பயிர்க்காப்பீடு செய்ய முன் வராத விவசாயிகள்...காரணம் என்ன?

இந்திய மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி  செய்வதுடன், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்குவது விவசாயம். இந்த விவசாயத்தை பாதிக்கக்கூடிய காரணிகளாக திகழ்வது பருவ மாற்றமும் விலை மாற்றமும் ஆகும்.
  மழை பொழிந்து விளைச்சல் அதிகமானால் பொதுமக்களுக்கு நன்மையாக இருக்கிறது. அதேசமயத்தில் அது பெரும்பாலும்  விவசாயிகளுக்கு நன்மையாக இருப்பதில்லை.
குறிப்பிட்ட பொருள் சந்தையில் குவிந்தால் அப்பொருள் மிக குறைவான விலைக்கே வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
ஆக மழை பொழிந்து விளைச்சல் அதிகரித்தும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை.. அதேபோல பருவ மாற்றத்தால் மழை பொழியாமல் விளைச்சல் குறைந்தாலும் நஷ்டத்தையே சந்திக்க நேரிடுகிறது.
மேலும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் பயிர்கள் அழிந்தாலும் விவசாயிகளுக்கு நஷ்டம்தான்.

இத்தகைய நஷ்டம் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக அரசால் உருவாக்கப்பட்ட வழிமுறைதான் பயிர் காப்பீடு. பயிர்க்காப்பீட்டின் அவசியம் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தின் போதே உணரப்பட்டது.
ஆனால் அதற்கான நடவடிக்கை தொடங்கப்படவில்லை.  சுதந்திரத்திற்குப் பிறகே நடவடிக்கை தொடங்கப்பட்டது. 1948-ல் இதுபற்றி ஆராய்வதற்காக குழு ஒன்றை நேரு  அமைத்தார். இரண்டுவிதமான முடிவுகளைக் கொண்டு இந்தக் குழு ஆய்வு செய்தது.

பயிர்கள் நாசமாகும்போது, ஒவ்வொரு விவசாயியின் நஷ்டத்தையும் தனித்தனியே கணக்கிட்டு அதன்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது ஒரு முடிவு.
ஒரே மாதிரியான பருவநிலை கொண்ட கிராமம், யூனியன், தாலுகா போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் மொத்த நஷ்டத்தைக் கணக்கிட்டு, அதற்கேற்ப விவசாயிகளுக்கு இழப்பீடு தரலாம் என்பது
இரண்டாவது முடிவு.
ஒவ்வொரு விவசாயியின் தனித்தனி இழப்பீட்டைக் கணக்கிடுவதில் சிரமம் ஏற்படும் என கருதப்பட்டது.  எனவே இரண்டாவது முடிவை நடைமுறைப்படுத்த அந்தக் குழு பரிந்துரை செய்தது. 1965-ம் ஆண்டு இந்தப் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டது. இக்காலகட்டத்தில் காப்பீட்டுத்துறை தனியாரிடம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1972-ம் ஆண்டு காப்பீட்டுத் துறை தேசியமயமாக்கப்பட்டது. இதனால், பொதுக்காப்பீட்டு நிறுவனம் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை ஏற்றது.
1979-ல் விவசாயக் கடன் பெறுவோர் கட்டாயமாகப் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் என்கிற திட்டம் அறிமுகமானது.

ஒட்டுமொத்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எனப்படும் புதிய திட்டம் 1985-ம் ஆண்டில் அறிமுகமானது.
 இத்திட்டத்தில் விவசாயிகள் ஆர்வத்துடன் சேரத்தொடங்கினர். எனினும் அரசால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை, பிரீமியத் தொகையைக் காட்டிலும் மிக அதிகமாக இருந்ததால், பிரீமியத் தொகையை மாற்றியமைக்கத் திட்டக்குழு முடிவு செய்தது.   

இதையடுத்து, 1999-ல் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்கிற புதிய திட்டம் அறிமுகமானது. முன்பிருந்த காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீட்டுத் தொகையின் மூன்றில் ஒருபகுதியை காப்பீட்டு நிறுவனம் வழங்கியது. புதிய திட்டத்தில் இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசும் மாநில அரசும் சரிபாதியாகப் பகிர்ந்து வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.  
இதன் பிறகு வேளாண் காப்பீட்டு நிறுவனம் 2002-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பொதுக் காப்பீட்டு நிறுவனம், நேஷனல், ஓரியண்டல், யுனைடெட் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களும் நபார்டும் சேர்ந்து இந்த அமைப்பை நிறுவின. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியதே இதன் பணி.  
ஆனால் இந்த காப்பீட்டு நிறுவனங்களோ வணிகரீதியில் சிந்தித்து செயல்படுகின்றன. பிரீமிய தொகையை அதிகளவில் நிர்ணயிக்கின்றன. எனவே வங்கியில் கடன் பெறாத விவசாயிகள் தாமாக முன்வந்து பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர முன்வருவதில்லை.

சிறு விவசாயிகளும், குத்தகைக்கு விவசாயம் செய்வோரும் வங்கிகளில் கடன் பெறமுடியாத நிலையே உள்ளது. இவர்கள் கந்துவட்டிக் காரர்களிடம் கடன் வாங்கியே விவசாயம் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கான தீர்வை இன்னும் அரசால் தரமுடியவில்லை. ஆனால் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேரும்படி அழைப்பு மட்டும் விடுக்கப்படுகிறது.
பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் விவசாயிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த விகிதத்தில் இருப்பதற்கு காரணமே, அவர்கள்  வங்கிகளில் கடன் பெறமுடியாத நிலை இருப்பதுதான்.
பயிர்க்காப்பீட்டில் உள்ள சிக்கலான நடைமுறைகளால் பயிர்க்காப்பீடு விவசாயிகளுக்கு உதவுவதாக இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவேதான் பஞ்சாப் முதல்வர் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார்.

 ‘இயற்கையின் சீற்றத்தால் பஞ்சாப் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த வேளையில் மத்திய அரசு விரைவாக செயல்பட்டு, நீண்ட கால பயிர்க் காப்பீடு திட்டத்தை உருவாக்க வேண்டும். பஞ்சாப் விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் அளிக்க வேண்டும்’ என்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறியிருந்தார்.

இந்திய விவசாய காப்பீடு நிறுவனம்  மூலம் ‘வானிலை அடிப்படையில் பயிர் காப்பீடு திட்டம்’,  ‘திருத்திய தேசிய விவசாய காப்பீடு திட்டம்’  என்ற இரண்டு பிரதான காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகளின்  வருமானத்தை பாதுகாப்பதே இந்த திட்டங்களின் நோக்கம்.
விவசாய வருமானம் என்பது விவசாயி செய்யும் உற்பத்தியும், அதற்கு கிடைக்கும் விலையைப் பொறுத்தே அமைகிறது. உரிய விலை கிடைப்பது என்பது குறிப்பிட்ட பயிரின் தேவையைப் பொறுத்து அமைகிறது. தேவை குறைந்தால் உரிய விலை கிடைக்காது.
இதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு பயிர்க்காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியாது.   வானிலை காரணமாகவோ, பூச்சி தாக்குதலாலோ  உற்பத்தி பாதிக்கப்பட்டால் மட்டுமே பயிர்க்காப்பீடு மூலம்  இழப்பீடு பெற முடியும்.

நாட்டில் 70 சதவீத விவசாயம் வானிலையை  பொறுத்தே உள்ளது.  இவர்கள் அனைவரும் வானிலை அடிப்படையில் பயிர் காப்பீடு பெறுவது அவசியம்.
ஆனால்  20 சதவீத விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு செய்கின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் வங்கிகளில் பயிர்க்கடன் வாங்குவதால் காப்பீடு செய்கின்றனர்.
விவசாய கடன் வாங்கியவர்களில் பலர் தாம், பயிர் காப்பீடும்  பெற்றுள்ளதை  தெரியாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து விவசாயிகளும் பயிர்க்காப்பீடு பெறவேண்டும் என வலியுறுத்துகிற அரசு, அனைத்து விவசாயிகளுக்கும் வங்கியில் கடன் கிடைக்க ஏன் வழிவகை செய்யவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

அப்படி வழிவகை செய்யப்பட்டால் அனைத்து விவசாயிகளும் பயிர்க்காப்பீடு செய்வர். அப்போது பிரீமிய கட்டணமும் குறையும்.  பின்வரும் விசயங்களையும் அரசு கவனத்தில் கொண்டால் அனைத்து விவசாயிகளும் பயிர்க்காப்பீடு செய்ய முன்வருவர்.
►►    ஒவ்வொரு கிராமத்திலும் வானிலை அளவிடும் கருவிகளும் முறைகளும் வேண்டும்.
►►  வானிலை செய்திகள் அனைத்து விவசாயிகளையும் சென்றடையும்படி ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
►► பயிர் சேதாரத்தை  அளவிடும் முறைகளில் மாற்றம் செய்யவேண்டும். இதில்விவசாயிகளின் பங்களிப்பும் இருக்க வேண்டும்.
►►   காப்பீடு கட்டணத்தையும் உள்ளடக்கி கொள்முதல் விலையை  நிர்ணயம் செய்யவேண்டும்.
►► நஷ்டயீட்டை நிர்ணயிக்கும் முறைகளில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்.
►►பயிர்கள் மடிந்த பிறகு, உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கி, தொடர்ந்து பயிரிடுவதற்கான வழியை ஏற்படுத்தித் தரவேண்டும். மிகத் தாமதமாக இழப்பீடு வழங்குவது சரியல்ல,
►►  பஞ்சாப் முதல்வர் கூறியது போல, நீண்ட கால பயிர்க் காப்பீடு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
►►மேலேயே கூறியதுபோல அனைத்து விவசாயிகளுக்கும் வங்கியில் கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

கார்த்திக்

 

Issues: