு காரணமாக அமைந்ததோடு, மேற்குலக நாடுகள் உள்ளூர மகிழ்ச்சி கொள்வதற்கும் வழி வகுத்தது. போரை தொடர்ந்து சீனா இந்தியாவை எதிரியாகவே பாவித்தது. 80களில் சீனா, தாராளமய பொருளாதாரத்திற்கு மாறிய பிறகு, சீனாவின் போக்கில் மாற்றம் தென்பட்டது.

உற்பத்தி செய்த பொருட்களுக்கான சந்தையை பிடிப்பதற்கு, பல நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டது சீனா. இந்தியாவுடன் அவ்வளவாக நெருங்காவிட்டாலும் இந்தியாவின் சந்தை சீனாவிற்கு அவசியத் தேவையாக இருந்தது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சீனாவின் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

சீனாவின் மலிவான பொருட்கள் இந்திய சந்தையை ஆக்கிரமிக்கத் தொடங்கின. சென்ற காங்கிரஸ்  ஆட்சிக்காலத்தில் சீன நிறுவனங்கள் இந்தியாவிலும் தொழில் தொடங்கின. எனினும் சீனாவிலிருந்து பெரிய அளவுக்கு முதலீடு வரவில்லை.

இந்நிலையில் மோடியின் சீனப்பயணம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. நேரு காலத்துக்குப் பின் மோடியின் சீனப்பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இன்றைய உலக பொருளாதார சூழ்நிலையில்,  வளர்ச்சி நோக்கத்திற்காக  சீனாவுக்கு இந்தியாவும், இந்தியாவுக்கு சீனாவும் தேவைப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே நெருடலான பிரச்சனையாக இருப்பது எல்லை பிரச்சனை மட்டுமே. இப்பிரச்சனையை பேசித்தீர்த்துக்கொள்ள முடியும் என இரு நாடுகளுமே நம்புகின்றன. ஆனால் காஷ்மீர், அருணாச்சலப்பிரதேசம் பகுதிகளை இந்தியாவின் அங்கமாக அங்கீகரிக்க மறுத்து, தனி விசா வழங்கும் நடைமுறையை இன்னும் பின்பற்றிக்கொண்டிருக்கிறது சீனா.

மோடி சீனாவில் இருந்தபோதே அந்நாட்டு அரசு மீடியாக்கள் மற்றும் தனியார் மீடியாக்கள், அருணாச்சலப்பிரதேசம் இல்லாத  இந்திய வரைபடத்தை வெளியிட்டுக்கொண்டிருந்தன. இவ்விசயத்தை மோடி அங்கே வெளிப்படையாக கண்டிக்க முடியவில்லை என்கிற விசயம் நம்மால் புரிந்துகொள்ளக்கூடியதே.
பல ஆண்டுகளாக சீனா, இந்தியாவை இப்படி சீண்டுவது வழக்கமாக நடந்து வருகிற ஒன்றுதான் என்பதை உணர்ந்த மோடி இவ்விசயத்தை பெரிது படுத்தாமல் விட்டதை ராஜதந்திரம் என்றே கருத வேண்டும். சீனா சொல்வதால், அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் பகுதியல்ல என்று ஆகிவிடாது.
இதை நன்குணர்ந்த மோடி முதலீடுகளையும், தொழில் நுட்பங்களையும் பெறுவதில் மட்டுமே நோக்கம் கொண்டிருந்தார். சீனாவுடன் பொருளாதார உறவை மேலும் நெருக்கமாக்கிக்கொள்வது  இந்தியாவுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடியது என்பதை நன்குணர்ந்த  மோடி, சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டு, வெற்றிகரமாக திரும்பியுள்ளார்.

பயணத்தின் ஆரம்பத்திலிருந்து வித்தியாசமான அணுகுமுறையை காட்டினார் மோடி.  சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சொந்த ஊரான ஜியான் நகரில் தனது பயணத்தை தொடங்கினார் மோடி.  ஜி ஜின்பிங்கின் இந்தியப் பயணம் மோடியின் சொந்த ஊரான அகமதாபாத்தில் தொடங்கியது  என்பதால் அதே அணுகுமுறையை மோடியும் கையாண்டார்.

டாஜிங்ஷன் கோயிலுக்குச் சென்றபோது மோடியைக் காண  மக்கள் கூட்டம் உற்சாகத்தால் நிரம்பி வழிந்தது.    பாதுகாப்பு வளையங்களையும்  மீறி அங்கு கூடியிருந்த மக்களின் அருகில் சென்று செல்பி எடுத்துக்கொண்டார். அங்கே மோடி மிகவும் உற்சாகம் நிறைந்தவராய் காணப்பட்டார்.
 

ஷான்ஸி விருந்தினர் மாளிகையில் மோடிக்கு ஜிங்பிங் வரவேற்பளித்தார். அங்கே முதல் கட்டப் பேச்சுவார்த்தை 90 நிமிஷங்கள் நடந்தது. அதில் பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டதாக  வெளியுறவு அமைச்சக வட்டாரம் தெரிவித்தது. தொடர்ந்து மூன்று நாட்களும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இறுதி நாள் மாலை இரு தரப்பிலிருந்தும்  அறிக்கைகள் வெளியாயின.  அந்த அறிக்கைகள் வருங்காலத்தில் இந்திய சீன உறவு மிகவும் பிடிப்புள்ளதாக மாறும் என்பதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்தின என்றே சொல்லலாம்.
இரு நாட்டு உறவுகளில் நல்ல புரிதலையும் தெளிவையும் கொண்டுவருவதில் மோடி வெற்றி  பெற்றுவிட்டார் என்றே சொல்லவேண்டும்.
வளர்ச்சிக்காக  இரு நாடுகளும் ஒத்துழைத்தால், அது இரு நாடுகளுக்குமே வெற்றியாக அமையும் என்பதை இரு நாடுகளுமே உணர்ந்திருக்கின்றன.

எல்லைப் பிரச்சனையை விரைவாகப் பேசி முடிவு செய்வது,  இரு நாடுகளின் வரலாற்றுக் கடமை என சீனப் பிரதமர் லீ கெகியாங் கூறியிருப்பதை சீன அதிபர் கவனத்தில் எடுத்துக்கொண்டாரா என்பது தெரியவில்லை. இது அடையக் கூடிய லட்சியம்தான் என்றாலும் அதற்கு தடையாக இருப்பது சீனாவின் ஈகோதான்.
 எதிர்த் தரப்பு வாதத்தையும் ஏற்று இசைந்து சில மாற்றங்களுக்கு ஒப்புக்கொள்ளக்கூடிய போக்கு இருந்தால் இந்த லட்சியத்தை நிச்சயமாக அடைந்து விடலாம்.

இந்திய பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல் தொடர்வது குறித்து சீனாவிடம் கண்டிப்புடன் மோடி பேசினார்  என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல அருணாச்சல் பிரதேசத்தை சீனாவின் பகுதியாகவும், காஷ்மீரை பாகிஸ்தானின் பகுதியாகவும் காட்டும் வரைபடத்தை சீனா பயன்படுத்தி வருவதையும்  கண்டித்ததாக  சொல்லப்படுகிறது.

உலக அளவில் முன்னிலை பெற்ற பொருளாதார நாடாக ஏற்றம் பெற இந்தியா  இன்னும்  நீண்ட தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்பதை உணராதவர் அல்ல மோடி. அதனால்தான்  சீனத்திடமிருந்து முதலீட்டையும், அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்கும் நிபுணத்துவத்தையும் ஈர்க்கும்  முயற்சிக்கு முன்னுரிமை கொடுத்தார். இந்த முயற்சி பல்வேறு நன்மைகள் ஏற்படவும் வழிவகுத்தன.

  •  பொருளாதாரம், ராணுவ ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் நெருங்கிச் செயல்பட வழிவகை காணப்பட்டிருக்கிறது.
  • புதுடெல்லிக்கும் பெய்ஜிங்குக்கும் இடையில் தகவல் தொடர்பு மற்றும்  போக்குவரத்துத் தொடர்பு அதிகரிக்க வழிவகை  காணப்பட்டிருக்கிறது.
  •  சீனத்துக்கும் மாநிலங்களுக்கும் இடையில் நேரடித் தொடர்பு அதிகரிக்க வழிவகை காணப்பட்டிருக்கிறது.
  •  ஆயுதக்குறைப்பு, அணு ஆயுதப் பெருக்கத் தடை, கட்டுப்பாடு ஆகியவை குறித்தும இரு நாடுகளும் கலந்து ஆலோசித்து செயல்பட முடிவு  காணப்பட்டுள்ளது.

மேலும் சீன முதலீட்டை ஈர்ப்பதற்காக,  இந்தியா வர விரும்பும் சீனர்களுக்கு விசா விதிகள்  எளிமைப்படுத்தப்படும் என்று அறிவித்தார் மோடி.
 சீன ஏற்றுமதிக்கான  சந்தையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. சீனாவின் அருகில் உள்ள நாடாக  இந்தியா திகழ்வதால், சீனர்களின் பொருட்களை உடனடியாக விற்பதற்கான வாய்ப்பு சீனர்களுக்கு உள்ளது.  சீன முதலீட்டாளர்களுக்கும் தொழில் முகவர்களுக்கும் இந்தியா உகந்த நாடாகத் திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

சீனத்தின் சியோமி என்ற ஸ்மார்ட் ரக செல்பேசி நிறுவனத்துக்கு  இந்தியா தான் மிகப் பெரிய சந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்னும் பல்வேறு சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீட்டை மேற்கொள்வதற்கான வாய்ப்பை மோடியின் பயணம் உருவாக்கியுள்ளது.
 ராஜீய உறவுகளின் அடிப்படையான அம்சமே வர்த்தக உறவை மேம்படுத்துவதுதான். எனவே நமது நாட்டை சந்தையாக சீனா பாவிப்பதில் தவறில்லை. ஆனால்  நம் நாட்டு மருந்துப் பொருட்களையும், சேவைத் துறையையும் தன் நாட்டில் நுழைய அனுமதிக்க சீனா மறுப்பது சரியான செயலா என்பதை சீனா எண்ணிப்பார்க்க வேண்டும்.   இந்த அம்சத்தை  அந்நாட்டிடம் நாசூக்காக மோடி எடுத்துச் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.

 இந்தியா  ஏற்றுமதி செய்வதைவிட இறக்குமதி செய்வது அதிகமாகிவிட்டதால் வெளிவர்த்தகப் பற்றாக்குறை சுமார் 3 லட்சம் கோடி ரூபாயாக ஆகியிருப்பதால்தான் மேக்இன்இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார் மோடி. இத்திட்டம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் இந்தியாவில் முதலீடுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. சீனாவின் முதலீடும் இந்தியாவுக்கு வருவது இந்தியாவின் வெளிவர்த்தகப் பற்றாக்குறை  குறைவதற்கு உதவும்.

Issues: