லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா?

இல்லம் இல்லாத ஏழைகளுக்கு, நிலம் வழங்கும் திட்டத்தை கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்திருந்தது. தற்போதைய பா.ஜ.க. அரசு அந்த திட்டத்திற்கு பதிலாக, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்து, அதற்கான வழிமுறைகளை வகுத்து வருகிறது.  2022 க்குள் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்பதில் மோடி தீவிரமாக உள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, ஏழைகள் நிலம் பெறுவதை சட்ட பூர்வமாக உரிமை ஆக்க வேண்டும் என்பது சோனியா காந்தியின் விருப்பமாக இருந்தது.  தகவல் அறியும் உரிமைச் சட்டம், கிராமப்புற வேலை உறுதித்திட்டம், உணவு உரிமை சட்டம், கல்வி உரிமை சட்டம் ஆகிய சட்டங்களை நிறைவேற்றியதைப் போலவே நிலம் பெறும் உரிமைச்சட்டத்தையும் கொண்டுவர அவர் விரும்பினார்.

ஆனால் அதற்கான மசோதாவை நிறைவேற்ற இயலவில்லை. இந்தியாவில் நிலம் தொடர்பான அனைத்து உரிமைகளும் மாநில அரசுகளிடம் உள்ளதால், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த திட்டத்தை சட்டமாக்குவது சாத்தியமில்லாமல் இருந்தது.  திட்டமாக அறிவிக்க மட்டுமே முடிந்தது. அதன் படி அப்போது, ஏழைகளுக்கு நிலம் வழங்குவதற்காக தலா ரூ.20 ஆயிரம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கென தனி குழுவும் உருவாக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் ஆளும் சில மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கேரள அரசும், ஆந்திர அரசும் இந்த திட்டத்தை தற்போது நடைமுறைபடுத்தி வரும் மாநிலங்களாகும்.  ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆட்சி காலத்தில் அதாவது 2005ம் ஆண்டு இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. அம்மாநிலத்தில் இது வரை சுமார் 10 லட்சம் பேருக்கு இலவசமாக நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. 2009 ல் ஆந்திராவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு இத்திட்டம் முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளாவைப் பொறுத்தவரை, நிலம் இல்லாத ஏழைகளுக்கு 3 செண்ட் நிலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தல் சுமார் 3 லட்சம் குடும்பங்கள் நிலம் இல்லாத குடும்பங்களாக அடையாளம் காணப்பட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள் நிலம் இல்லாதவர்கள் அனைவருக்கும் நிலம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு உறுதி கூறியிருக்கிறது.
தமிழகத்தில் சென்ற திமுக.  ஆட்சியில், ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்திட்டம் வெற்றிகரமாக நடை முறைப்படுத்தப்பட வில்லை.

மேற்குவங்க மாநிலத்தில் இடதுசாரி அரசு,  1977 ம் ஆண்டிலேயே நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்கிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.   இதைப் பின்பற்றியே கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது சோனியா காந்தி, நாடு முழுவதும் நிலம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினார். தற்போது குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  தற்போதைய மோடி அரசு, நிலம் வழங்கும் திட்டத்துக்கு பதிலாக, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் மக்களிடம் கூடுதல் செல்வாக்கு பெறலாம் என்று எண்ணி அத்திட்டத்தை அறிவித்துள்ளது.

2022க்குள் இத்திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று மோடி கூறியுள்ளார். ஆனால் பல மாநில அரசுகள் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு தர வில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒத்துழைப்பு கிடைக்க வில்லை என்று பாஜக குற்றம் சாற்றுகிறது.
இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  இதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இது இந்திய பொருளாதாரத்தின் உயர்வுக்கு வழி வகுக்கும் என்பது பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

எது எப்படி இருப்பினும், வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இத் திட்டத்தை மத்திய அரசு உறுதியாக நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
                      
பாண்டியன்

 

Issues: