பயன்படுத்தப்படாத 20 ஆயிரம் டன் தங்கம்... வருமானம் தரும் தங்க டெபாசிட் திட்டம்... முதலீடு செய்ய முன்வருவார்களா மக்கள்?

மக்களுக்கு அணிகலனாகவும் , சேமிப்பாகவும் பயன்படும் ஒரு பொருள் தங்கம். இது நாட்டின் பொருளாதார பலத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த த ங் க த் தி ன் மூ ல ம் , இ ந் தி ய பொருளாதாரத்துக்கு எழுச்சி கிடைக்க இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விதை தூவப்பட்டுள்ளது. அதுதான் தங்க டெபாசிட் திட்டம்.

தங்கத்தை மையமாக வைத்து மூன்று திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
தங்க டெபாசிட் திட்டம்,தங்கப் பத்திர திட்டம், தங்க நாணயத் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களும் மக்களுக்கும், நாட்டின் பொருளா
தாரத்திற்கும் மிகுந்த நன்மைபயக்கக் கூடியது என வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

தற்போதுள்ள நிலவரப்படி இந்திய மக்களிடம் பயன்படுத்தப்படாத 20 ஆயிரம் டன் ஆபரண தங்கம், இருப்பதாக உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது

இதில் இருந்து ஒரு சதவீதம் அரசின் தங்க டெபாசிட் திட்டத்தின் மூலம் கொண்டு வந்தாலே ஆண்டுக்கு 250 டன் தங்கம் இறக்குமதி
செய்வது குறையும்.
பயன்படுத்தப் படாத இந்த சொத்து பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள அரசு தீர்மானித்திருக்கிறது.

ஆண்டுக்காண்டு தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்க இறக்குமதிக்காக அதிகமான டாலர்கள் செலவிட அரசுக்கு நேரிடுகிறது.

கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக நம் அந்நியச் செலாவணி அதிகம் கரைவது தங்க இறக்குமதியில்தான்.
ஆண்டுக்கு சராசரியாக 800 முதல் 1000 டன் தங்கம் இந்தியாவுக்குள் வருகிறது.
திருட்டுத்தனமாக வரும் தங்கம் இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை.

ஒரு நாட்டில் அதிக தங்கம் இருந்தால் அந்நாட்டின் பணமதிப்பு உயரும் என்பது பொருளாதார தத்துவம். ஆனால்,
இந்தியாவில் இதற்கு நேர் எதிராக நிகழ்வதைக் காண்கிறோம். கட்டுப்பாடில்லாத தங்க இறக்குமதியால்
அந்நியச் செலாவணி கரைகிறது. அதனால் பணமதிப்பு பின்வாங்குகிறது .

வந்து குவியும் தங்கத்தால், வரிவருவாய் தவிர நாட்டுக்கு வேறெந்த பயனும் இல்லாத நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் ஏகப்பட்ட அந்நிய செலாவணியை தங்க இறக்குமதிக்காகநமது நாடு இழந்திருக்கிறது.

மேலும் நடப்புக் கணக்கு பற்றாக் குறையும், வர்த்தக பற்றாக் குறையும் பெருமளவில் இது ஏற்படுத்துகிறது .
எனவேதான் அரசு இறக்குமதி வரியை உயர்த்தியது.

இந்நிலையில் வேறு எந்த வகையிலெல்லாம் தங்கம் இறக்குமதி செய்வதைத் தடுக்கலாம் என யோசித்ததன் விளைவுதான் இந்த
தங்க டெபாசிட் திட்டம்.

இந்த தங்க டெபாசிட் திட்டம் ஏற்கனவே எஸ்பிஐ வங்கியால் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாலும் மக்களிடையே இத்திட்டம் பரவலாக சென்றடையவில்லை.

இப்போது மத்தியஅரசே இத்திட்டத்தை அறிவித்துள்ளதால் ஏராளமான மக்கள் தம்மிடம் இருக்கும் தங்கத்தை முதலீடு செய்ய முன் வருவார்கள்.

எஸ்பிஐ வங்கியின் திட்டப்படி, அடிக்கடி பயன்படுத்தப்படாத பழைய தங்க நகைகளை மொத்தமாக டெபாசிட் செய்ய வாய்ப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த நகைகள் மீண்டும் அதே வடிவில் கிடைக்காது.
பெறப்படும் நகைகள் மும்பையில் உள்ள மத்திய அரசின் நாணய அச்சடிப்பு மையத்துக்கு அனுப்பப்படும்.

அங்கு நகைகள் உருக்கப்பட்டு, கழிவுகள் நீக்கப்பட்டு பிஸ்கெட்டுகளாக மாற்றப்படும். வாடிக்கையாளருக்கு அதன் மதிப்பை நிர்ணயம் செய்து, அந்த தொகைக்கு தங்க டெபாசிட் சான்றிதழ் அளிக்கப்படும்.

டெபாசிட் தொகை மீது 3 சதவீதம் வரை வட்டியை வங்கி அளிக்கும். டெபாசிட் செய்ய குறைந்தபட்சம் 500 கிராம் (62.5 பவுன்) நகை
தேவை. குறைந்தது 3 ஆண்டு கால டெபாசிட்டாக ஏற்கப்படும்.

வாடிக்கையாளர்கள் பி.ஐ.எஸ். தரச்சான்றோடு நகைகளை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். மாதா மாதம் வட்டி வழங்கப்படும்.
இந்த வட்டி மூலம் கிடைக்கும் தொகைக்குவருமான வரி செலுத்த தேவையில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

இந்த விதிமுறையை மாற்றி 40 கிராம் டெபாசிட் செய்தால் போதும் என்றால் சாமானியநகர மக்களுக்கும் இந்த திட்டம் உதவியாக இருக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தை மையமாக வைத்து அறிவிக்கப்பட்ட மூன்று டெபாசிட் திட்டங்களில், தங்க டெபாசிட் திட்டத்தின்படி, மக்கள் தங்களிடம் இருக்கும் தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். அதற்கு வட்டி
வழங்கப்படும். முதிர்வுக்குப் பிறகு அதே அளவு தங்கம் திருப்பித் தரப்படும்.

தங்கப் பத்திர திட்டத்தின்படி, உங்களுக்கு எவ்வளவு தங்கம் தேவையோ அதற்கான தொகையை வங்கிகளில் செலுத்தலாம். ஆனால்தங்கத்துக்குப் பதில் பத்திரம் தருவார்கள். முதிர்வுக் காலத்துக்குப் பிறகு அந்தப் பத்திரத்தை ஒப்படைத்து, அப்போதைய தங்க விலை நிலவரப்படி ரொக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

தங்க நாணயத் திட்டத்தின்படி, அசோகச்சக்கர சின்னத்துடன் அரசே தங்க நாணயத்தை வெளியிடும். சேமிப்புக்காக நகையை வாங்க விரும்புபவர்கள் அணிகலனாக வாங்காமல், அரசின் தங்க நாணயத்தை வாங்கிக்கொள்ளலாம்.

ஒருகாலத்தில் பிஸ்கெட்டாக தங்கம் இறக்குமதியாகும். இப்போது பெரும்பாலும் நாணயங்களாகவே வருகின்றன. உள்நாட்டிலேயே நாணயத்தைத் தயாரித்து விட்டால் இறக்குமதியைக் குறைக்கலாம் என்பது மத்திய அரசின் எண்ணம்.

பொதுவாக தங்க நகைகளை அடமானம் வைப்பவர்தான் வங்கிக்கு வட்டி கட்ட வேண்டும்.
அதுபோல வங்கியின் லாக்கரில் பாதுகாப்பாக வைப்பதற்கும் பராமரிப்பு கட்டணத்தை வாடிக்கையாளர்தான் செலுத்த வேண்டும்.

இது இரண்டும் இல்லாமல் உபரி தங்கத்தை வங்கியில் பாதுகாப்பதன் மூலம் வருமானம் பெறும் வாய்ப்பை வழங்குவது தங்க டெபாசிட் திட்டத்தின் சிறப்பம்சம்.

மக்கள் தங்களிடம் உள்ள நகைகளில் அதிகபட்சமாக 70 சதவீத ஆபரணங்களைத்தான் பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள 30 சதவீத ஆபரணங்கள் பல்வேறு காரணங்களால் பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். இதன் மதிப்பு மட்டும் மேலே சொன்னது
போல 20 ஆயிரம் டன் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. கோயில்களில் குவிந்திருக்கும் தங்கம் இந்தக் கணக்கில் வராது. பயன்படுத்தப்படாத தங்கம் சுழற்சிக்கு வராததால் பணமதிப்பு பெறுவதில்லை.

எனவே இந்த பயன்படுத்தப்படாத தங்கத்தை நாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிறதுஅரசு. மறு சுழற்சி முறையில் கிடைக்கும் இந்த தங்கம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு, மக்களுக்கு வருமானத்தையும்
தரும்.

இந்தத் திட்டம் மக்களை சரியாகச் சென்றடைந்தால் தங்க இறக்குமதி குறையும். உள்நாட்டுக்குள்ளேயே தங்கம் பரவலாகும்போது, உலக சந்தையில் தங்கம் என்ன விலையில் விற்கிறதோ அதே விலைக்கு இங்கேயும் விற்க
முடியும்.

இதனால் தங்கத்தின் விலை குறையவும் வாய்ப்புள்ளது. மேலும் எதிர்காலத்தில் தங்கத்தின் காரணமாக பொருளாதாரத்தில் நிகழும் தாக்கங்களும் குறையும் என்கின்றனர் தொழில்துறையினர்.

உலக அளவில் தங்க இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. தங்க இறக்குமதி அளவுக்கு ஏற்ப தங்கக் கடத்தலும் கடந்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் பெரிய சிக்கல் ஏற்படும் என்று இறக்குமதி தங்கத்தின்மீதான வரியை 10 சதவீதமாக உயர்த்தியது அரசு.

மேலும் இறக்குமதி செய்யும் தங்கத்தில் இருந்து ஆபரணமாக குறைந்தபட்சம் 20 சதவீதம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்கிற
கட்டுப்பாடும் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு கட்டுப்பாடுகளாலும் ஓரளவு தங்க இறக்குமதி குறைந்தது.

இந்த கட்டுப்பாட்டுக்கு பிறகு 2013&-14ம் ஆண்டு இறக்குமதி தங்கத்தின் அளவு 662 டன்னாகக் குறைந்தது. இறக்குமதி குறைந்ததே
தவிர கடத்தல் குறையவில்லை என ஆய்வு விவரங்கள் கூறுகின்றன. இப்பிரச்சனைக்கெல்லாம், அரசின் தங்க
சேமிப்பு திட்டம் தீர்வைத்தரும் என நம்பப்படுகிறது.

இந்த தங்க டெபாசிட்டுக்கு நிலையான வட்டி கிடைக்கும் என்பதால் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பிட்ட சதவீதம் வட்டி கிடைக்கும் என்ற தெளிவான வரையறை இதுவரை இல்லை எனினும் 3 முதல் 5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெபாசிட் செய்வதற்கான நடைமுறை அறிவிப்பு இன்னும் முழுமையாக வங்கிகளுக்கு வரவில்லை. என்றாலும் வழக்கமான நிதி முதலீட்டு நடைமுறைதான் இருக்கும் என்கின்றனர் வங்கித் துறையினர்.

ஆபரண தங்கத்தை அப்படியே வைத்துக்கொள்வதா அல்லது எஸ்பிஐ வங்கி திட்டத்தைப் போல அது உருக்கப்பட்டு கட்டிகளாக
மாற்றப்படுமா என்பது பற்றிய விவரமான அறிவிப்பு இன்னும் வரவில்லை.

தற்போது மும்பையில்தான் தங்கத்தை உருக்கும் பணிகள் நடக்கின்றன. பொது மக்களிடமிருந்து வாங்கும் ஆபரணங்கள் உருக்கிய பின்னரே டெபாசிட்டுக்கு ஏற்கப்படும் என்கிற நடைமுறை வந்தால் அந்தந்த பகுதிகளில் உருக்குவதற்கான
சாத்தியங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முருகன்

Issues: