பொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்?

ஒரு நாட்டின் பலம் என்பது அந்நாட்டின் பொருளாதார பலத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. பொருளாதார பலத்தைப் பொறுத்த வரை சில நாடுகள்தான் முன்னணியில் இருக்கின்றன.
பல நாடுகள் பின்தங்கியே இருக்கின்றன. உலகில் மூன்று வகையான பொருளாதார தத்துவங்கள் நடைமுறையில் உள்ளன.  அவை, பொதுவுடமைப் பொருளாதாரம், முதலாளித்துவ
பொருளாதாரம், கலப்புப் பொருளாதாரம் ஆகியவையாகும்.  இன்றைக்கு பெரும் பாலான நாடுகளில் முதலாளித்துவ பொருளாதார கோட்பாடுதான் பின்பற்றப்படுகிறது.

அடிப்படையில், பொதுவுடமைக் கோட்பாடுகள்  மிகச் சிறந்ததாக இருந்த போதிலும் நடைமுறையில் அவை வெற்றி பெற முடியவில்லை. ஒரு சில நாடுகள் அக்கோட்பாடுகளைப் பின்பற்றி தோல்வியைத் தழுவியதால் முதலாளித்துவ பொருளாதார அமைப்பிற்கு மாறிவிட்டன. அதற்கு உதாரணமாக ரஷ்யாவையும் சீனாவையும் கூறலாம்.

இந்தியாவைப் பொறுத்த வரை நேரு காலத்தில் கலப்புப் பொருளாதார முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் 1991ல் தாராளமய பொருளாதார முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பல துறைகள் தனியார் மயமாக்கப் பட்டுவிட்டன. மேலும் ஏராளமான வெளி நாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் கால் பதித்து விட்டன.
தமிழ் இலக்கியத்தில் தனி மனிதனின் வளர்ச்சியை ஊக்கப்படுத்து வதை பிரதானமாக காணமுடியும். தனிமனிதன் உழைக்க உழைக்க  வரி பெருகி அரசாங்க பலம் அதிகரிக்கும்.
அவ்வையார் சொல்கிறார்:
வரப்பு உயர நீர் உயரும்;நீர் உயர நெல் உயரும்;
நெல் உயர குடி உயரும்;குடி உயர கோன் உயரும்..
தனிமனிதனின் வளர்ச்சிதான் அரசின் வளர்ச்சி. தனிமனிதனின் செல்வவளம் பெருகும் போது ஆறில் ஒரு பங்கு அரசுக்கு வரியாகச் செல்லும். இந்த சிந்தனையின் தொடர்ச்சியாகவே நவீன கால அரசும் இருப்பதை நாம் காணமுடிகிறது.
நமக்காக நாம் உருவாக்கிய அமைப்புதான் அரசு. அந்த அரசின் மூலமாக மக்களின் உடமைகளுக்கும் உரிமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. அதனால் தான் அரசு சட்ட அமைப்பை உருவாக்கியது.

பொதுவுடமை தோற்றது ஏன்?
ஒரு பொதுவுடமை சமூகத்தில் அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. கொள்கை அளவில் பொதுவுடமை சிறந்த தத்துவம்தான். ஆனால் நடைமுறையில் அது தோற்றது ஏன்?

இயற்கையாகவே மனிதனுக்கு போட்டி மனப்பான்மை உண்டு. மற்றவனை விட தான், ஒரு படியாவது முன்னேறி விட வேண்டும் என்ற ஆசை எல்லா மனிதர்களுக்குமே உண்டு. ஆனால் பொதுவுடமை சமூகத்தில் அடிப்படை தேவைகளை அரசே நிறைவேற்றி விடுவதால் போட்டி மனப்பான்மை குறைந்து சோம்பல் தன்மை வந்து விடுகிறது.  இதனால் அரசின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரும் தொய்வு ஏற்பட்டு பொருளாதார சுணக்கம் ஏற்பட்டு விடுகிறது.
1960களில் சீனாவை மாவோ ஆண்ட போது பொதுவுடமை கொள்கை நடைமுறையில் இருந்தது.  எனினும் அரசால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை.  1 கோடிபேர் வறுமையில் இறந்து போனார்கள்.

அதே காலகட்டத்தில் இந்தியாவில் அந்நிலை ஏற்படவில்லை. காரணம் அப்போது இந்தியாவில் அரசின் பங்களிப்பும் தனியாரின் பங்களிப்பும் கொண்ட கலப்பு பொருளாதார முறை நடைமுறையில் இருந்தது.
நடைமுறைச் சிக்கல்கள் இருந்த காரணத்தால் ரஷ்யாவும் சீனாவும் பொதுவுடமை பொருளாதார அமைப்பை விடுவித்து முதலாளித்துவ பொருளாதார முறையைக் கைக்கொண்டன.

உலக மயமாக்கலால் யாருக்கு நன்மை?

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கைகளை மற்ற நாடுகளின் மீது வற்புறுத்தி திணித்ததற்குக் காரணம் அது தங்கள் நாடுகளுக்கு நன்மை பயக்கும் என்பதற்காகத்தான். ஆனால் அதுவே அந்நாடுகள் தற்போது சிக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமாக அமைந்து விட்டது.  
புத்தகங்கள் மட்டுமே படித்து பொருளாதார நிபுணர்கள் ஆனவர்களின் ஆலோசனைகளை கேட்டு சந்தைப் பொருளாதாரத்தை அமெரிக்கா பெரிதும் ஊக்குவித்தது.
அனுபவங்களின் மூலமாக பொருளாதார தத்துவங்களை உணர்ந்தவர்களின் ஆலோசனைகளை அந்நாடுகள் உதாசீனபடுத்தியதன் விளைவை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

சந்தைப் பொருளாதாரத்தை ஊக்குவித்தால் விலை குறையும் என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எண்ணின. பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் அந்நாடுகளில் கால் பதித்ததன் விளைவாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சிறு நிறுவனங்கள் போட்டியிட முடியாமல் தத்தளித்தன.
பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டன. பொருளாதார வளர்ச்சி விகிதம் மிகவும் குறைந்தது. இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. பொருளாதார ரீதியாக பலர் ஏழையானார்கள். அவர்கள் யாவரும் தற்போது வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  

இந்த சம்பவங்களில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்வது நல்லது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வள்ளுவர் கூறும் உதாரணத்தைக் கேளுங்கள்.
உறுபசியும் ஒவாப்பிணியும் செரு பகையும்
சேராது இயல்வது நாடு”

நாட்டில் பசி, பட்டினியை அறவே நீக்க உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அதற்கு விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். மக்கள் நோயின்றி வாழ வகை செய்ய வேண்டும். அதற்கு மருத்துவ துறையை மேம்படுத்த வேண்டும்.
ஒரு நாடு போரில் பகையை வளர்த்து போரில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும். இதற்கு உதாரணமாக சீனாவைக் கூற முடியும். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சீனா எந்த ஒரு நாட்டிடமும் போரிடவில்லை.  

ஆனால் அமெரிக்கா ஏராளமான போர்களில் ஈடுபட்டிருக்கிறது. இதனால் அமெரிக்காவின் கடன் வானை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
பெரும் வல்லரசு நாடு என்று மார்தட்டிக் கொள்கிற அமெரிக்கா சீனாவிடம் தொடர்ந்து கடன்வாங்க கையேந்திக் கொண்டிருக்கிறது. சீனாவோ ஒவ்வொரு துறையிலும் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

பொருளாதார வளாச்சிக்கு என்னென்ன அடிப்படை விஷயங்கள் தேவையோ அனைத்தையும் சீனா அந்நாட்டு சிறு, குறு, பெரும் தொழில் நிறுவனங்களுக்கு நிறைவேற்றித் தருகிறது.
சீனாவிலிருந்து ஏற்றுமதி பொருட்களைச் ஏற்றிச் செல்லும் கப்பல்கள், பல்வேறு நாடுகளில் இறக்கிவிட்டு வெறும் கப்பலோடு திரும்பி வருகின்றன  என்கிற செய்தி சீனா அனைத்திலும் தன்னிறைவு பெற்று, உபரியை மட்டும் ஏற்றுமதி செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை புலப்படுத்துகிறது.

இப்போது பல நாடுகள் சீனாவிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
இந்தியாவும் பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுதான். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களை இந்தியா நன்குணர்ந்து அதன் அடிப்படையில் செயல்பட்டடால் அந்நாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படாமல் தவிர்த்து சீனாவைப் போல முன்னேற்றப் பாதையில் நடைபோடலாம். அதற்கான அறிகுறிகள் தற்போது தென்படுகிறது.

சந்திரசேகர்

 

Issues: