ஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம்

வியாபார சூழ்நிலைகள் தொழில் நுட்பத்திற்கேற்ப மாறவேண்டியது இன்றைய காலகட்டத்தின் கட்டாய மாகும். பொருட்களின் பட்டியலைக் கொடுத்து பொருட்களை வாங்குவது, டிராலியை தள்ளிக்கொண்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்குவது என்ற நிலைகளிலிருந்து இணையதளம் (இ காமர்ஸ்) மூலம் பொருட்களை வாங்கும் நிலைக்கு உயர்ந்தோம்.
தற்போது மொபைல்போன் வாயிலாக, வலைதளங்களில் பொருட்களை வாங்குவது பிரமிக்கத் தக்க வகையில் அதிகரித்து வருகிறது. இந்த முறையிலான வர்த்தகம் எம்காமர்ஸ் என அழைக்கப்படுகிறது.
இன்னும் சில ஆண்டுகளில் இ காமர்ஸின் வர்த்தகத்தை எம் காமர்ஸ் வர்த்தகம் மிஞ்சும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் இ-காமர்ஸ் பிஸினஸ் 16 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என அஸோசெம் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. இதில் மொபைல் போன் மூலமாக நடக்கும் வர்த்தகம் 70 சதவீதமாக அதிகரிக்குமாம்.
2014-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் மொபைல் போன் மூலம் இணைய தளத்தைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 17கோடியாக இருந்தது.
இதனுடைய வளர்ச்சி நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இதன் வளர்ச்சி ஆண்டுக்கு 21 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
2020 ம் ஆண்டில் சுமார் 50 கோடி நபர்கள் மொபைல் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
மொபைல் போன் எப்போதும் கையில் இருப்பதால் தேவையானதை எப்போது வேண்டுமானலும் ஒரு சில கிளிக்குகளில் வாங்கிகொள்ள முடியும் என்பதால் நமது நாட்டினர் மொபைல் போன் மூலம் பர்சேசிங் செய்வதை மிகவும் விரும்புகின்றனர்.
இன்றைக்கு ஒருவரிடம் ஸ்மார்ட் போன் இருந்தால் அவரிடம் உலகமே கையில் இருப்பது போலாகும். உள்ளங்கையில் உலகம் என்ற ஸ்மார்ட் போன் குறித்த புதுமொழி மிகவும் அர்த்தம் பொதிந்ததாக உள்ளது.
கணினி மூலம் இணையத்தை அணுகுவது வீடு மற்றும் அலுவலகங்களில் மட்டுமே சாத்தியம். லேப்டாப்பை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்துச் செல்லலாம் என்றாலும் வை - பை வசதி உள்ள பகுதிகளில் மட்டுமே, வலைதளங்களை பார்வையிட முடியும்.
எந்த இடத்திலும், நினைத்த நேரத்தில், வலைதளங்களில் நுழைந்து பொருட்களை வாங்க வேண்டுமென்றால் அதற்கு உதவுவது ஸ்மார்ட் போன்கள் மட்டுமே. எம்காமர்சின் வர்த்தகம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட் போன்களே.
கடந்த ஆண்டு, பிலிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த வணிகத்தில், மொபைல்போன் வாயிலான வர்த்தகம், 10 சதவீதமாக இருந்தது. இது, தற்போது, கணினியை விட, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
அதுபோன்று, ஜபாங், ஸ்நாப் டீல், மின்த்ரா போன்ற பல வலைதளங்களின், மொபைல் போன் சார்ந்த வர்த்தகம், குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது.
ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு 2 வருடங்களுக்கு முன்பு 5 சதவீதம் ஆர்டர்கள் மட்டுமே மொபைல் மூலமாக வந்தது.
ஆனால் இப்போது 70 சதவீத வியாபாரம் மொபைல் மூலமாக வருகிறது என்றுஅந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஜபாங் நிறுவனத்தின் வருமானத்திலும் 50 சதவீதம் மொபைல் மூலமாகத்தான் வருகிறது.
இதே விகிதத்தில் சென்றால் வரும் 2020ல் உலகளவில் எம்காமர்சின் வர்த்தகம் ரூ 4 லட்சம் கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ 1 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடக்கும் என சொல்லப் பட்டுள்ளது.

அருள்

Issues: