ரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்!

எப்படியாவது இந்திய வேளாண் சந்தையைக் கைப்பற்ற, அந்நிய விதை நிறுவனங்கள் துடிக்கின்றன. குறிப்பாக மான்சாண்டோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்கள் இந்தியாவில் தனது வர்த்தகத்தை உயர்த்துவதற்காக பல்வேறு தகிடுதத்த வேலைகளை செய்து வருகின்றன.
இந்நிறுவனங்களுக்கு ஆதரவாக அமெரிக்க அரசும் பல்வேறு அழுத்தங்களை இந்திய அரசுக்கு தருவதால் நமது அரசும் பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும்போக்கை கடைபிடித்து வருகிறது.
இதேபோக்கைக்தான் 60களில் பசுமை புரட்சி என்ற பெயரில் இந்தியா கடைபிடித்தது. அமெரிக்காவின் ராக்பெல்லர் பவுண்டேஷன், ஃபோர்டு பவுண்டேஷன் ஆகியவற்றின் மூலம் ஏராளமான கோடிகள் செலவழிக்கப்பட்டு ரசாயன உரங்களும், பூச்சி கொல்லி மருந்துகளும், வெளிநாட்டு விதைகளும் இந்திய விவசாயிகளிடம் திணிக்கப்பட்டன.
மரபு சார்ந்த விவசாயம் படிப்படியாக அழிக்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்த ஆயிரக்கணக்கான மரபு விதைகள் அழித்தொழிக்கப்பட்டன.
பசுமை புரட்சி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இயற்கை விவசாய ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு காட்டினர். ஆனால், அந்த எதிர்ப்பை எல்லாம் பொருட்படுத்தாமல் ரசாயன உரத்தையும், பூச்சி மருந்தையும் பயன்படுத்தும் விவசாயம் வளர்த் தெடுக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய விவசாயிகளின் வாழ்வு முன்னேற்றம் அடைந்ததா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் மரபணுமாற்று விதைகளை அனுமதிப்பதில் இந்தியா தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
ஏற்கனவே பசுமைப் புரட்சி என்ற பெயரில் வீரிய விதைகள் விதைக்கப்பட்டதால் நமது மண், நஞ்சாகி உள்ளது. மேலும் இந்த விதைகளால் அதிக அளவு நீரும், அதிக அளவு உரமும் செலவானதால் பெரும் பொருளாதார இழப்புகள் இந்தியாவுக்கு ஏற்பட்டன. இதன் பிறகாவது இந்திய விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு திருப்புவதற்கு நமது அரசு முனைப்பு காட்டியிருக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த இயற்கை விவசாயம் பசுமை புரட்சி என்ற பெயரில் அழிக்கப்பட்டது. இந்த பசுமை புரட்சி எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்க முடிந்தது? 40 ஆண்டுகள் கூட நீடிக்க முடியவில்லை. அதற்குள் மண்ணை மலடாக்கி விட்டது.
பசுமை புரட்சிக்கு ஆதரவு அளித்த நவீன விவசாய தொழில்நுட்ப வல்லுனர்கள், இந்த பிரச்சனைக்கு மாற்றுத்தீர்வாக இயற்கை விவசாயத்தை சொல்லாமல், மரபணு மாற்று விவசாயத்தை சொல்கின்றனர். இது ரசாயண உர விவசாயத்தைவிடவும் மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கின்றனர் இயற்கை விவசாய நிபுணர்கள்.
பிடி பருத்தி எனப்படும் மரபணுமாற்று பருத்தியை விதைத்த மகாராஷ்டிர விவசாயிகள் என்ன நிலைக்கு ஆளானார்கள் என்பது நமக்கு தெரியும். மகசூல் அதிகம் கிடைக்காததால் கடன் தொல்லைக்கு ஆளாகி ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வை கண்டபிறகும் மரபணு மாற்று விவசாயத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளிப்பது ஏனென்று புரியவில்லை.

Issues: