இன்ஜினியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன்கள்!

தமிழகத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் பட்டதாரிகள் படித்து முடித்து விட்டு வெளியே வருகின்றனர். ரூ-.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை செலவு செய்து, கனவுகளோடு படித்து முடித்து விட்டு, வேலை கிடைக்காமல் வேலையில்லா பட்டதாரிகளாக திகழும் நிலை உருவாகி உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.
அப்படியே சிலருக்கு வேலை கிடைத்தாலும் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. லட்சங்களை இறைத்து நான்கு வருடம் பட்டப்படிப்பு படித்து முடித்து, வேலைக்கு சேரும் இன்ஜினியரிங் மாணவர்கள் வாங்கும் சம்பளம் எலக்ட்ரீசியன் சம்பளத்தை விட குறைவாக உள்ளது என்பது வேதனையான விஷயம். வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்தது.
அனுபவம் அற்ற ஒரு எலக்ட்ரீசியன் புதிதாக வேலைக்கு சேரும் போது கிடைக்கிற சராசரி சம்பள விகிதம் இந்தியாவில் ரூ.12 ஆயிரமாக உள்ளது. இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்து வேலைக்கு சேருவோருக்கோ சம்பள விகிதம் ரூ.5 ஆயிரமாக உள்ளது.
ஐ.டி., துறையில் பணிபுரியும் நபர் 8 வருட அனுபவத்திற்கு பிறகு பெரும் சம்பளம் ரூ.30 ஆயிரமாக உள்ளது எனவும், இதே காலகட்டத்தில் எலக்டிரிஷியன் ரூ. 26 ஆயிரம் சம்பளம் பெறுகிறார் எனவும் டீம்லீஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு கூறியுள்ளது.
எனினும் ஐடி துறையில் எல்லா இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கும் வேலை கிடைத்து விடுவதில்லை. வேலை கிடைக்காதவர்கள் வேறு துறையை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. அத்துறைகளில் ஐடி துறையை போல சம்பளம் இல்லை என்பதுதான் உண்மை.
மற்ற துறைகளில் இன்ஜினியர்களுக்கு கிடைக்கின்ற சம்பளத்தை வைத்துக் கொண்டு சிறந்த வாழ்க்கை வாழ முடியாத சூழலே உள்ளது. கடந்த 7 வருடங்களில் எலக்ட்ரிசியன், பிட்டர், வெல்டர், பிளம்பர் போன்றோரின் சம்பளம் பெருமளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக நகர் புறங்களில் இவர்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. நிறுவனங்களில் வேலை புரிவோர்கள் ஓய்வு நேரங்களில் பகுதி நேரமாகவும் வேலை செய்து சம்பாதிக்கின்றனர்.
இந்தியாவில் ஐடி துறை கடந்த 15 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. தேவைக்கும் அதிகமான ஆட்கள் உள்ளதால் குறைவான சம்பளத்திற்கே ஐடி நிறுவனங்கள் தற்போது பணியாட்களை நியமிக்கின்றன.
ஒரு ஐடி நிறுவனத்திற்கு 100 சாப்டவேர் இன்ஜினியர்கள் தேவை என்றால் உடனடியாக பெற்று விட முடிகிறது. அதே நிறுவனத்திற்கு 10 எலக்ட்ரீசியன் வேண்டும் என்றால் 2 நபர்களை பெறுவதே பெரும்பாடாய் உள்ளதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
எலக்ட்ரீசியன் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் ஐடிஐ படிப்பை பெரும்பாலும் மாணவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை என்பதுதான். லட்சங்களை செலவு செய்து இன்ஜினியரிங் படித்து விட்டால் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வாகி பல ஆயிரங்கள் சம்பளம் வாங்கலாம் என்ற எண்ணத்தில் ஐடிஐ படிப்பை மாணவர்கள் புறக்கணித்து விடுகின்றனர்.

Issues: