மின்சாரத்தையும், வேலைவாய்ப்பையும் வழங்கும் உடன்குடி அனல்மின் நிலையம்

தமிழ்நாடு மின் வாரியம், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது.இத்திட்டம் 9,000 கோடி ரூபாய் செலவில் அமைய இருக்கிறது. இந்த திட்டத்திற்கு, தமிழக அரசு, 2012 பிப்ரவரியில் அனுமதி வழங்கியது.
நிலம் கையகப் படுத்தும் பணி, சுற்றுச்சூழல்துறையின் அனுமதி வாங்கும் பணி, டெண்டர் விடும் பணி போன்றவை நிறைவுபெற்று மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
இத்திட்டம் தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் மின்சார வாரியம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும் தமிழகத்துக்கே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருப்பது மின்சாரம். கடந்த 6 ஆண்டுகளாக தமிழகம் மின்சார பற்றாக்குறையால் எப்படி தத்தளித்தது என்பது நமக்கு தெரியும். மின்வெட்டின் காரணமாக உற்பத்தி துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இப்பொழுதுதான் நிலைமை படிப்படியாக சீராகி மின்வெட்டு மிகவும் குறைந்திருக்கிறது.
இந்நிலையில் உடன்குடி மின்நிலையம் தனது முழு உற்பத்தியை அடையும் போது தமிழகம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழும். தொழில் உற்பத்தி மேலும் பெருகும். வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் முதலீடுகள் குவியும்.இதன் காரணமாக வேலைவாய்ப்பு பெருகி மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்.
குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இத்திட்டம் மிகுந்த வரப்பிரசாதமாக அமையும்.
மின் உற்பத்தி நிலையம் அமைக்கப் பட்ட பிறகு ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை குறைந்த செலவில் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்க செய்தி ஆகும்.

Issues: