அனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது?
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்
என்றார் வள்ளுவர்.
விருப்பப்பட்டதை வாழ்க்கையில் அடைவதுதான் வெற்றியாகும்.
சாக்கரடீஸ் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஓர் இளைஞன் “உங்களைப்போல் வெற்றி பெற என்னென்ன அம்சங்கள் வேண்டும்” என்றான்.
சாக்கரடீஸ் அந்த இளைஞனை தன் அருகே வரச்சொல்லி திடிரென அவன் தலையை பிடித்து தண்ணீருக்குள் அழுத்தினார். மூச்சு திணறி தவித்து போன இளைஞன், சாக்ரடீசின் கையை தட்டிவிட்டு திமிறிகொண்டு தலையை வெளியே எடுத்து மூச்சு காற்றை இழுத்து விட்டான்.
“தண்ணீரில் முழ்கி இருந்த போது உன் சிந்தனை எங்கு இருந்தது” என்று சாக்ரடீஸ் கேட்டார். அதற்கு அந்த இளைஞன் “தலையை வெளியே எடுக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனைதான் இருந்து” என்றான். உடனே சாக்ரடீஸ் “அதே சிந்தனைதான் எனக்கும். விருப்பப்பட்ட செயலில் வெற்றி பெற வேண்டும். வெற்றிபெறும் வரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.
சாக்ரடீசின் இந்த கருத்தும் மேலே சொன்ன வள்ளுவரின் கருத்தும் ஒரே நேர்கோட்டில் உள்ளதை நாம் பார்க்கிறோம். மேலே வள்ளுவர் சொன்னது ஒரு தீர்க்கதரிசன வாக்கு.
எந்தச் செயலையும் நன்கு செய்ய வேண்டுமெனில் முதலில் அதை பற்றி சிந்திக்க வேண்டும். எதை சாதிக்க வேண்டுமோ அதை பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும்.
அதை சாதிப்பேன் என்று திண்ணமாக உறுதியாக எண்ண வேண்டும். இதுவே நற்செயலின் ரகசியம் ஆகும். இந்த ரகசியத்தில்தான் வெற்றியின் ரகசியமும் அடங்கியிருக்கிறது.
எந்த ஒரு தொழிலில் வெற்றி பெறுவதற்கும் உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது முக்கியமாகும். ஒரு சிற்பி கல்லில் இருந்து ஒரு சிற்பத்தை வடிக்கும் போது தன் உள்ளத்தை முழுமையாக ஒருமுகப்படுத்தி சிலையை சிறப்பாக வடிவமைப்பதில் முழுமையாக மூழ்கி செயல்படுகிறார். இதன் காரணமாக அற்புதமான சிலை கிடைக்கிறது.
இந்த ஒருமுகப்படுத்துதல் எல்லா தொழிலுக்குமே அவசியமாகும். கைத் தொழில் முதல் கம்ப்யூட்டர் வரை, விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை அனைத்து துறைகளுக்குமே மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை மிகவும் அவசியமாகும். அப்போதுதான் அத்துறைகளில் முன்னேற்ற நிலையை அடைய முடியும். மனதை ஒரு நிலைபடுத்தும்போது மன உறுதி ஏற்படும். மன உறுதி சாதிப்பதற்கான வல்லமையை தரும்.
மனம் ஒரு குரங்கு என்றான் ஓர் அறிஞன். அது ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு தாவிக் கொண்டே இருக்கும். இது மனத்தின் இயல்புதான். தாவிகொண்டே இருக்கும் மனத்தை ஒரே செயலில் குவிக்கும் போதுதான் செயல்பாடு வெற்றியடையும். சிதறிக்கிடக்கும் சூரிய ஒளியை ஒருங்கிணைத்து பஞ்சை எறிக்க செய்யும் குவி லென்ஸ் போன்றது ஒருமுகப்படுத்தப்பட்ட மனம்.
இந்த ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்தை கொண்டு எதையும் சாதிக்க முடியும். தொடர்ந்து தியானம் உள்ளிட்ட யோக பயிற்சிகளை மேற்கொள்ளும் போது மனதின் வலிமை கூடும்.
வீண்பேச்சு, நோக்கமற்ற செயல், புறம் கூறுதல், தேவையற்ற விவாதங்கள், வீண் கற்பனைகள் இவையெல்லாம் மனதின் சக்தியை வீணடிக்க செய்து மன ஒருமைப்பாட்டை குலைத்து மனவலிமையை குறைத்து விடும்.
இதற்கு மாறாக ஆக்க உணர்வுகளின் மூலம் மனோசக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க வேண்டும். நம்மால் முடிந்த வரையில் திட்டமிட்டு முயற்சி செய்ய வேண்டும். எப்போதும் தைரியத்தை இழக்க கூடாது.
அதனால்தான் சுவாமி விவேகானந்தர் கூறினார்:
“தைரியமாக இருங்கள், வலிமையாய் இருங்கள், உங்கள் விதியை படைப்பவர் நீங்கள்தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு தேவையான வலிமையும், உதவியும் உங்களுக்குள்ளேயே இருக்கிறது”.
சந்திரசேகர்