அழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்
ஒரு காலத்தில் பணக்காரப் பெண்கள் மட்டும்தான் பியூட்டி பார்லர்களுக்குச் செல்வதில் பெரும் ஆர்வம் காட்டினார்கள். அதிலும் நகரத்துப் பெண்கள் அழகுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
தற்பொழுது கிராமத்துப் பெண்களும் பியூட்டி பார்லர்களுக்குச் சென்று தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அக்கறையோடு செயல்படுகிறார்கள்.
எனவேதான் அழகுக் கலைப் பயிற்சி பெற்றவர்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கேற்ற சிறந்த தொழில் இது.
அழகுக் கலை என்பதை ஓர் அறிவியல் எனலாம். முறையாக அழகுக் கலையைக் கற்பதற்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் இவற்றின் பாடங்கள் குறித்த அடிப்படை அறிவு தேவை. இந்த அழகுக் கலையை கற்பதற்கு இவையெல்லாம் தேவையா என சிலர் வினா எழுப்புகின்றனர். இதற்கான விளக்கம் கொடுப்பது அவசியமாகிறது.
பெண்களுக்கு வரும் முகப்பருவை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அது ஏன் வருகிறது என்பது பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால், காற்றில் இருக்கும் பாக்டீரியா, அவற்றின் இனப்பெருக்கம் பற்றிப் படிக்க நேர்கிறது. இது உயிரியல். சூரிய ஒளியை பற்றிப் படிக்கும்போது அது இயற்பியல்.
ஓசோன் மற்றும் அரோமா எண்ணெய்களைப் பற்றிப் படிக்கும்போது அது வேதியியல். இந்த அடிப்படை விஷயங்களை 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள் அறிந்திருப்பார்கள்.
எனவேதான் பல பயிற்சி நிறுவனங்கள் அழகுக்கலை பயில்வதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படை கல்வித்தகுதியாக நிர்ணயித் திருக்கின்றன.
மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால்தான் அழகுக்கலை பயிற்சிக்கான சான்றிதழ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியஅரசின் தொழிற்பயிற்சி நிறுவனமான மக்கள்கல்வி நிறுவனத்தில் அழகுக்கலை பயிற்சி பெறுபவர்களுக்கு 8ம் வகுப்பு படித்திருந்தாலே மத்தியஅரசின் சான்றிதழ் கிடைக்கிறது என்பது நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய விசயம்.
ஆர்வமும் ஈடுபாடும் பயிற்சிக்கான முதல் அடிப்படைத் தேவையாகும். இக்கலையில் பயிற்சி பெற, வயது வரம்பு தேவையில்லை. ஆனால் அரசுச் சான்றிதழ் பெற 8 அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை மேலேயே பார்த்தோம். சான்றிதழ் பெறுவதற்கான வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை ஆகும்.
பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களையோ, ஏற்கெனவே பயிற்சி பெற்ற மாணவிகளிடம் கேட்டோ ஒரு நல்ல அழகுக் கலைப் பயிற்சி நிலையத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
பயிற்சிகளில் பல வகைகள், பல நிலைகள் உள்ளன. குறுகிய காலப் பயிற்சி, இரு வாரப் பயிற்சி, 6 வாரப் பயிற்சி, 3 மாதப் பயிற்சி, 1 மாதப் பயிற்சி என பல உள்ளன.
இவற்றில் பேசிக், அட்வான்ஸ்ட், ஹை டெக் என்று பல நிலைகள் உள்ளன. பெண்கள் தமது விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட நிலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
பயிற்சி வகைகள்
ஒப்பனை, மெகந்தி டிசைனிங், நகப்பூச்சு, கூந்தல் அலங்காரம், ஃபேசியல், பிளீச்சிங், பெடிக்யூர், மேனிக்யூர், ஆயில் மசாஜ், ஹென்னா கண்டிஷனர், டையிங், வாக்ஸிங், திரெட்டிங், மணப்பெண் அலங்காரம் என ஏராளமான அழகு பராமரிப்பு முறைகள் உள்ளன. ஒவ்வொன்றையும் முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இவை அடிப்படை. இதிலேயே அட்வான்ஸ்ட், ஹை டெக் என்று போகும்போது சிறிது செலவு கூடும். அதற்கேற்ப வருமானமும் உண்டு.
அழகு நிலையம் தொடங்க
பயிற்சி முடித்தவுடன் உடனே ஆரம்பிப்பதை விட சில மாதங்கள் தரமான அழகு நிலையத்தில் பயிற்சி பெறுவது நல்லது. அனுபவரீதியாக, செய்முறையில் நிறையக் கற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் தன்னம்பிக்கையும் ஆர்வமும் அதிகரிக்கும். சருமங்களின் பல வகைகளையும் அவற்றில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்திருக்க வேண்டியது முக்கியம்.
அதேபோல தலைமுடியில் ஏற்படும் பிரச்சனைகளான தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகளையும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்திருக்க வேண்டும். அழகு நிலையத்தில் பயன்படுத்தப்படும் க்ரீம், சொல்யூஷன், பேக் போன்றவற்றைப் பற்றிய அறிவு தேவை. வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடிய வகையில், அறிவியல் ரீதியில் அழகு சிகிச்சை பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளரைக் கவரும் வகையில் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள நல்ல தரம் வாய்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற அழகுக் கலை நிலையத்தில் பயிற்சி பெற்று, டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெறலாம்.
வருமானம்
அழகுநிலையம் தொடங்குவதற்கான முதலீடு எவ்வளவு ஆகும் என்பது தேர்ந்தெடுக்கும் விதத்தைப் பொறுத்து அமையும். முதலில் அழகு நிலையம் தொடங்குவது பற்றியத் திட்டமிடல் தெளிவாக இருக்க வேண்டும். துவங்கப் போகும் இடம், அந்த இடத்தில் வசிப்போர் மற்றும் வாடிக்கையாளர் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதைப் பொறுத்தே பட்ஜெட் அமையும்.
கிராமப்புறம் என்றால் குறைவாகவும் நகர்ப்புறம் என்றால் சிறிது அதிகளவிலும் முதலீடு தேவைப்படும்.குறைந்தபட்சம்
ரூ5000 முதல், ரூ.25,000 வரை முதலீடு தேவைப்படும். லட்சக்கணக்கில் முதலீடு செய்து அழகுநிலையம் நடத்தி வருபவர்களும் உண்டு.
ஒவ்வொரு நாளும் புதிதாக வரும் அழகுக் கலை பற்றிய உயர்தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றைப் பயன்படுத்தினால் அதிகளவு வாடிக்கையாளர்களை பிடிக்கலாம். இது வருமானத்தையும் அதிகரிக்கச்செய்யும்.
சராசரியாக மாதம் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரம் வரை சுலபமாகச் சம்பாதிக்கலாம். மாதம் 50 ஆயிரம் சம்பாதிப்பவர்களும் உண்டு. வருமானம் என்பது வாடிக்கையாளர்களை தக்க வைப்பதைப் பொறுத்து அமையும்.
மக்கள் கல்வி நிறுவனம்
மத்தியஅரசின் அரசின் கீழ் இயங்கும்,மக்கள் கல்வி நிறுவனம் 4 மாத அழகுக் கலை பயிற்சியை அளித்து வருகிறது. இக்கல்வி நிறுவனத்தின் தனிச்சிறப்பே மிகக் குறைந்த கட்டணம்... தரமான பயிற்சி... என்பதுதான். இந்தக் கோர்ஸை மற்ற கல்வி நிறுவனங்களில் படித்தால் 75,000 ரூபாய் வரை செலவாகும்.
ஆனால் இந்நிறுவனம் மிகக்குறைந்த கட்டணத்தில் சிறப்பான பயிற்சியை வழங்கி வருகிறது.பயிற்சி முடிந்தவுடன் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. காலையிலும் மாலையிலும் வகுப்புகள் நடைபெறுகின்றன. அழகுக் கலை பயிற்சியை இந்தகல்வி நிறுவனத்தில் பெற்ற பல பெண்கள் நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
சகா