வறுமையை ஒழிக்குமா உணவுப் பாதுகாப்புச் சட்டம் ?

தனிமனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாரதி பாடினான்.  

அந்த காலகட்டத்தில் இந்தியா மாபெரும் வறுமையில் சிக்கி தவித்தது. அதற்கு காரணம் அன்றைய ஆங்கிலேய ஆட்சி. மக்களின் உழைப்பில் கிடைத்த வருமானத்தை, வரி என்ற பெயரில் சுரண்டியது ஆங்கிலேய ஆட்சி. அதனால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்து உணவுக்கே திண்டாடினார்கள். எனவேதான் மேற்சொன்ன வரியை பாரதி பாட நேர்ந்தது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் சென்று 65 ஆண்டுகள் கடந்து விட்டன. இவற்றில் பெரும்பாலான ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியே இந்தியாவை ஆண்டது. இடையில் ஜனதாவும், ஜனதாதளமும், பாரதீய ஜனதாவும் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தன.

தொழில் வளர்ச்சி என்றார்கள்.. பொருளா தார வளர்ச்சி என்றார்கள்.. தாராளமயம் என்றார்கள்.. தனியார் மயம் என்றார்கள்.. சந்தைப் பொருளாதாரம் என்றார்கள்.. இந்தியா வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது என்றார்கள்..
ஆனால் மத்திய அரசின் கணக்குப்படியே 67 சதவீதமக்கள் இன்னும் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். இப்பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண கடந்த காங்கிரஸ் அரசு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றியது.

இந்த நிகழ்வுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளில் புளுத்துபோய் கிடக்கும் அரிசியையும், கோதுமையையும் பட்டினியால் வாடும் ஏழைமக்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வினியோகம் செய்யுமாறு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது இதே அரசு, அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாதென சொன்னது நினைவில் கொள்ளத்தக்கது.

2014ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தது. இந்த அரசு, உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று சொன்னது. இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்த உணவு பாதுகாப்பு சட்டம் உண்மையிலேயே வறுமையை ஒழிப்பதற்குதானா என்பதில் பல்வேறு ஐயங்கள் உள்ளன.

உலக வங்கி இந்திய அரசின் சமூகபாதுகாப்பு திட்டங்கள் குறித்து 5 ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்த அறிக்கையில் “பொது வினியோக திட்டத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
 இதனை களையெடுக்க குடும்ப அட்டை தாரர்களுக்கு உணவு தானியங்களை மானிய விலையில் வழங்குவதற்கு பதிலாக, அந்த மானிய பணத்தை கொடுத்து, வெளிச்சந்தையில் பொருட்களை வாங்கிக் கொள்ளும் முறையை கொண்டு வரவேண்டும்.

இதற்கு ஏற்ப உணவு கொள்முதலில் தனியாரையும் போட்டியிட அனுமதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.
கொள்முதலில் தனியாரையும் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்ற உலக வங்கியின் ஆலோசனை, உணவு பாதுகாப்பு சட்டம் எதிர்காலத்தில் எந்த பாதையில் செல்லும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.
 

“முன்னுரிமை தாரர்களுக்கு உணவுப்  பொருட்களை வழங்குவதற்கு பதிலாக பணபட்டுவாடாவுக்கு மாறுவது”  பற்றி உணவு பாதுகாப்பு மசோதாவின் 13வது அத்தியாயம் பேசுகிறது.

இந்த மாற்றத்தை  படிப்படியாக அமுல்படுத்தும் போது, எதிர்காலத்தில் அரசுக்கு ரேஷன் கடைகளை நடத்த வேண்டிய அவசியமோ, உணவு தானியங்களை கொள்முதல் செய்து பாதுகாக்க வேண்டிய தேவையோ இல்லாமல் போகக் கூடும்.
இன்றைய பொருளாதார அறிஞர்களில் பலர், அனைத்து மானியங்களையும் ஒழிப்பதே பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதை ஆமோதிப்பவர்களாக உள்ளார்கள்.

இதை ஒரு மக்கள் நல அரசும் ஏற்றுக்கொண்டு படிப்படியாக செயல்படுத்துவதுதான் வேதனைக்குரிய அம்சம். எனினும் தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் வாக்குகளை கவருவதற்காக சென்ற ஆட்சியில் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.

மத்திய அரசு உணவு மானியத்திற்காக ஆண்டுதோறும் ரூ.90 ஆயிரம் கோடியை செலவிட்டு வருகிறது. சட்டம் அமுலான பின்னர் அந்த மானியம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக உயரும்.
 இது, கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் உலக வர்த்தக கழகத்திற்கு உறுத்தலாக இருக்கிறது. எனவே மானியத்தை ரத்து செய்யுமாறு இந்தியாவிற்கு அறிவுரை கூறி வருகிறது.

ஆனாலும் இதில் அவ்வளவு சீக்கிரம் மத்திய அரசு கையை வைக்காது எனலாம். வாக்குகள் பறிபோய் விடும் என்பதே இதற்கு முக்கிய காரணம்.

தற்போதைய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி,  கிராமங்களில் வசிப்போரில் 75  சதவீதத்தினரும், நகர்ப்புறங்களில் வசிப்போரில் 50 சதவீதத்தினரும் பயன் பெறுவர் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
ஒரு நபர் ஒரு மாதத்திற்கு 5 கிலோ தானியத்தை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம். அரிசி  ரூ.3க்கும், கோதுமை ரூ.2 க்கும், கம்பு, கேழ்வரகு போன்ற பிற தானியங்களை ரூ.1 க்கும் ரேஷன்கடைகள் மூலம் மக்கள் தங்களது ரேஷன் அட்டைக்கு பெற்றுக் கொள்ளலாம். இந்த சட்டத்தில் தற்போது பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.
இத்திட்டம் இலக்கு சார்ந்ததாக  வடிவமைக்கப் பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கையை பொருத்தமற்ற ஒரு வறுமை கோட்டை வகுத்து இத்தனை குடும்பங்கள் என்பதை முன்பு இருந்த திட்டக்குழு முடிவாக அறிவித்தது.

நகர்ப்புறத்தில் 50 சதவீதத்தினரும், கிராமப்புறத்தில் 75 சதவீதத்தினரும் பயனடைவர் என்பதை எப்படி முந்தைய திட்ட குழு தீர்மானித்தது என்பது தெரியவில்லை. இப்படி பயனாளிகளின் எண்ணிக்கை தன்னிச்சையாக முடிவு செய்யப்பட்டது இச்சட்டத்தில் உள்ள மிகப்  பெரிய குறைபாடு.

மாதம் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ தானியம் என்ற கணக்கை எதை வைத்து நிர்ணயித்தார்கள் என்று புரியவில்லை. தற்போது பெரும்பாலான மாநிலங்கள் பொது வினியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை அரிசி இலவசமாகவே வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் ரூ.2 க்கு அரிசி வழங்கப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசு வழங்கும் மானிய உதவியோடு தனது மானியத்தையும் கொடுத்து மக்களுக்கு குறைந்த விலையில் உணவுபொருட்களை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் உணவு பாதுகாப்பு சட்டத்தால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும் என்று ஜெயலலிதா உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் கூறியிருக்கின்றனர். தமிழகத்தில் தற்போது உள்ள உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளில் சுமார் 90 சதவீத மக்கள் பயனடைகிறார்கள்.

இதனோடு ஒப்பிடுகையில் உணவு பாதுகாப்பு மசோதாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தேசிய சராசரி இலக்கான 67 சதவீதம் என்பது மிகவும் குறைவு. இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் போது தமிழகத்தில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே உணவு பாதுகாப்பு உருவாகும் நிலை ஏற்படும்.

இது உணவு பாதுகாப்பா அல்லது இருக்கும் உணவு பாதுகாப்பை சீர்குலைப்பதா என்பதை மத்திய அரசு தான் விளக்க வேண்டும். மாநிலத்தில் பயன்பெறுவோர் எண்ணிக்கையை மத்திய அரசு தீர்மானிப்பது கூட்டாட்சி நடைமுறைக்கு எதிரானது என்றே சொல்ல வேண்டும்.

தமிழக மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் நகரங்களில் வசிக்கின்றனர். மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள நகர்புற மக்களில் 37 சதவீதம் பேருக்கு மட்டுமே உணவு அளிப்பது முரணாக உள்ளது.
புதிய சட்டத்தின் படி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படும் தானிய அளவும் குறையும். தற்போது மத்திய அரசு தமிழகத்திற்கு மானிய விலையில் 2 லட்சத்து 96 ஆயிரம் டன் உணவு தானியத்தை வழங்கி வருகிறது.
 

புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் போது 1 லட்சம் டன் வரை தமிழகம் இழக்கும்.  இதனால் மாநில அரசு வெளிச்சந்தையில் அரிசி வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி செலவாகும்.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் உலகளவில் இந்தியாவில்தான் அதிகம். இந்நிலையில் உணவு பாதுகாப்பு சட்டம் என்பது உணவு பாதுகாப்பை பறிக்கும் வகையில் இருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.

இந்த உணவு பாதுகாப்பு சட்டத்தில் உணவு உற்பத்தி பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. உற்பத்தியை உறுதி செய்யாமல் உணவு பாதுகாப்பு எப்படி சாத்தியம்? நமது நாட்டின் உணவு உற்பத்தியில் 70 சதவீதத்தை  பூர்த்தி செய்யும் சிறு விவசாயிகளின் மேம்பாடு குறித்து மத்திய அரசு அதிகம் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

மாறாக உரமானியத்தை குறைத்து அவர்களின் வருமானத்தை குறைத்ததோடு  வறுமை நிலைக்கும் தள்ளியுள்ளது மத்திய அரசு.
எனவே விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்.  விவசாய இடுபொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். அப்போது தான் உணவு உற்பத்தி அதிகரிக்கும்.

சுரா

 

Issues: